Published : 29 Sep 2019 10:48 AM
Last Updated : 29 Sep 2019 10:48 AM

வாழ்ந்து காட்டுவோம் 25:  திட்டங்கள் அனைத்தும் மக்களுக்காக

ருக்மணி

பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பயன்பெறும் வகையிலான அரசு நலத்திட்டங்களைப் பற்றியும் அவற்றைப் பெறுவதற்குரிய வழிமுறைகள், அணுக வேண்டிய அலுவலகங்கள் போன்றவற்றைப் பற்றியும் விளக்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். ஏராளமான திட்டங்கள் இருந்தாலும் பெருவாரியான மக்களைச் சென்றடையும் திட்டங்களுக்கே முன்னுரிமை கொடுத்துவந்தோம். திட்டங்கள் தவிர, நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பொதுவான அம்சங்களும் நிறைய உண்டு.

பெண்களையும் மூத்த குடி மக்களையும் ஆபத்திலிருந்து பாதுகாக்க, ‘காவலன் SOS’ என்ற செயலியைத் தமிழ்நாடு காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் அதிகாரிகளுக்கு விரைந்து தகவல் அனுப்பப்பட்டு அவர்கள் உரிய நேரத்தில் விரைந்து செயல்பட முடியும். அவசரத் தேவையின்போது கைப்பேசியை அதிரச் செய்தாலே போதும். காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கும் அவர்கள் இந்தச் செயலியில் பதிவுசெய்துள்ள மூன்று உறவினர்கள்/ நண்பர் களின் எண்ணுக்கும் இருப்பிடத் தகவலுடன் எச்சரிக்கை குறுஞ் செய்தியும் அனுப்பப்படும்

காக்கும் செயலி

‘KAVALAN Dial100’ என்ற செயலியைக் கைபேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டால், அவசர காலத்தில் 100 என்ற எண்ணை டயல் செய்யாமலேயே, இந்தச் செயலியைத் தொடுவதன் மூலம் நேரடி யாக மாநிலக் காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறையைத் தங்கள் இருப்பிடத் தகவல்களுடன் தொடர்பு கொள்ள இயலும். இந்தச் செயலியை அனைத்து ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் பயன்படுத் தலாம். அவசர உதவிக்கு SOS பட்டனைத் தொட்டாலே போதும். அழைப்பவரின் இருப்பிடம் உடனே GPS மூலம் அறியப்படும்.

அழைப்ப வரை உடனடியாகத் திரும்ப அழைக்கும் வசதியும் உள்ளது. அழைப்பவரின் நிகழ்நேரக் கண்காணிப்பு (Real Time Tracking) வசதியும் உள்ளது. அழைப்பவரின் இருப்பிடத் தகவல்களும் வரைபடமும் அவர்கள் இந்தச் செயலியில் பதிவுசெய்துள்ள வர்களின் எண்களுக்குத் தானாகவே பகிரப்படும். காவலன் SOS பட்டனைத் தொட்டதுமே உடனடியாக GPS இயங்க ஆரம்பித்துவிடும்.

அலைபேசி கேமரா தானாகவே 15 விநாடிகள் ஒலி, ஒளியுடன் கூடிய வீடியோவை எடுத்து, காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி விடும். இணைய இணைப்பு இல்லாத இடங்களிலும் தானியங்கி SMS எச்சரிக்கை மூலமாகச் செயல்படும். அதிர்வுத் தூண்டல் (Shake Trigger) வசதி யின் மூலம் தொடர்புகொள்ளலாம். ஆங்கிலம், தமிழ் என இருமொழி வசதி உள்ளது.

கட்டணமில்லா அழைப்பு மையம்

தமிழகத்தில் பொதுமக்களின் குறைகளைத் தொலைபேசி மூலம் நேரடியாகப் பதிவுசெய்யும் வகையிலான ‘அம்மா அழைப்பு மையம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுளது. இந்த மையத்துக்கு 1100 என்ற எண் தரப்பட்டுள்ளது. எந்த இடத்தில் இருந்தும் இந்த எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். இது கட்டணமில்லா அழைப்பு. ஏழை எளிய மக்களும் சாமானியர்களும் அரசுக்குத் தங்களது குறைகளைத் தெரிவித்து உரிய தீர்வுபெறும் நோக்கத்துடன் முதலமைச்சரின் இந்தத் தனிப்பிரிவு இயங்கிவருகிறது.

பொதுமக்களின் குறைகளை விரைந்து பெற்று, அவற்றைக் களைந்திடும் நோக்கில், கணினிவழித் தொலைபேசி அழைப்பு ஒருங்கிணைத்தல், குரல் பதிவு, பிரித்தறிதல் போன்ற புதிய தகவல் தொழில்நுட்ப வசதி களுடன் 24 மணி நேரமும் இது செயல்படும். முதல்கட்டமாக நாளொன்றுக்கு 15 ஆயிரம் அழைப்புகளை ஏற்கும் வகையில், 138 அழைப்பு ஏற்பாளர்களுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கேற்ப அழைப்பு ஏற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த மையத்தின் மூலம், பொதுமக்களிட மிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் விவரம், குறைகள் ஆகியவை கணினியில் பதியப்படும். பிறகு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு மின்னஞ்சல், தொலைபேசி, குறுஞ்செய்தி போன்றவை மூலம் தகவல் அனுப்பப்படும். அதுமட்டுமின்றி, எந்தத் துறையின் எந்த அதிகாரிக்கு அவரது குறைகள் குறித்த விவரம் அனுப்பப் பட்டுள்ளது என்ற விவரம், அழைத்தவருக்குக் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். மேலும், அவரது குறை குறித்துச் சம்பந்தப்பட்ட துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவர மும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

தடுப்பூசி நினைவூட்டல்

குழந்தைகளுக்குத் தடுப்புசி போடுவதற்கு குறுஞ்செய்தி மூலம் நினைவூட்டும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், அது குறித்த போதிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. செல்போன் மூலம் பதிவுசெய்தால் போதும்; தடுப்பூசி போடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே எஸ்.எம்.எஸ். மூலம் நினைவூட்டப்படும். இதற்கு National Vaccine Reminder என்று பெயர்.

செல்போனின் மெசேஜ் பாக்ஸில் Immunize என்று டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் குழந்தையின் பெயரை டைப் செய்து இடைவெளி விட வேண்டும். பின்னர் உங்கள் குழந்தையின் பிறந்த தேதியை டைப் செய்து 566778 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணத்துக்கு, Immunize latha 10-09-2015 என்று டைப் செய்து அனுப்பினால், உடனே குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று முதல்கட்ட தகவல் வரும். அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசியை எந்தத் தேதியில் போட வேண்டும் என்ற தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் உங்கள் செல்போனுக்கு வந்து சேரும். ஒவ்வொரு முறையும் இரண்டு நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தடுப்பூசி போடுவது குறித்து நினைவூட்டப்படும்.

- நிறைவடைந்தது
கட்டுரையாளர்,
மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.
தொடர்புக்கு: somurukmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x