Published : 22 Sep 2019 10:46 AM
Last Updated : 22 Sep 2019 10:46 AM

பெரியார் 141: காலத்தின் தேவை அவர்

ஓவியா அன்புமொழி

சிலரது அறிமுகம் நம் வாழ்க்கைப் பாதையைப் புதிதாக வடிவமைத்துவிடும். தந்தை பெரியாரும் அப்படியொரு பாதையைத்தான் எனக்குப் போட்டுத் தந்தார். திராவிடர் இயக்கத்தில் ஈடுபாடுகொண்டிருக்கும் என் பெற்றோர் வாயிலாகத்தான் பெரியார் எனக்கு அறிமுகமானார். அதற்குப் பிறகுதான் இந்தச் சமூகத்தின் கற்பிதங்களைப் பற்றிய என் பார்வை மாறியது.

மூடநம்பிக்கைகளால் புரையோடிப் போயிருந்த சமூகத்தில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தால் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் பெரியார். அறியாமையில் உழன்றுகொண்டிருந்த மக்களுக்காகத் தன் இறுதிமூச்சுவரை போராடிய தலைவர் அவர்.

கல்வியும் சுதந்திரமும் தேவை

பெரியார் என்ன செய்தார் என்பதைவிட என்ன செய்யவில்லை என்றுதான் கேட்க வேண்டும். குறிப்பாகப் பெண் விடுதலையில்தான் சமூகத்தின் விடுதலை அடங்கியுள்ளது என வலியுறுத்தியவர். கற்பு, ஒழுக்கம், புனிதம் ஆகிய அடிமைச்சிறையில் பெண்கள் பூட்டி வைக்கப்பட்டிருந்த காலத்தில் மிகத் துணிச்சலாக, ‘பெண்மையை அழித்தொழியுங்கள். அதுதான் உங்களை அடிமையாக இருக்கச்செய்கிறது. அதை ஒழித்தால்தான் பெண் விடுதலை சாத்தியம்’ என்று உரக்கச் சொன்ன ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. ‘கல்வியும் சுதந்திரமும்தாம் பெண்களுக்குத் தேவை. அவர்களிடம் உள்ள கரண்டியைப் பிடுங்கிவிட்டுக் கல்வியைக் கொடுங்கள்’ என பெரியார் அன்று சொன்னது இன்றைக்கும் பொருந்தும்.

வேங்கையை எழுப்பி அதன் நகங்களை ஞாபகப்படுத்தியதுபோல் பெண்ணினத்தை விழிப்புணர்வு அடையச் செய்து அறியாமையை நீக்கி, சுயமரியாதை ஊட்டிய தலைவர் அவர். எந்தக் காலத்திலும் ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது. பெண்களுக்கான விடுதலையைப் பெண்கள் நினைத்தால்தான் பெறமுடியும் என்றார் பெரியார். ஆனால், இந்தச் சமூகம் பெண்களைக் காட்சி பொருளைப் போல் வைத்து வணிகத்தை வளர்க்கிறது. இதன் அறியாமையில் இருந்து எப்போது மீளப்போகிறோம்?

மூடத்தனத்தை வேரறுப்போம்

பெண்கள் இன்று எவ்வளவோ படித்துப் பெரிய பதவியில் இருந்தாலும் சில சமூகக் கட்டமைப்புகளில் இருந்து வெளிவர அவர்கள் முயலவில்லை. இது நிச்சயமாக நம் அடுத்த தலைமுறையைப் பாதிக்கும். அதனால்தான், காயத்துக்கு ஏற்ற மருந்து, போராட்டத்துக்கு ஏற்ற ஆயுதம், வாழ்வியலுக்கு ஏற்ற சிந்தனை வேண்டும் என்றார் பெரியார்.

ஆண்மை எப்படி ஒழிய வேண்டுமோ அதுபோல் பெண்மையும் ஒழிந்தாக வேண்டும். பெண்மை என்ற மாய பிம்பத்தை வைத்து இன்றும் பெண்கள் மீதான வன்முறையும் உடல் அரசியலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதன் விளைவுதான், “பெண்களில் 30 சதவீதத்தினரே பெண்மையோடு இருக்கிறார்கள்” எனச் சிலரைப் பேசவைக்கிறது. நம் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பதில் கூறாமல் இருக்கப்போகிறோம்? நமக்கான ஆயுதமே பெரியார். அவர் இன்றைக்கு மட்டுமல்ல; இன்னும் 100 ஆண்டுகளுக்குத் தேவைப்படுவார்.

மூத்திரப்பையைச் சுமந்த நிலையிலும் நம் உரிமைகளுக்காகவும் நாம் தலைநிமிர்ந்து சுயமரியாதை வாழ்வு வாழவும் பெண்ணை அடிமைப்படுத்திய அத்தனை கட்டமைப்புகளை உடைத்து, ‘உங்களுக்கான தேவையை நீங்களே தீர்மானியுங்கள்’ என்று சொன்ன பெரியார்தான் இன்றைய பெண்களின் தேவை. அவரது 141-ம் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் நாம் செய்ய வேண்டியதெல்லாம் பெரியாரை அடுத்த தலைமுறைக்குச் சரியான முறையில் கொண்டுசெல்வதே. பெண்களிடம் புகுத்தப்பட்டிருக்கும் மூடத்தனத்தை, சாதியை, மதத்தை, அறியாமையை வேரறுப்போம். அதுவே அவரது கனவு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x