

ஏழு வயதில் ‘ஒரு குருவின் சாபம்’ என்ற ஒரு அணா குட்டிப் புத்தகத்தில் என் வாசிப்பு தொடங்கியது. தமிழ் படிக்கத் தெரிந்தவுடன் கதைகளைப் படிக்கச் சொன்னவர் என் பாட்டி. அவர்தான் எங்களுக்குப் புராணக் கதைகளைச் சொல்லி வாசிப்பின் அவசியத்தை உணர்த்தினார்.
குக்கிராமப் பள்ளியில் குட்டிக்கதைப் புத்தகங்கள் வரிசையில் ‘விக்ரமாதித்தன்’ ‘பரமார்த்த குரு’ போன்றவை அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலமாரியைத் திறந்தவுடன் நாசியை நிறைத்த வாசம் 70 வயதிலும் நெஞ்சில் நீங்காமல் உள்ளது. அந்தக் காலத்தில் தபால்காரர் கொண்டுவரும் வார இதழ்களை வாங்கிப் படிக்க ஊர் தலைவர் வீட்டுத் திண்ணையில் தவமாய்த் தவமிருந்திருக்கிறோம்.
உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது நூலகரே வகுப்புக்கு வந்து புத்தகங்களைக் கொடுப்பார். அவை பெரும்பாலும் சுயசரிதைகளாகவோ பயணக் கட்டுரைகளாகவோ இருக்கும். வகுப்பில் இருக்கும் எல்லா மாணவிகளின் புத்தகங்களையும் வாங்கி அந்தப் புத்தகங்களின் சுருக்கத்தையாவது படித்துவிட்டுக் கொடுத்துவிடுவேன். அப்போதுதான் மகாகவி பாரதி என் மனத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். பின்னர் ஆசிரியர் பயிற்சியின்போது ‘பாஞ்சாலி சபதம்’, ‘வீரசிவாஜி உரை’, ‘பாரதியாரின் கவிதைகள்’ போன்றவற்றைப் படிப்பதுடன் மாணவர்களுக்கு நாடகமாக்கிக் கொடுப்பதையும் வழக்கமாகிக்கொண்டேன்.
என் வாசிப்பு ஆர்வத்தைக் கவனித்த என் சகோதரர் எனக்காக நிறைய புத்தகங்களை வாங்கிக்கொடுத்தார். புதுமை எழுத்தாளர் ‘ஜெயகாந்தன்’ அறிமுகமானது அந்த வகையில்தான். அவரது புத்தகங்கள் சாமானியர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டும். குறிப்பாக ‘யுகசந்தி’, ‘புதுச் செருப்பு கடிக்கும்’ ஆகியவை விளிம்பு நிலையில் உள்ள பெண்களின் நிலையைச் சொன்னவை. எழுத்தாளர் தி.ஜானகிராமனின் எழுத்துகள் பாட்டாளிகளின் வாழ்வைக் கதைகளாகச் சொல்லும். இவர்களின் வரிசையில் பிரபஞ்சன், ஜெயமோகன் ஆகியோர் என் வாசிப்பு வட்டத்தைப் பெரியதாக்கிக்கொண்டே சென்றனர்.
பெண்கள் இந்தச் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் வார்த்தைகளால் சொல்லிமாளாதவை. அதுபோன்ற சூழ்நிலையில் வாசிப்புதான் என்னை உயர்த்திப்பிடித்தது. பெரும்பாலான நாட்கள் வாசிப்பில்தான் கழிந்தன.
இப்போது என் பேரக்குழந்தை களுக்குக் கதைசொல்லும் பாட்டியாக இருக்கிறேன். தூக்கம் வராத இரவுகளில் எனக்குத் துணையாக இருப்பவை புத்தகங்களே. வாசிப்பை நான் நேசிக்கிறேன், சுவாசிக்கிறேன். அதனால்தான் உயிர்ப்புடன் இருக்கிறேன்.
- விஜயலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, சென்னை.