

தொகுப்பு: முகமது ஹுசைன்
குழந்தைகளின் உயர்வுக்காகப் போராடும் சிறுமி
ஜெய்ப்பூரிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ஹின்ஸ்லா கிராமத்தைச் சேர்ந்தவர் பாயல் ஜாங்கிட் (17). தனது கிராமத்தில் நிலவிய குழந்தைத் திருமண முறை, குழந்தைத் தொழிலாளர் முறை ஆகியவற்றுக்கு எதிராக பிரசாரம் செய்தார். பாயலின் இந்தச் செயலைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு ‘பில் - மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை’ சார்பில் விருது அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த விருது வழங்கும் விழா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஐ.நா. துணைப் பொதுச் செயலர் அமினா ஜெ. முகமதுவிடம் இருந்து ‘சேஞ்ச் மேக்கர்' விருதை பாயல் பெற்றுக்கொண்டார்.
விருது பெற்ற பின் பாயல் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் பல பிரச்சினைகள் இருந்தன. குறிப்பாகப் பெண் குழந்தைகளை வெளியே அனுப்பிப் படிக்கவைக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்துவைத்து விடுவார்கள். எனக்கும் சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அப்போது, சமூக ஆர்வலர் ஒருவரை அணுகி என் தந்தையைச் சமாதானம் செய்தேன்.
அதையடுத்து, குழந்தைத் திருமணத்துக்கு எதிராகவும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பக் கோரியும் பல பேரணிகளையும் போராட்டங்களையும் நடத்தினோம். ஒவ்வொரு வீடாகச் சென்று அனைவரிடமும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். ஒவ்வொரு குழந்தைக்கும் தனது வாழ்க்கையை உயர்த்துவதற்கான வாய்ப்பைப் பெற்றோர் ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றார்.
முதல் பெண் கர்னல்
இந்திய ராணுவத்தின் முதல் பெண் கர்னலாக அருணாசலப் பிரதேசத்திலிருந்து போனுங் டோமிங் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இது குறித்து போனுங் கூறுகையில், “ராணுவத்தில் சேர வேண்டும் என்பது என் சிறுவயது கனவு. 13 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் சேர்ந்தேன். எப்போதும் பதற்றமும் பரபரப்புமாகவே இருக்கும். இந்த நிமிஷம் உயிருடன் இருப்பது மட்டும்தான் நிஜம். ஆனால், அதையெல்லாம் தாண்டி, ராணுவ உடையை அணியும்போது என் தேசத்துக்காக உழைக்கிறேன் எனும் பெருமை மனத்தில் நிற்கும்.
எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகுதான் ராணுவ கர்னலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். ராணுவத்தைப் பொறுத்தவரை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத்தான் ஆண், பெண் வேறுபாடு. ஆனால், சீருடை அணிந்துவிட்டால் நாட்டைக் காக்கும் ஒருவர் என்பது மட்டும்தான் மனதுக்குள் இருக்கும். நாட்டுக்காக உயிரைக் கொடுக்க துணிந்த பிறகு, ஆண் பெண் வேறுபாடு எதற்கு? எதிரிகளின் குண்டுகளுக்கோ, துப்பாக்கிகளுக்கோ ஆண், பெண் வேறுபாடு தெரியாது” என்றார்.
நீதிபதி இழைத்த அநீதி
ஹைதராபாத் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நூட்டி ராமமோகன் ராவும் அவரது குடும்பத்தினரும் மருமகளைத் துன்புறுத்திய வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. நீதிபதி நூட்டி ராமமோகன் ராவின் மருமகள் சிந்து சர்மா (30). மாமனார் நூட்டி ராமமோகன் ராவ், கணவர் நூட்டி வசிஷ்டா, மாமியார் துர்கா ஜெயலட்சுமி ஆகியோர் தன்னைத் தாக்கும் வீடியோவைத் தன் ட்விட்டர் பக்கத்தில் சிந்து வெளியிட்டார்.
இந்த வீடியோ ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சிந்து தன் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். வரதட்சிணைக் கொடுமையிலும் வன்கொடுமையிலும் ஈடுபட்ட சிந்துவின் கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் மீது ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் சிந்து வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சிந்து இந்த வீடியோவை வெளியிட்டார். நீதிபதியின் வீட்டிலேயே இதுபோன்ற அநீதிகள் நடப்பதைக் கண்டு சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கின்றனர். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவருகிறது.
பாதிக்கப்பட்ட பெண் கைது
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தா, அவரது ஆசிரமம் நடத்தும் சட்டக் கல்லூரியில் படித்த மாணவி அளித்த பாலியல் வன்கொடுமைப் புகாரின் பேரில் கடந்த செப்டம்பர் 20 அன்று கைது செய்யப்பட்டார். உடல்நிலை மோசமானதை அடுத்து, லக்னோ மருத்துவமனையில் சின்மயனந்த சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த பெண் பணம் பறித்தல் தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே இந்தப் பெண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு கொடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது. இதைத் தொடர்ந்து 29 அன்று அவர் கைதுசெய்யப்பட்டார். இந்தப் பணம் பறித்தல் வழக்கு, சின்மயானந்தா தொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
துணிந்து நின்ற பெண்
கேரள மாநிலத்தில் அரசுப் பேருந்து ஒன்று தவறான பாதையில் அதிவேகமாக வந்துள்ளது. தான் என்ன செய்கிறோம் என்ற விபரீதத்தை உணராத அந்தப் பேருந்து ஓட்டுநர், எதிர்புறத்தில் வரும் வாகனங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த இளம்பெண், வலது பக்கமாக ஏறி வந்த அந்தப் பேருந்துக்கு நேர் எதிராக நின்றார்.
தன் தவறை உணர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், பேருந்தைச் சரியான பாதையில் இயக்கும்பொருட்டு இடதுபக்கத்தில் பயணிக்க ஆரம்பித்தார். இளம்பெண்ணின் இந்தத் துணிச்சலான செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தவறான வழியில் வந்த அரசுப் பேருந்தை, அந்த இளம்பெண் வழி மறைக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.