Published : 22 Sep 2019 10:43 AM
Last Updated : 22 Sep 2019 10:43 AM

வானவில் பெண்கள்:மாமியார் போட்டுத்தந்த பாதை

க்ருஷ்ணி

மழை தூறிக்கொண்டிருந்த அந்தக் காலை வேளையில் புடவைகளை மடிப்பதும் ஒளிப்படம் எடுப்பதுமாகப் பரபரப்பாக இருந்தார் ஷண்முகப்ரியா. அவ்வப்போது செல்போனைப் பார்த்துக்கொண்டார். ஏராளமான அழைப்புகளாலும் வாட்ஸ்அப் செய்திகளாலும் அது நிரம்பியிருந்தது. “எல்லாம் வாடிக்கையாளர்களிடமிருந்துதான்” எனச் சிரிக்கிறார். நம்மில் பலர், ‘தமிழனாக இருந்தால் ஷேர் செய்யுங்கள்’ ரகக் குறுஞ்செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பிக்கொண்டிருக்க, ஷண்முகப்ரியாவோ வாட்ஸ்அப் மூலம் வியாபாரம் செய்து மாதந்தோறும் லட்சங்களைச் சம்பாதித்துவருகிறார்.

நமக்கோ நமக்குத் தெரிந்தவர்களுக்கோ நடக்கிற கதைதான் ஷண்முகப்ரியாவுடையது. ஆனால், அதை அவர் எதிர்கொண்ட விதத்தில்தான் வித்தியாசப்பட்டு, வெற்றிபெற்றிருகிறார். சென்னை கோவூரைச் சேர்ந்த ஷண்முகப்ரியா, திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரத்தில் பிறந்தவர். சென்னையில் படித்துமுடித்து இங்கேயே பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவளப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார்.

நம்பிக்கை தந்த மனுஷி

2013-ல் திருமணம். புகுந்த வீடு சென்னை என்பதால் வேலைக்குச் செல்ல எந்தத் தடையும் இல்லை. அவர் கருவுற்றிருந்தபோது அவருடைய கணவர் ஹரிக்கு டெல்லிக்கு வேலை மாற்றம் வந்தது. மாமியார் லட்சுமியின் உடல்நலமும் பாதிக்கப்பட ஓராண்டு வீட்டிலிருந்தபடியே வேலையைத் தொடர்ந்தார். குழந்தை பிறந்த பிறகு நிலைமையைத் தனியாகச் சமாளிக்க முடியாததால் வேலையை விட்டுவிட்டார். இடையே மாமியாரும் இறந்துவிட, கணவருக்கு மீண்டும் சென்னைக்கே வேலை மாறியது.

“என் கணவருக்கு நான்கு வயதானபோது அவங்க அப்பா இறந்துவிட்டார். எங்க மாமியார்தான் தனி ஆளா நின்னு இவரையும் என்னோட ரெண்டு நாத்தனார்களையும் வளர்த்து ஆளாக்கினாங்க. எங்க மாமியார் காலைல நாலு மணிக்கு எழுந்து ராட்டையில நூல் சுத்துவாங்களாம். அப்புறம் புடவைகளை சைக்கிளில் எடுத்துக்கிட்டு, சுத்தியிருக்க கிராமங்களுக்குப் போய் வித்துட்டு வருவாங்களாம். இப்படி அப்பப்போ தன் அம்மாவோட பெருமையை என் கணவர் சொல்வார். முப்பது வருஷத்துக்கு முன்னால ஒரு பெண் தனியா நின்னு வியாபாரத்தைக் கவனிச்சு, குடும்பத்தையும் கரையேத்தி இருக்காங்கன்னா நம்மாளும் முடியும்னு அப்போதான் தோணுச்சு” என்று சொல்லும் ஷண்முகப்ரியா, அடுத்த நாளே செயலில் இறங்கினார்.

வாட்ஸ் அப்பால் கிடைத்த வருமானம்

சென்னை பாரிமுனையில் துணிகளை மொத்த வியாபாரம் செய்யும் கடைக்குச் சென்றார். 20 ஆயிரம் ரூபாய்க்கு நைட்டி, சுடிதார் போன்றவற்றை வாங்கினார். அதுவரை அக்கம்பக்கத்து வீடுகளில் யாருடனும் பேசாதவர், தான் துணிகளை விற்பதாகச் சொன்னார். முதல் நாள் சிலர் வந்து பார்த்ததுடன் ஆடைகளை வாங்கிச் சென்றனர். அடுத்த நாளும் சிலர் வந்தனர். எப்படியும் அனைத்தும் விற்றுவிடும் என நினைத்த ஷண்முகப்ரியாவின் நினைப்பு மூன்றாம் நாளில் தகர்ந்தது. வந்து பார்த்தவர்கள், “புதுசா ஏதும் இல்லையா, கடையைவிட விலை அதிகமா இருக்கே, புது டிசைன் வந்தா சொல்லுங்க” என்றபடி எதையும் வாங்காமல் கிளம்பினர். 20 ஆயிரம் ரூபாய் அவ்வளவுதானா என நினைத்தார். பிறகு தன் நிலையைத் தோழி ஒருவரிடம் சொல்ல, அவர் ஆடைகளைப் படமெடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பச் சொல்லியிருக்கிறார். படங்களைப் பார்த்துவிட்டு அவர் சிலவற்றை வாங்கியதுடன் தன் தோழிகளுக்கும் பரிந்துரைத்திருக்கிறார்.

“வாட்ஸ் அப்பில் படங்களை அனுப்பி அவற்றை கூரியரில் அனுப்புவது எனக்குப் புதுமையான அனுபவமாக இருந்தது. ஆனா, எல்லாமே விற்றுவிட்டதில் துணிந்து ஐம்பதாயிரத்துக்கு ஆடைகளை வாங்கினேன்” என்பவர் அதற்குப் பிறகு புடவைகளுக்காகத் தனி வாட்ஸ் அப் குரூப்பைத் தொடங்கினார். ஃபேஸ்புக்கில் ‘யுனிக் த்ரெட்ஸ்’ (Unique Threads) என்ற தனிப் பக்கத்தைத் தொடங்கினார். “அதைப் பார்த்துட்டுத் தங்களை ரீடெய்லரா சேர்த்துக்க முடியுமான்னு மூணு பேர் கேட்டாங்க. எனக்கு ஆச்சரியமாகிடுச்சு. இனி இதுதான் என்னோட பாதைன்னு அந்த நிமிஷமே முடிவெடுத்தேன்” என்று சொல்லும் ஷண்முகப்ரியா அதற்குப் பிறகு அசுர வேகத்தில் வேலைசெய்யத் தொடங்கினார்.

விரிவடைந்த வாடிக்கையாளர் வட்டம்

முகநூல் பக்கத்தில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சேர, அவர்களுக்கு ஏற்ற வகையில் புது ரக ஆடைகளை வாங்கினார். ஒரே நிறத்திலும் டிசைனிலும் மொத்த விற்பனையில் அதிக எண்ணிக்கையில் புடவைகள் கிடைக்காத நிலையில் உற்பத்தியாளர்களைச் சந்தித்து அவர்களிடமிருந்தே புடவைகளைப் பெற்றார். அதற்காக ஆந்திரா, டெல்லி, வாராணசி, ஜெய்ப்பூர் எனப் பல்வேறு இடங்களுக்குச் சென்றார். பாரம்பரிய முறையில் வடிவமைக்கப்பட்ட புடவைகளை வாங்கி, விற்பனை செய்தார்.
“கடைகளில் கிடைக்காதது என்கிட்ட கிடைக்கும் என்ற நம்பிக்கையைத்தான் முதலில் சம்பாதித்தேன்” என்று சொல்லும் ஷண்முகப்ரியா, இன்றுவரை அந்தப் பெயரைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். புடவைகளோடு அவற்றுக்கு மேட்சிங்கான தோடு, வளையல் போன்ற வற்றையும் விற்பனை செய்கிறார். விதவிதமான ஃபேஷன் நகைகள் செய்ய எடுத்துக்கொண்ட பயிற்சி அவருக்குக் கைகொடுத்தது. வாடிக்கையாளர்களின் வட்டம் இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளுக்கும் நீண்டது.

கை கொடுக்கும் கை

2014-ல் இந்தத் தொழிலைத் தொடங்கினார் ஷண்முகப்ரியா. அப்போது கைக்குழந்தையாக இருந்த மகனைப் பார்த்துக்கொள்ள ஒருவரை உதவிக்கு வைத்துக் கொண்டு, கணவரின் துணையோடு அனைத்தையும் தனியாகச் சமாளித்தார். பின்னர் உதவிக்கு இருந்த பெண்ணை நிறுவனத்தின் முதல் ஊழியராக வேலைக்குச் சேர்த்திருக்கிறார் ஷண்முகப்ரியா. அதற்கடுத்து ஏழு பேரை வேலைக்குச் சேர்த்தார். அவர்களில் ஒருவர் மட்டுமே ஆண்.

“நான் இந்தத் தொழிலில் தயங்கி தயங்கி நின்னப்ப துணிக்கடை உரிமையாளர்கள் அபிஷேக், சாரதா ரெண்டு பேரும் என்னை நம்பி லட்சக்கணக்கான மதிப்பில் பொருட் களைத் தந்து உதவினாங்க. அந்த மாதிரி என்னால உதவ முடியுதோ இல்லையோ ஏழு பேருக்கு வேலை தர முடிந்தது” எனச் சிரிக்கும் ஷண்முகப்ரியாவுக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது ஒரு வாட்ஸ் அப் அழைப்பு.

தேடிவந்த விருது

2018-ல் புதிய எண்ணில் இருந்து அழைப்புவர, வேண்டாத அழைப்பாக இருக்கும் என நினைத்து அதைப் புறக்கணித்தார். பிறகு, ‘நாங்கள் கலிஃபோர்னியா விலிருந்து அழைக்கிறோம். வாட்ஸ் அப் மூலம் நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவதை ஆவணப்படுத்த விரும்புகிறோம்’ என்று குறுஞ்செய்தி வர, அதைக் கணவரிடம் தெரிவித்தார். முறைப்படி மின்னஞ்சல் அனுப்பினால் மட்டுமே நம்ப முடியும் என அவர் சொல்ல, அதன்படி மின்னஞ்சலும் வந்தது. அதைத் தொடர்ந்து விருதுகளும் குவிந்தன. ஷண்முகப்ரியாவின் இந்த வெற்றிப் பயணம் குறித்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் பலரது கவனத்தையும் ஈர்க்க, டெல்லியில் வாட்ஸ் அப் நிறுவனத்தின் அப்போதைய துணைத் தலைவர் கிறிஸ் டேனியல் பங்கேற்ற ‘இன்வெஸ்ட் இந்தியா’ விழாவில் ஷண்முகப்ரியா கவுரவிக்கப்பட்டார். ஷண்முகப்ரியாவைப் போலவே அவருடன் பணியாற்று கிறவர்களும் இதைத் தங்கள் நிறுவனமாக நினைத்துச் செயல்படுகின்றனர். “ஆர்டர் வாங்குவது மட்டும்தான் என் வேலை. மற்றபடி எல்லாத்தையும் இவங்கதான் பார்த்துக்கறாங்க. என்னைப் பொறுத்தவரை இந்த வளர்ச்சி என்னோட தனிப்பட்ட வளர்ச்சியல்ல. ‘சேர்ந்தே வளர்வோம்’ என்பதைத்தான் குறிக்கோளாக வைத்துச் செயல்பட்டு வருகிறோம்” என்கிறார் ஷண்முகப்ரியா. வீட்டின் ஒரு அறையை விற்பனைக்காக ஒதுக்கியவர், தற்போது முதல் மாடியில் தனியாக அலுவலகம் திறந்துவிட்டார். ஒவ்வொரு மாதமும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை ஆடைகள் விற்பனையாவதாகச் சொல்கிறார். விழாக் காலங்களில் இது ரூ.50 லட்சத்தைத் தொடும் என்கிறார். தொடர்ச்சியான ஆர்டர்களால் அவரது செல்போன் ஒளிர்ந்தபடி இருக்கிறது, அவரது வாழ்க்கையைப் போலவே.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x