Published : 29 Sep 2019 10:48 AM
Last Updated : 29 Sep 2019 10:48 AM

எல்லாம் நலமே 25: சிசேரியனை எப்படித் தவிர்க்கலாம்?

அமுதா ஹரி

கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்கள், பிரசவத்துக்கு ஆயத்தம் ஆவதற்கான காலம். இந்த நாட்களில் குழந்தையின் எடையும் அதனால் தாயின் எடையும் கூடும். கர்ப்பிணிகள் எப்போதும் இரவு வெகுநேரம் கழித்துச் சாப்பிடக் கூடாது. சீக்கிரமாகச் சாப்பிடுவது நல்லது.

முதல் பிரசவம் என்றால் மூன்று தடுப்பூசிகளும் இரண்டாம் பிரசவம் என்றால் இரண்டு தடுப்பூசிகளும் போடுவார்கள். நீரிழிவு இருக்கிறவர்கள் கர்ப்ப காலம் முழுவதும் கவனமாக இருக்க வேண்டும். பிரசவத்துக்காக மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயாராக வேண்டிய காலம் இது.

புரிதல் தரும் பயிற்சி

நன்றாகப் படித்து விவரம் தெரிந்தவர்களுக்குக்கூடப் பிரசவத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் கவலையும் பதற்றமும் இருக்கக்கூடும். இதைப் பற்றி மருத்துவரிடம் பேசித் தெளிவுபெற வேண்டும். பிரசவம், கர்ப்பகாலப் பராமரிப்பு போன்றவற்றுக்கு இப்போது தனிப் பயிற்சி வகுப்புகள் உள்ளன. கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து இந்த வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும்.

பிரசவத்தை ஒட்டிய அறிகுறிகள், பிரசவ வலி, கர்ப்ப காலப் பராமரிப்பு போன்றவை பற்றி இருவரும் தெரிந்துகொள்வது நல்லது. இத்தகைய பயிற்சிகளில் சத்தான உணவில் தொடங்கி பிரசவம் எப்படி நடக்கும் என்பது வரை பல்வேறு தகவல்கள் சொல்லித் தரப்படும். இதனால், கர்ப்ப காலத்திலும் பிரசவ காலத்திலும் கணவர், மனைவியைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

தகுந்த ஆலோசகர்களிடம் உடற் பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு அவற்றைச் செய்யலாம். பிரசவம் எளிதாக நடக்க இவை உதவும். மூச்சுப் பயிற்சியும் பிரசவத்துக்கு உதவும். தகவல் அறிவு, உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவற்றால் மனத்தளவில் வரக்கூடிய பதற்றம், எதிர்பார்ப்பு போன்றவை குறையும். உடலும் வலுவாகும். பிரசவத்தை எதிர்கொள்வது சுலபமாகும்.

பிரசவத்தை எளிதாக்கும் வேலைகள்

கடைசி மூன்று மாத கர்ப்ப காலத்தில் எந்தவிதமான அசௌகரியம் வந்தாலும் உடனே மருத்துரைப் பார்த்துவிட வேண்டும். தள்ளிப்போடக் கூடாது. ரத்தசோகை பிரச்சினை உள்ளவர்கள் பிரசவ காலத்துக்கு முன்பாகவே அதைச் சரிசெய்துவிட வேண்டும். பலர் தங்களுக்கு இயல்பாகப் பிரசவம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், உடலைச் சரியாகப் பராமரிக்காமல் தங்களுக்குத் தேவையில்லாமல் சிசேரியன் செய்துவிட்டதாக மருத்துவர்கள் மீது பழி போடுகிறார்கள்.

மருத்துவர்களின் முதன்மை நோக்கமே தாய்-சேய் இருவரையும் காப்பாற்றுவதுதான். எங்கள் பாட்டிக்கு நார்மல் டெலிவரிதான் நடந்தது என்கிறார்கள் சிலர். ஆனால், அந்தக் காலத்தில் பாட்டி செய்த வேலையில் பத்தில் ஒரு பங்குகூட நாம் செய்வதில்லை. குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளே இல்லாமல் போய்விட்டன. இன்னொருபுறம் சிசேரியன்தான் வேண்டுமென்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

தங்கள் மகளால் வலி தாங்க முடியாது என்று சொல்லும் பெற்றோர்களும், தன்னால் வலி தாங்க முடியாது என்று சொல்லும் கர்ப்பிணிகளும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். சிலர் வலியில்லாத பிரசவத்துக்காக முதுகுத்தண்டில் ஊசி போடுகிறார்கள். இந்த ஊசியைப் போடுவதால் வரும் நன்மைகள், பிரச்சினைகள் அனைத்தையும் தெரிந்துகொண்ட பின்னரே அது பற்றி முடிவெடுக்க வேண்டும்.

பிரசவ அறிகுறிகள்

1. வலி இருந்தால் நமக்கே தெரியும். உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். பொய் வலியா பிரசவ வலியா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
2 வலி இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீர்க்கசிவு மாதிரி வரலாம். பனிக்குடத்தில் இருந்து வரக்கூடிய இந்தக் கசிவைச் சிறுநீரை அடக்குவதைப் போல் அடக்க முடியாது. அதன் தன்மை பற்றிய வித்தியாசம் நமக்கே தெரியும். இப்படிக் கசிவு வந்தால் பிரசவத்துக்குக் குறிக்கப்பட்ட நாள் இல்லை என்றாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
3. குழந்தையின் அசைவு தெளிவாகத் தெரிய வேண்டும். அதுதான் குழந்தையின் உயிர்த் துடிப்பு. சில மணி நேரம் குழந்தையின் அசைவு தெரியவில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும். குழந்தை மூச்சுவிட சிரமப்படும்போதுதான் அசைவு குறையும். அம்மாவின் உடலிலிருந்து குழந்தையின் தொப்புளோடு இணைந்த கொடி மூலம்தான் குழந்தைக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்தும் ரத்தமும் குழந்தைக்குப் போகும். குழந்தை திரும்பிக்கொண்டே இருப்பதால் சில நேரம் இந்த நஞ்சுக்கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக்கொள்ளக்கூடும். அதனால் குழந்தையின் அசைவு தெரியவில்லை என்றதுமே மருத்துவரை அணுகுவது நல்லது.

நம்பிக்கை அவசியம்

அதுவரை எல்லாம் இயல்பாகப் போய்க்கொண்டிருக்கும்போது ஸ்கேனில் குழந்தையின் கழுத்தைத் தொப்புள்கொடி சுற்றி இருப்பது தெரியவந்தால் மருத்துவர்கள் நார்மல் டெலிவரிக்குக் காத்திருக்க மாட்டார்கள். குழந்தையையும் தாயையும் காப்பாற்ற சிசேரியனைத்தான் தீர்வாகத் தேர்ந்தெடுப்பார்கள். இதேபோல் பிரசவ காலத்தையொட்டி குழந்தையின் தலைதான் கீழ் நோக்கி இறங்க வேண்டும். கால் முதலில் வந்திருப்பதாகத் தெரிந்தாலும் குழந்தை வயிற்றில் குறுக்குவாட்டில் இருப்பதாகத் தெரிந்தாலும் சிசேரியன்தான் தீர்வு.

என்னிடம் வந்த ஒரு பெண்ணுக்குக் குழந்தையின் கழுத்தில் கொடிசுற்றி இருப்பது ஸ்கேனில் தெரியவந்தது. சிசேரியன் செய்யலாம் என்றால் ஆயிரம் முறை யோசித்தார்கள். நார்மல் டெலிவரிதான் வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஒரு வாரம் இப்படியே போயிற்று. கடைசியாக சிசேரியனுக்குச் சம்மதித்தார்கள். அதிர்ஷ்டவசமாக நஞ்சுக்கொடி கழுத்தைச் சுற்றி இறுக்கமாக இல்லாததால் கொஞ்சம் தாமதம் ஆனாலும் தாய் - சேய் இருவரையும் காப்பாற்ற முடிந்தது. கழுத்தில் இரு சுற்றும் காலில் இரு சுற்றுமாக நஞ்சுக்கொடி சுற்றியிருந்தது.
பிரசவ வலி வந்து குழந்தை காலையும் கையையும் ஆட்டி இருந்தால் கொடி இறுக்கமாகச் சுற்றியிருக்கும்.

நல்லவேளை, சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் இருவரையும் காப்பாற்ற முடிந்தது. அதனால், மருத்துவர் ஏன் சொல்கிறார், எதற்குச் சொல்கிறார் என்று கேட்டுத் தெளிவு பெற்ற பிறகே முடிவெடுக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே விசாரித்து மருத்துவரைத் தேர்ந்தெடுத்த பின் பாதியில் முடிவை மாற்றிக்கொள்ளக் கூடாது. தாய்மார்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் மருத்துவர் மேல் சந்தேகம் வந்தால் சிக்கலாக்கிவிடும். மருத்துவரிடம் விளக்கங்கள் கேட்கலாம்; ஆனால், சந்தேகப்படக் கூடாது. மருத்துவரும் தாய்மாரும் இணைந்து முயன்றால்தான் தாயும் சேயும் நலமாக இருக்க முடியும்.
(நலம் நாடுவோம்)

செப்டம்பர் 30, சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்:

பைபிளின் பெரும்பகுதியை லத்தீனுக்கு மொழிபெயர்த்த புனித ஜெரோமின் நினைவு நாளான செப்டம்பர் 30, ‘சர்வதேச மொழிபெயர்ப்பு தினமா’கக் கடைபிடிக்கப்படுகிறது. 1953-ல் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச மொழி பெயர்ப்பாளர்கள் சம்மேளனம் இதை நடத்துகிறது.

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x