விவாதக் களம்: பேனர் கலாச்சாரத்தை விட்டொழிப்போம்

விவாதக் களம்: பேனர் கலாச்சாரத்தை விட்டொழிப்போம்
Updated on
3 min read

அரசியல் கட்சியினர், பொதுமக்கள், திரைப்பட ரசிகர்கள், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனப் பலதரப்பினரும் பேனர் வைக்கும் கலாச்சாரம் பெருகிவருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த இளம்பெண் சுப மீது பேனர் விழுந்ததால் அவர் நிலைதடுமாறி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக பேனர் வைக்கும் கலாச்சாரம் குறித்து ‘அனுமதியுடன் கொல்லலாமா?’ என்ற தலைப்பில் செப்டம்பர் 15 அன்று வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுதியிருந்தோம். வாசகர் களின் கருத்துகளையும் கேட்டிருந்தோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் உங்கள் பார்வைக்குச் சில.

ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் கடுமை காட்டினால்தான் அரசாங்கம் விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விளம்பரப் பலகை விஷயத்தில் அரசு பொறுப்புணர்வோடு நடந்துகொண்டிருக்க வேண்டும்.
இத்தகைய இடையூறுகள் இனியும் ஏற்படாமல் தடுக்க , மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அநீதியை எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வீதியில் இறங்கிப் போராடவும் தயங்கக் கூடாது. மக்களின் எழுச்சி ஒன்றே கடமையில் தவறும் அரசு அதிகாரிகளைத் தட்டிக் கேட்பதற்கான ஒரே ஆயுதம்.

-பி. லலிதா. திருச்சி.

தவறுகளைக் கண்டும் காணாமல் போகும் மனப்பான்மை நம்மில் பலருக்கு இருப்பது வேதனையானது. சட்டங்கள் மீறப்படும் இடங்களில் களமிறங்கிக் கேள்வி கேட்கும் பண்பு நம்மிடையே வளர வேண்டும். அரசு சார்பில் விதிமீறல்கள் இருப்பின், முறையாக அதைப் பதிவுசெய்து கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். நரி இடம் போனால் என்ன வலம் போனால் என்ன; நாம் நலமென்றால் சரி என்ற எண்ணமே இத்தகைய பிரச்சினைகள் வளர்வதற்குக் காரணம். குற்றம் எங்கே நடந்தாலும் யார் செய்தாலும் தட்டிக்கேட்கும் குணமே தவறுகளைத் தடுக்கும்.

இரா.பொன்னரசி, சத்துவாச்சாரி, வேலூர்‌.

உங்கள் முகம் பேனரில் மிளிர்ந்த பிறகு அடுத்த சில நாட்களில் அதைச் சுருட்டி, குப்பையில் போடுவார்கள். அதைப் பார்க்கும் உங்களுக்கு நீங்களே குப்பைத் தொட்டியில் இருப்பதுபோல இருக்காதா? இப்படி ஒருநாள் பேனரில் இருந்துவிட்டு, குப்பைதொட்டிக்குப் போகும் இந்த வழக்கம் அவசியமா? வைப்பதற்கு முன் யோசியுங்கள். பேனருக்குச் செய்யும் செலவில் அத்தியாவசியத் தேவையை நிறைவேற்றிக்கொள்ளுங்கள். எல்லாம் அளவுக்கு அதிகமாக இருக்கிறதா? அப்படியென்றால் இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுங்கள். அவர்கள் மனம் வாழ்த்தும். அதைவிடவா பேனர் பெரிது? இளம்பெண் சுபயின் மரணத்தைப் பார்த்த பிறகாவது யாருடைய அறிவுரையும் தேவை இன்றி பேனர் வைக்க மாட்டேன் என்று அனைத்துத் தரப்பினரும் உறுதியேற்றால்தான் இந்தப் பிரச்சினை தீரும்!

-பிரகதா நவநீதன், மதுரை.

ரகு என்ற இளைஞர் 2018-ல் பேனர் விழுந்து இறந்தபோதே அரசு துரிதமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசு நிகழ்ச்சிகளுக்கே பேனர் வைப்பது தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தமிழக அரசு முதலில் கடைப்பிடிக்க வேண்டும். சட்டத்தை மீறுவோர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பேனர் வைப்பவர்களைப் பிடிக்க தனிப்பட்ட மொபைல் எண்ணுடன் ரோந்து வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

ஜானகி ரங்கநாதன், சென்னை.

பேனர்கள் வைக்கும் வழக்கத்தை அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கைவிட வேண்டும். அமைச்சர்களும் அதிகாரிகளும் அரசியல் கட்சியினரும் பேனர் வைப்பதை நிறுத்தி, மக்களுக்கு முன்னுதாரணமாகச் செயல்பட வேண்டும். ஊர்கூடித் தேர் இழுத்தால் நிச்சயம் மாற்றம் நிகழும்.

- வரலட்சுமி முத்துசாமி, கிழக்கு முகப்பேர்.

பேனர் வைப்பது தவறு என்ற நிலைப்பாட்டை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இதற்காக #BanBanners என்ற ஹேஷ்டேகில் இயக்கங்கள் உருவாக வேண்டும். பொறுப்பான நிலையில் இருக்க வேண்டிய அரசியல் தலைவர்களே மக்களுக்கு இடையூறு செய்யும்போது இம்மாதிரியான இயக்கங்கள்தாம் அதைத் தடுக்க வேண்டும்.

ப. ஜெகநாதன், திருநெல்வேலி.

அனுமதியுடன் பேனர் வைத்து, அதனால் ஓர் உயிர் பறிபோனால் அதுவும் கொலைதான். அதனால் அனுமதி, அனுமதியின்றி போன்ற வாதங்களைத் தள்ளிவைத்துவிட்டு, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பேனர் வைக்கும் வழக்கத்தை முற்றிலும் தடைசெய்ய வேண்டும். பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, குடும்ப விழாக்களுக்குப் பதாகைகள் வைப்பதை நிறுத்த வேண்டும்.

கே. கனகவிஜயன், மதுரை.

விலைமதிப்பற்ற மனித உயிரை அனுமதியுடனோ அனுமதி இன்றியோ மாய்ப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. சுபயின் மரணம் தொடர்பான வழக்கில், ‘சாலைகளுக்கு வண்ணம் பூச இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது?’ என்கிற உயர் நீதிமன்றத்தின் வினா உதிரத்தை உறைய வைப்பதாக இருந்தது. உயர் நீதிமன்ற வழிகாட்டுதலைத் தமிழக அரசு பின்பற்ற வேண்டியது அவசர அவசியம்.

- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.

அரசியல் கட்சிகள் தங்கள் தலைவரின் மேல் உள்ள மரியாதையையும் அபிமானத்தையும் வெளிப்படுத்த சாலைகளை மறைத்தும் நடுவிலும் விளம்பரப் பலகைகளை வைப்பது எவ்வளவு அபாயகரமானது என்பதை ரகுபதி, சுப ஆகிய இருவரின் மரணம் உணர்த்துகிறது. அடுத்தவருக்கு இடையூறு செய்து அதன் மூலம் கிடைக்கும் விளம்பரம் தேவையா? இனியும் பேனர்களின் பெயரால் உயிரிழப்புகள் வேண்டாமே.

பானு பெரியதம்பி, சேலம்.

யாருக்கு என்னவானால் எனக்கென்ன; நம் பிழைப்பு நல்லவிதமாக ஓடினால் போதும் என்பதுதான் பெரும்பாலான மக்களின் மனநிலையாக உள்ளது. இந்த மனநிலை மாறாத வரை எதுவும் மாறப்போவதில்லை. ‘இங்கே சிறுநீர் கழிக்கக் கூடாது; மீறினால் தண்டிக்கப்படுவீர்’ என்று எழுதி வைத்துத்தான் வீட்டுச் சுவரைக் காப்பாற்றிவருகிறோம். இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது இங்கே தனி மனித ஒழுக்கம். அதற்காக அரசியல்வாதிகள் அனைவரும் உத்தமர்கள் அல்ல. அவர்களும் திருந்த வேண்டும்.

- அருணா செல்வராஜ், கோவை.

ஒவ்வொரு மரணமும் நமக்குப் பாடம் சொல்லி விட்டுத்தான் போகிறது. நாம்தான் கற்பதில்லை. இனியாவது கற்போம். கட்சிகளில் இருந்து மட்டுமல்ல; நம்மிடம் இருந்தும் தொடங்குவோம் மாற்றத்தை.

முனியாண்டி, விருதுநகர்.

‘அனுமதியுடன் கொல்லாமா?’ என்று தலைப்பிலேயே கோபத்தைக் காட்ட வேண்டிய அளவுக்குத்தான் இன்றைய அரசின் நடவடிக்கைகள் உள்ளன. தங்களின் கட்சி விளம்பரப் பலகையால் ஒரு பெண் இறந்திருக்கிறார்; நீதிமன்றம் அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்கிறது. ஆனாலும், அரசு பெயருக்கு அறிக்கை ஒன்றை விடுத்துவிட்டு அதைக் கடந்து சென்றதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

கொலை, கொள்ளை என எதுவாக இருந்தாலும் அடுத்த பரபரப்பு செய்தி வரும்வரை மட்டுமே ஒரு நிகழ்வு மக்களால் விவாதிக்கப்படுகிறது. தீர்வை நோக்கிய நகர்வு இறுதிவரை முனைப்போடு நகர்த்தப்படுவதே இல்லை. பாதிக்கப்படுபவர், அவரைக் காப்பாற்ற நினைப்பவர், எதிர்த்துப் போராடுபவர் என்று ஒரு பக்கம் இருக்க, பேனர் வைக்க ஆர்டர் கொடுத்தவர், அதைத் தயாரித்துக் கொடுத்தவர், சாலையில் அதைக் கட்டியவர் என இதில் தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் இந்தக் கொலையில் பங்கு உண்டு. சமுதாய மாற்றம் ஏற்பட தனி மனித மாற்றமும் காலத்தின் அவசியமாகும். அரசியல்வாதிகளும் இந்த வரையறைக்குள் அடங்குவர்.

- முனைவர் ம. தனப்பிரயா, கோவை.

அக்டோபர் 14 - அன்று அறிவிக்கப்படவிருக்கும் புக்கர் இலக்கிய விருதின் இறுதிப் பட்டியலுக்கு இந்த ஆண்டு தேர்தெடுக்கப் பட்டிருக்கும் எழுத்தாளர்கள் அறுவரில் நால்வர் பெண்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in