Published : 29 Sep 2019 10:48 AM
Last Updated : 29 Sep 2019 10:48 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 25: வனப்பேச்சிக்கு அருகில் எரியும் தீபம்

பாரததேவி

சீனியம்மாளுக்கு வயிறு நிறைந்துவிட்டது. இருந்தாலும் ஆசை விடவில்லை. ஆனாலும், என்ன செய்வது? ஒரு நாள் உணவை ஒழிப்பதென்றால் இந்த வயிறு ஒழிப்பதில்லை. இரு நாளுக்கான உணவையும் ஏற்றுக்கொள்வதில்லை. சீனியம்மாள் தண்ணீர்கூடக் குடிக்காமல் சாப்பிட்டாள்.

சாப்பிட்டு முடித்துத் தண்ணீரைக் குடித்தபோது, அவளால் நடக்கவே முடியவில்லை. ஆற்றுக் குளியலுக்கும் மலைக்காற்றுக்கும் வயிறு நிறையச் சாப்பிட்டதற்கும் தூக்கம் அவள் இமைகளின் மேல் உட்கார்ந்துகொண்டு அழுத்தியது. சுற்றிலும் பார்த்தாள். நிறைய ஆட்கள் பந்திக்காகக் காத்திருந்தார்கள்.

மரத்தடியில் தூக்கம்

எல்லோரும் சாப்பிட்டு முடிக்கவே இன்னும் ஒரு நாழிகை ஆகும் என்று நினைத்தாள். ‘நம்ம அந்தா இருக்க அந்த மரத்துக்குப் பின்னால் செத்தபடுப்போம்’ என்று எண்ணியவள் தூர் பெருத்து இரண்டு ஆட்கள் மறைக்கக்கூடிய மரத்தின் மறுபக்கமாய்ப் போய்ப்படுத்தாள். அங்கே பந்தி தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.

சீனியம்மாள் கண்விழித்தபோது எங்கும் இருட்டு சூழ்ந்திருந்தது. அவள் பக்கத்தில் கலயத்தில் வைத்திருந்த கறியைக் காணோம். பகலில் வானமே தெரியாமல் இலைகளாலும் கிளைகளாலும் மூடி மறைந்திருந்த மரங்களெல்லாம் இப்போது அவள் கண்ணுக்கு ஆட்டம் போடும் பேயாகத் தெரிந்தன. ஏதேதோ விலங்குகளின் உறுமல் சத்தமும் கர்ஜனையும் கேட்க, சீனியம்மாள் அரண்டு வெலவெலத்துப்போனாள்.

எங்கும் இருட்டாக இருப்பது போதாதென்று இவள் கண்களுக்குள் இருட்டு பய்யப் பய்ய நுழைந்து பயமுறுத்தியது. அந்த நேரத்தில் சீனியம்மாளுக்குக் கறி ஆசையே விட்டுப்போனது. இங்கிருந்து எப்படித் தப்பிக்கப் போகிறோம் என்ற எண்ணம் மட்டும் அவள் நெஞ்சில் உளியாய் இறங்கிக்கொண்டிருந்தது.

தனிமை தந்த பயம்

ஊர் எந்தத் திசையில் இருக்கிறது என்றே அவளுக்குத் தெரியவில்லை. அப்போதெல்லாம் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை வைத்துத்தான் நேரத்தைக் கணிப்பார்கள். சீனியம்மாள் வானத்தை நோக்கினாள். வானமே தெரியவில்லை. தெரிந்த ஓரிரு இடமும் கருமை பூசிக்கிடந்தது. ஏதோ ஒரு பறவை அவள் முகத்தில் வந்து சடசடவென்று அடித்துவிட்டுப் போயிற்று. அவள் ஓவென்று அலறி தடுமாறி விழுந்தாள். யாரோ ‘கலகல’வென்று சிரிப்பதுபோல் கேட்டது. ஏதாவது பேயாக இருக்குமோ என்று நினைத்தவளின் நெஞ்சுக்குள் பயம் உறைந்து அவளை உலுக்கியெடுத்தது. அவள் ஓடிவந்து கோயிலுக்குள் உட்கார்ந்து கொண்டாள்.

ஒரு படி புடிக்கும் சிறிய கல்தூணில் வந்தவர்கள் போட்டுவிட்டுப் போன தீபம் முரட்டுத் திரியாதலால் இன்னமும் எரிந்துகொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் ஒரு சிறுத்தையும் இரண்டு கழுதைப் புலிகளும் போவதைப் பார்த்து அப்படியே நடுங்கி, சிலைக்குப் பின்புறம் போய் உட்கார்ந்துகொண்டாள். இவளை மறைக்க கூட முடியாமல் சிலை சிறியதாய் இருந்தது.

அந்தப் பயத்திலும் நடுக்கத்திலும் தான் யாரிடமாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் படுத்திருக்கலாம் என்று தோன்றியது. தண்ணித் தாகம் வேறு அவளை வாட்டியெடுத்து. கோயிலுக்குப் பின்னால் ஓடும் ஆற்று நீர் சலசலவென்று பெரிதாகச் சத்தத்தோடு ஓடிக்கொண்டிருந்தது. கோயிலிலிருந்து பத்து எட்டுத்தான். ஆனால், அவளால் எப்படிப் போக முடியும்? அப்படியே முடங்கிக் கிடந்தாள்.

மந்தையில் கூடிய ஊர்

மறுநாள் சீனியம்மாளைக் களைவெட்டுவதற்காகக் கூப்பிடப் போன சின்னத்தாயி அவள் வீடு பூட்டியிருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டுப்போனாள். வாசலும் தெளிக்காமல் கிடந்தது. உடனே அவள் நேற்று காலை தங்களுடன் கோயிலுக்கு வந்தது ஞாபகம் வர அவள் மறுபடியும் தங்களுடன் திரும்பி வந்தாளா என்று யோசித்துப்பார்த்தாள்.

தான் ஏறி வந்த வண்டியில் அவள் ஏறவில்லை என்பது உறுதியாக, ஊருக்குள் எல்லோரையும் மந்தைக்கு வரும்படி கூக்குரலிட்டாள். இவள் கூப்பிடுகிறாளென்று மந்தைக்கு வந்தவர்களுக்கு எல்லாம் கோபம் எகிறியது. “ஆமடி சின்னத்தாயி. ஆம்பளைக எல்லாம் காட்டுக்கு இறைக்கவும் உழுவவும் கிளம்பிக்கிட்டு இருக்காக. பொம்பளைக அடுப்புலயும் துடுப்பலயும் கிடந்து வெந்துக்கிட்டு கிடக்கோம்.

நீ எதுக்கு இப்ப அவசரமா மந்தைக்கு வரச் சொல்லுத?” என்று கோபமாகக் கேட்க சின்னத்தாயிக்கு அவர்கள் மீது ஆத்திரமாய் வந்தது. “வெறுமே காட்டுக்குப் போறதுக்குத்தேன் அலையுதுகளே தவுத்து, நம்மகூட நேத்து அக்கா சீனியம்மா கோயிலுக்கு வந்தாளே அவ திரும்பவும் நம்மகூடத் திரும்பி வந்தாளான்னு ரோசிச்சு பாத்தீகளா?” என்று கேட்க எல்லோரும் திகைத்துத்தான் போனார்கள்.

உன் வண்டியில் வந்தாளா, என் வண்டியில் வந்தாளா என்று ஒருவருக்கொருவர் கேட்டுவிட்டு யார் வண்டியிலும் அவள் வரவில்லையென்று தெரிந்ததும் திடுக்கிட்டுப்போனார்கள். “கோயிலுக்குப் போகையில மட்டும் ஒரு சொங்கடி சீலய கட்டிக்கிட்டு கையில பெரிய கலயத்தையும் வச்சிக்கிட்டு முந்தி ஏறுனாள்ல. அப்படிப் போல வாரேலயும் ஏற வேண்டியதுதான. அசமந்தம் புடிச்சாப்பல எங்கனயும் உக்காந்திருந்தா நம்ம என்ன செய்ய?” என்று கடுகடுத்தாள் ஆவுடை.

எங்கே சீனியம்மாள்?

“இனி அதப் பத்திப் பேசி புண்ணியமில்ல. பாவம் ஒரு நாதியுமில்லாதவ. இந்நேரத்துக்கு அவளுக்கு அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பின்னு இருந்தா இப்படி வனத்திலேயே விட்டுட்டு வருவாகளா? பாவம் அவ விடிய விடிய புலியும் சிங்கமும் கரடியும் அதோட பூச்சியும் பொட்டும் இருக்க வனத்தில் கெடந்து என்னமா பரிதவிக்காளோ. மொதல்ல அவ உசுரோட இருக்காளா இல்லையான்னே தெரியலையே” என்று சொல்லி அலை மோதினாள் சின்னத்தாயி. அவள் சொன்னதைக் கேட்ட ஊர் நாட்டாமையும், “ஆமாப்பா. சின்னத்தாயி சொல்வது சரிதேன்.

அப்புராணி சீனியம்மா உசுரோட இருக்காளா இல்லையான்னு தெரியல அவள ஏதாவது விலங்கு அடிச்சோ பூச்சி, பொட்டு கடிச்சோ செத்தான்னு வய்யி அந்தப் பாவம் நம்மளச் சும்மா விடாது. வாங்க நாலு பேரு நம்ம குல தெய்வம் கோயிலுக்குப் போயி பாத்துட்டு வருவோம்” என்று புறப்பட்டனர்.
இருண்டு வெறும் இருட்டுப் பூசிக் கிடந்த வனத்தை இரவெல்லாம் ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருந்த சீனியம்மாளுக்குப் பயமாயிருந்தது. இனிமே இந்த வனத்துக்கு விடிவு என்பதே கிடையாதோ? நம்ம மக்க மனுசங்களப் பாக்காம இப்படிச் சாவத்தேன் செய்யணுமோ என்று எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி ஏங்கிக் கிடந்தாள்.

அதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இவள் அதிர்ஷ்டமோ அல்லது கோயிலுக்குள் சிலையாக அமர்ந்திருக்கும் அந்த வனப்பேச்சி சாமியின் சக்தியோ அந்த கோயிலுக்குள் விலங்குகளோ பாம்புகளோ வரவில்லை. ஆனால், சீனியம்மாள் நினைத்ததுபோல் வனம் இருக்கவில்லை. இருட்டு மெல்ல வெளுத்துக்கொண்டிருந்தது. அங்கேயிருந்த மரங்களின் எண்ணிக்கைக்கும் மேலாக பலவிதப் பறவைகள் கிறீச்சிட்டவாறு நாலு திசைகளுக்குமாகப் பறந்தன.

தேடிவந்த நாட்டாமை

கொஞ்சம் தைரியத்தோடு சீனியம்மாள் கோயிலைவிட்டு வெளியே வந்தாள். விடியற்காலைக் குளிர் அவளை வாட்டியது. தான் உடுத்திருந்த பழைய சீலையால் உடலை மூடிக்கொண்டு கோயிலுக்கு அருகிலிருந்த வண்டிப்பாதையைக் கண்டு தன் ஊர்நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
பாதி தூரம் வந்திருப்பாள். அதற்குள் அவள் ஊர்க்காரரான நாட்டாமை, “ஏத்தா சீனியம்மா வந்துட்டயாத்தா? உன்னக் காணாம ஊரேவில்ல பதறிப்போச்சி” என்று சொல்லிக் கொண்டுவர அவர் குரலைக் கேட்டவள், “ஏ.. பெரியய்யா” என்று கத்திக்கொண்டே ஓடிவந்து அவர் மார்பில் சாய்ந்தவள், அப்படியே சற்று நழுவி கீழே விழந்தவள்தான். அவள் மூச்சு அடங்கிப்போனது. இப்போது வனப்பேச்சியின் அருகில் அவளுக்காக தீபம் ஒன்று எரிந்துகொண்டிருக்கிறது.

(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x