Published : 29 Sep 2019 10:48 AM
Last Updated : 29 Sep 2019 10:48 AM

வாழ்வு இனிது: அதிசய தொட்டிப் பாலம்

மிது கார்த்தி

பரபரப்பான ஓட்டத்துக்கு நடுவே கிடைக்கிற ஒரு நாள் விடுப்பில் களைப்பாற உட்காரத் தோன்றுமே தவிர, வெளியே செல்லவே பலருக்கும் பிடிக்காது. அதுவே இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் விடுமுறை கிடைத்தால் எங்காவது செல்லத் தோன்றும். குழந்தைகளுக்குக் காலாண்டு விடுமுறை விடப்பட்டிருப்பதைக் காரணமாக வைத்து ஒருநாள் சுற்றுலாவுக்குத் திட்டமிடலாம். சுற்றுலாப் பட்டியலில் இந்த நான்கு இடங்களும் இருந்தால் இன்னும் நலம்.

அதிசய தொட்டிப் பாலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தொட்டிப் பாலம் ஆசியாவிலேயே மிகப் பெரியது. நீர்ப் பாசனத் திட்டத்துக்காக 1962-ல் தொடங்கப்பட்டு 1969-ல் கட்டி முடிக்கப்பட்டது. மாத்தூர் என்ற கிராமத்தில் கணியான்பாறை என்ற மலையையும் கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்துப் பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டுசெல்வதற்காக இரு மலைகளுக்கு நடுவில் இப்பாலம் கட்டப்பட்டது. தொட்டிப் பாலம் நீளவாக்கில் 1,204 அடியும் தரைமட்டத்திலிருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. 28 தூண்கள் இதைத் தாங்கி நிற்கின்றன.

பெரிய பெரிய தொட்டிகளாகத் தொகுக்கப்பட்டுத் தண்ணீர் செல்லும் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும் இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில் பாலம் எனவும் இது அழைக்கப்படுகிறது. இப்பாலத்தின் நடுப்பகுதிக்குச் சென்று கீழே பார்த்தால் ஆற்று நீரும் அதைக் கடக்க ஒரு சாலையும் அழகாகக் காட்சியளிக்கின்றன. ஆசிய அளவில் புகழ்பெற்ற இப்பாலம் திருவட்டாற்றிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

திக் திக் பரிசல் பயணம்

தர்மபுரி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலாத்தலம் ஒகேனக்கல். கர்நாடகத்தில் இருந்து கரைபுரண்டு ஓடிவரும் காவிரி ஆறு, வெண்புகையை விண்ணில் பாய்ச்சியபடி ஆற்றுநீர் அருவியாகக் கொட்டுவது இங்குதான். வார இறுதி நாட்களில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், வட மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை இங்கே அதிகம் பார்க்க முடியும். தர்மபுரியிலிருந்து பென்னாகரம்வரை நிலப்பகுதியிலும் பின்னர் மலைப்பள்ளத்தாக்கிலும் சாலை வழியாக ஒகேனக்கல் ஆற்றுப்பகுதிக்குச் செல்ல வழிகள் உள்ளன. இதன் தொடர்ச்சியாக ஓடும் காவிரி ஆற்றின் மறுபுறத்திலுள்ள எழில் காட்சிகளைப் பார்த்து ரசிக்கலாம்.

ஆற்றில் குளிப்பது அலாதி ஆனந்தம் தரும். ஆனால், தற்போது காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் கர்நாடகத்தி லிருந்து தண்ணீர் தொடர்ந்து வருவதாலும் குளியலுக்குத் தடை இருக்கலாம். ஒகேனக்கல் என்றாலே பரிசல் பயணம் தனி அடையாளமாகி விட்டது. பிரம்மாண்டமான பாறைகளுக்கு இடையே பரிசல் பயணம் மேற்கொள்வது மறக்க முடியாத அனுபவத்தைத் தரும். ஐந்து முதல் ஆறு நபர்கள் ஒரு பரிசலில் போகலாம். வேகமாக ஓடும் நீருக்கு எதிர்திசையில் பரிசலை ஓட்டுவது திகில் நிறைந்தது.

தேனியின் ஊட்டி!

மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி. மேகமலைக்கு அதுதான் காரணப் பெயராம். மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி பச்சைப்பசேல் என பரந்து விரிந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடு இந்த மேகமலை. தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது மேகமலை. அடிவாரத்தில் இருக்கும் சிறிய முருகன் கோயில் பிரசித்திபெற்றது. குன்னூர், ஊட்டியில் இருப்பதுபோல மேகமலையில் டீ, காபித் தோட்டங்கள் நிறைய உண்டு. ஆனால், வீடுகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பகல் நேர வெப்பநிலை சராசரியாக 12 டிகிரி செல்சியஸ். அதனால் எப்போதும் இதமான குளிர் நிலவும். சீசன் நேரம் என்றால் பகல் நேரத்தில்கூட ஸ்வெட்டர் தேவைப்படும். வழியெங்கும் ஆங்காங்கே குறுக்கிடும் அருவிகள் அழகு. எல்லாப் பருவ காலத்திலும் அருவிகளில் தண்ணீர் விழுவது தனிச்சிறப்பு. இரண்டு மலைகளுக்கு இடையே பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டிருக்கிறது மலையாறு அணை. திடீர் திடீரென யானைக் கூட்டங்களின் அணிவகுப்பு, காட்டு மாடு, மிகப் பெரிய அணில் என விலங்குகளின் நடமாட்டம் அதிகம்.
சின்னமனூரிலிருந்து நேராக மேகமலைக்குச் செல்லப் பேருந்து உண்டு. காரில் செல்வதாக இருந்தால், ஆண்டிப்பட்டியிலிருந்து கண்டமநாயக்கனூர் சென்று அங்கிருந்து மேகமலைக்குச் செல்லலாம்.

ஆழிப்பேரலையின் எதிரி

இந்தியாவின் மிகப் பெரிய அலையாத்திக் காடுகளில் ஒன்று பிச்சாவரம் காடுகள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகருக்குப் பெருமைசேர்க்கும் இந்த அலையாத்திக் காடுகள் இயற்கை அளித்த பெரும் கொடை.
கடற்கரையை ஒட்டியுள்ள இப்பகுதியில் பல கிலோ மீட்டர்வரை மோட்டார் படகில் சென்று அலையாத்திக் காடுகளைக் கண்டு ரசிக்கலாம். பிச்சாவரம் அலையாத்திக் காடுகள் வனச்சுற்றுலா மையமாக விளங்குகின்றன. ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்காட்டில் 18 வகையான மூலிகைத் தாவரங்கள் உள்ளன.
இந்தக் காடுகளில் உள்ள செடிகளும் குறுமரங்களும் கடல்நீருக்கு உள்ளேயே வளருவது இதன் தனிச்சிறப்பு.

தண்டுகளிலும் கிளைகளிலும் உள்ள துளைகளின் வழியாக இவை உயிர்க்காற்றை உறிஞ்சுகின்றன. சிறிய குழல்களைவெளியே நீட்டி, காற்றை உறிஞ்சுகின்றன. கடல்நீரில் உள்ள உப்புத்தன்மையை வடிகட்டி நல்ல நீரை மட்டும் எடுத்துக்கொண்டு அலையாத்திக் காடுகள் வளர்கின்றன. இயற்கை அள்ளி வழங்கிய அலையாத்திக்காடுகளை அலட்சியமாக நினைத்தவர்கள்கூட இன்று இவற்றைப் போற்றுகின்றனர். 2004-ல் தமிழகக் கடற்கரை மாவட்டங்களைத் தாக்கிய சுனாமி ஆழிப்பேரலையையே அலையாத்திக்காடுகள் தடுத்தன என்பதிலிருந்து இதன் வீரியத்தை உணரலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x