காந்தி 151: ‘பாபு’வின் பெண்குரல்

காந்தி 151: ‘பாபு’வின் பெண்குரல்
Updated on
1 min read

ச.ச.சிவசங்கர்

அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி

வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் எதிராக ‘அகிம்சை’ என்ற மாபெரும் ஆயுதத்தை ஏந்திய மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் அக்டோபர் 2 அன்று கொண்டாடப்படுகிறது. புகழையும் விமர்சனத்தையும் ஒருசேர எதிர்கொண்டவர் காந்தி. தனது லட்சியப் பயணத்தில் நல்ல ஆன்மாக்களை உடன் அழைத்துச் சென்றார். பால் பேதமின்றி அனைவரையும் சமமாகப் பாவிப்பது அவரது செயல்களில் முதன்மையானது. அவரது போரட்டங்களில் பெண்களின் பங்கு அளப்பரியது.

இந்தியா முழுவதும் மேற்கொண்ட பயணங்களின்மூலம் பெண்களின் நிலையைத் தெளிவாக அவர் அறிந்துகொண்டார். ஒருபுறம் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். மறுபுறம் சமூகப் பண்பாட்டுப் பின்னணியில் முடங்கிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும். 1918-ல் பம்பாய் பகினி சமாஜ் கூட்டத்தில் காந்தி இப்படிப் பேசினார்: “பெண்களின் மறுமலர்ச்சி என்று நாம் பேசும்போது என்ன அர்த்தத்துடன் பேசுகிறோம் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். வாழ்க்கை மங்கியிருந்தால்தான் மறுமலர்ச்சி இருக்க முடியும். அப்படியென்றால், அதற்கான காரணம் என்ன? அது எப்படி நேர்ந்தது என்பதை நாம் பரீசீலனை செய்ய வேண்டும்”.

பெண்களுக்கான காந்தி

“ஆண்களின் நடவடிக்கைகளில் அவர்களுக்கு முழு உரிமை இருப்பது போலவே, பெண்களின் நடவடிக்கைகளிலும் பெண்களுக்கு முழு உரிமை இருக்க வேண்டும். எழுதப் படிக்கத் தெரிந்தால்தான் இத்தகைய உரிமை உண்டு என்றிருக்க கூடாது” என்ற அவர், வரதட்சிணை கொடுக்கும் பழக்கத்தை முற்றிலும் எதிர்த்தார். வரதட்சிணை என்பது பெண்களை விலை பேசி விற்பனை செய்வதே தவிர, வேறொன்றும் இல்லை என்றார்.

“மனைவியைக் காட்டுமிராண்டிபோல் நடத்தலாம்; தனக்குத் தோன்றும்போதெல்லாம் அவர்களை அடிக்கக்கூடிய உரிமை இருக்கிறது என்ற நம்பிக்கை படித்த கணவர்களிடம்கூட இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்” என்பதை குடும்ப வன்முறை குறித்துப் பேசினார் காந்தி. மனைவியை அப்படி நடத்துவது காட்டுமிராண்டித்தனத்தின் அடையாளம் என்றும் குறிப்பிட்டார்.

இந்திய சமூகத்தில் பல்வேறு அடுககுகளில் இருக்கும் பெண்களின் அவல நிலையைக் கேள்வி கேட்டார். சாதி, மதங்களுக்குப் பின் இருக்கும் பெண்களின் ஒடுக்குமுறைகளைப் பற்றி இறுதிவரை விவாதித்தார். இன்றளவும் சமத்துவத்தை நோக்கிய தன்னுடைய நீண்ட பயணத்தில் எல்லோரையும் இணைத்துக்கொள்கிறார்; பாபு எல்லோருக்குமானவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in