

அபிதா
சென்னையைச் சேர்ந்த 23 வயது சுபஸ்ரீக்கு நேர்ந்த மரணம் எதிர்பாராததோ விபத்தோ அல்ல. திட்டமிட்டுக் கொல்லப் படுவதைக் காட்டிலும் எந்தவிதத்திலும் அது குறைந்ததல்ல. கனடா செல்லும் கனவுடன் வீடு திரும்பிக்கொண்டி ருந்தவரின் கனவையும் எதிர்காலத் தையும் சிதைத்தவர்கள் யார்?
சுபஸ்ரீயின் மரணம் தொடர்பான வழக்கில் , “சாலைகளுக்கு வண்ணம் பூச இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது?” என தமிழக அரசைக் கேட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். 2017-ல் கோவையைச் சேர்ந்த மென்பொறியாளர் ரகுபதி என்பவர் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியின் விளம்பரப் பலகை மீது மோதி கீழே விழ, பின்னால் வந்த வாகனத்தில் அடிபட்டு இறந்தார்.
தற்போது சுபஸ்ரீயின் மரணத்துக்கு நீதி கேட்டுக் குரல்கொடுத்ததைப் போல அப்போதும் பலரும், ‘ரகுவைக் கொன்றது யார்?’ எனக் கேள்வி எழுப்பினர். அனுமதியின்றி விளம்பரப் பலகைகளை வைப்பது குற்றமென்று ஆளாளுக்குப் பரப்புரை செய்தனர். அந்த நேரத்துக்குக் கண்துடைப்பாகச் சில இடங்களில் மட்டும் விளம்பரப் பதாகைகளும் தட்டிகளும் அக்கற்றப்படன. இப்போதும் சில இடங்களில் அக்கற்றப்படலாம். ஆனால், தமிழகத்தில் இனி விளம்பரப் பலகைகளே இருக்காது என்பதற்கு உத்தரவாதமில்லை.
அரசின் கடமை இல்லையா?
‘அனுமதி பெறாமல்’ என்பதையும் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். சுபஸ்ரீயின் உயிரைக் குடித்த அந்த விளம்பரப் பலகையை அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் உரிய அனுமதி பெற்று வைத்திருந்தால் அது சரியாகிவிடுமா? அப்போது அது அனுமதி பெற்ற கொலையாகிவிடாதா? தனி மனித ஒழுக்கமின்மையும் விதிமீறலும் ஊழலும் மலிந்திருக்கும் நம் நாட்டில் அனுமதி வாங்குவதொன்றும் பெரிய செயலோ அதை மீறுவது சவாலானதோ இல்லை என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
கிடைக்கிற எந்த ஓட்டையையும் ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் பயன்படுத்தத் தவறியதே இல்லை. காரணம், அரசின் அனுமதியுடன் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளும் இந்த ‘உரிய அனுமதி’ என்ற எல்லைக்குள்தான் வரும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களால் கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷின் மனைவி ஷோபனா கொல்லப்பட்டார். அப்போது மருத்துவர் ரமேஷ் சாலையில் மனைவியின் சடலத்தின் அருகே அமர்ந்து, “எங்களுக்கு வாழ்க்கை வேண்டும்; நீதி வேண்டும்.
மருத்துவம் படித்துவிட்டு மக்களுக்குச் சேவை செய்யத்தான் இந்தக் கிராமத்துக்கு வந்தேன். நாங்கள் இங்கே உயிர்வாழ என்ன உத்தரவாதம் இருக்கிறது?” எனக் கலங்கிய கண்களுடன் கேட்டு இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள், “பேனர் வைப்பதைத் தடுக்க இன்னும் எத்தனை உயிர்கள் தேவைப்படும்?” என உயர் நீதிமன்றத்தைக் கேள்வியெழுப்ப வைத்தது இந்த அரசின் மாபெரும் சாதனைதான்.
மக்களின் நலனுக்கும் வாழ்வாதாரத்துக்கும் ஊறுவிளைவிக்கிறவற்றைத் தடுப்பதும் தடைசெய்வதும் அவற்றிலிருந்து மக்களைக் காப்பதும்தானே அரசின் அடிப்படைக் கடமை? அதை விட்டுவிட்டுக் குடும்பங்களை அழிக்கும் டாஸ்மாக் கடைகளை வருமானத்தைப் பெருக்குகிறோம் என்ற முழக்கத்துடன் தெருக்கள்தோறும் தொடங்குவதும் தங்கள் புகழையும் கட்சிப் பெருமையையும் பறைசாற்ற சாலையின் நடுவிலும் பொது இடங்களிலும் பேனர்களை வைப்பதும்தான் அரசின் கடமையா?
பிறப்பு முதல் இறப்புவரை குடும்ப நிகழ்வுகள் அனைத்துக்கும் பேனர் வைக்கும் மக்களும் தாங்களும் இந்த வரையறைக்குள் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. அடித்தட்டில் இருக்கிறவரோ அதிகாரத்தின்
உச்சியில் இருக்கிறவரோ யார் தவறு செய்தாலும் அதை நியாயப்படுத்திவிட முடியாதுதானே.
நீங்க என்ன சொல்றீங்க?
பொதுமக்களின் இயல்பான வாழ்வுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது? அப்படியான சில செயல்களை அரசாங்கமே செய்யும்போது அதை யார் தடுப்பது? இதில் உங்கள் கருத்து என்ன? எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்; விவாதிக்கலாம்.