Published : 22 Sep 2019 10:53 AM
Last Updated : 22 Sep 2019 10:53 AM

பெண்கள் 360: குழந்தைகள் எதைப் பார்க்க வேண்டும்?

தொகுப்பு: முகமது ஹுசைன்

குழந்தைகள் எதைப் பார்க்க வேண்டும்?

சமீபத்தில் வெளியான வால்ட் டிஸ்னியின் இரண்டு விளம்பரங்கள் இந்தியாவின் பேசுபொருளாகி உள்ளன. ஆறு வயதுக் குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட அந்த விளம்பரங்கள், நமது குழந்தைகளின் இன்றைய நிலையை வெட்டவெளிச்சமாக்குகின்றன. ஒரு விளம்பரத்தில், “உன் தோழி சயின்ஸ் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டாளா?” என ஆறு வயது மகளிடம் அம்மா கேட்கிறார். அதற்கு அந்தக் குழந்தை, “தன்னைப் பற்றி அவள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள்? எனக்கு எதிராகச் சதி செய்ய முடியும் என்று அவள் நினைக்கிறாளா? நான் யார் என்பது அவளுக்குத் தெரியாது. என் பிடியிலிருந்து அவளால் தப்ப முடியாது. போதும், எல்லாம் போதும். சற்றே பொறுத்திருந்து பாருங்கள் அம்மா” என்று ஆவேசமாகச் சொல்கிறாள். இரண்டாம் விளம்பரத்தில், “மன்னித்துக்கொள். என் மகனால் இன்று உன்னுடன் விளையாட முடியாது” என்று பக்கத்து வீட்டுச் சிறுவனிடம் ஒரு பெரியவர் சொல்கிறார். அதற்கு அந்தச் சிறுவன், “மன்னிப்பு, வெறும் மன்னிப்பு. இது சாதாரண விஷயமல்ல அங்கிள். இது மிகவும் முக்கியமான விஷயம். இதற்கு உங்கள் மகன் பதில் சொல்லியே தீர வேண்டும். நமது நாடு தெரிந்துகொள்ள விரும்புகிறது. நமது நாடு பதிலைக் கோருகிறது. இது ஒரு அப்பட்டமான அநீதி” என்று உணர்வுப் பெருக்குடன் சொல்கிறான். முதல் விளம்பரத்தில் அந்தச் சிறுமி, ஒரு பிரபலத் தொலைக்காட்சித் தொடரின் வசனங்களைத் தனது சூழ்நிலையுடன் பொருத்தி, அந்த நாயகியின் உடல்மொழியில் பேசுகிறாள். இரண்டாம் விளம்பரத்தில் அந்தச் சிறுவன், பிரபலச் செய்தித் தொகுப்பாளரின் வசனங்களை, அவருடைய பாணியிலேயே பேசுகிறான். மென்நகைச்சுவையுடன் கடந்து செல்லும் இந்த விளம்பரங்கள், ஆறு வயதுக் குழந்தை, பெரியவர்களுக்கான தொடர்களைப் பார்த்தால் இதுவே நடக்கும் என்பதை உணர்த்தி முடிகின்றன. குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதும், குழந்தைகளாகவே வளர்வதும் நாம் வளர்ப்பதில் மட்டுமல்ல; அவர்கள் ரசித்துப் பார்க்கும் விஷயங்களிலும் உள்ளன.

புகாரளிக்கத் தயங்கும் பெண்கள்

தங்கள் மீழு நிகழ்த்தப்படும் பாலியல் தொல்லை குறித்துப் பெண்கள் தொடங்கிய #MeToo இயக்கம் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகப் பெண்களிடம் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பை ‘சர்வே மங்கி’ என்ற ஆய்வுக் குழு நடத்தியது. இந்த ஆய்வில் 5,000 பெண்கள் பங்கேற்றனர். புகார் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என 68 சதவீதத்தினர் நம்புகின்றனர். ஆனால், பணியிடத்தில் நடக்கும் பாலியல் சீண்டல்களைப் பற்றிப் புகாரளித்தால் தங்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று 55 சதவீதத்தினர் கூறியுள்ளனர். புகார் செய்வதால் தொல்லை கொடுத்தவரைக் காட்டிலும் தங்களுக்கு அவப்பெயர் வந்துவிடுமோ என்று இவர்கள் அஞ்சுகின்றனர். தங்களைவிட உயர் பதவியில் இருக்கிறவர்கள் தவறு செய்து, அவர்கள் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பார்களா என்ற அச்சம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தொடர்ந்து வேலையில் இருந்தால் தங்கள் வேலை பறிபோகுமோ என்ற பயத்தாலும் புகார் அளிக்காமல் தவிர்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

நீதி கிடைக்குமா?

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகப் பெண் ஒருவர் 2017-ல் புகார் அளித்தார். இந்த வழக்கில் செங்கர் 2018-ல் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்துவரும் நிலையில், கடந்த ஜூலை மாதம் அந்தப் பெண் சென்ற கார் மீது லாரி மோதியதில் அந்தப் பெண்ணின் உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த அந்தப் பெண், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அந்த விபத்தைத் திட்டமிட்டு ஏற்படுத்தியதாக செங்கர் மீது தனியே கொலை வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைபெற்று வருவதால், அவரிடம் கேமரா மூலம் வாக்குமூலம் பெற அனுமதிக்க வேண்டும் என்று இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்ளும் நீதிபதி தர்மேஷ் சர்மா டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். இதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக நீதிமன்ற வளாகம் அமைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை வீடியோவாகப் பதிவுசெய்யும் நடைமுறை கடந்த புதன்கிழமை தொடங்கி, வெள்ளியன்று நிறைவுபெற்றது.

பனையேறும் சேச்சி

கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பன்னியோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா (33). இவருடைய கணவர் பனையேறும் தொழிலாளி. சாலை விபத்தில் அவர் படுகாயமுற்றதையடுத்து, குடும்ப வறுமையைப் போக்க ஷீபா பனையேறும் பணியில் ஈடுபட்டுவருகிறார். தொடக்கத்தில் இந்தத் தொழிலைக் கற்றுக்கொள்வது சற்றுச் சிரமமாக இருந்தபோதும், விடாமுயற்சியால் கற்றுக்கொண்டதாக ஷீபா கூறுகிறார். வளர்ப்பு நாயுடன் விளைநிலங்களுக்குச் சென்று, கள் இறக்கி நாளொன்றுக்கு 350 ரூபாய்வரை அவர் சம்பாதித்து வருகிறார். உயரத்தைப் பொருட்படுத்தாமல் தென்னை மரங்கள், ரப்பர் மரங்களிலும் ஏறி தனக்குக் கொடுக்கப்படும் பணிகளைச் செய்துவருகிறார். தொடக்கத்தில் பல காரணங்களைச் சொல்லி இவரது முயற்சிக்குச் சிலர் முட்டுக்கட்டை இட்டனர்; தற்போது பலரும் அவரை விரும்பிப் பணிக்கு அழைக்கின்றனர்.

பேரிடர் படையில் மகளிர்

இயற்கைப் பேரிடர், மனிதர்களால் ஏற்படும் பேரிடர் போன்றவற்றில், நிலைமையைச் சமாளிக்கவும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் 2006-ல் ‘தேசியப் பேரிடர் மீட்புப் படை’ உருவாக்கப்பட்டது. இதன் படைப்பிரிவுகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இதில் புதிதாக நான்கு படைப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன. ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி ஆகிய இடங்களில் செயல்பட உள்ள அந்தப் பிரிவுகளில் பெண்களைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் எஸ்.என்.பிரதான் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x