Published : 15 Sep 2019 11:02 AM
Last Updated : 15 Sep 2019 11:02 AM

வாழ்ந்து காட்டுவோம் 23: தலைமைப் பண்புக்குப் பயிற்சி

- ருக்மணி

அமைப்பாக ஒன்றிணைய முடியாத அமைப்புசாரா தொழிலாளர்களுக்காகவும் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறையின்கீழ் சில நல வாரியங்கள் இயங்கிவருகின்றன. தமிழ்நாடு உடல் உழைப்பு, ஆட்டோ, முடி வெட்டுவோர், தையல், சலவை, மரம், கைவினை, கைத்தறி, காலணி, ஓவியம், பொற்கொல்லர், மண்பாண்டத் தொழிலாளர் ஆகியோருக்கென நல வாரியங்கள் செயல்பட்டுவருகின்றன.

இந்த நல வாரியங்கள் மூலம் அளிக்கப்படும் நலத்திட்டங்களின் உதவித்தொகையைப் பெற அந்தந்த மாவட்டத் தொழிலாளர் நல அலுவலரை (சமூகப் பாதுகாப்பு) அணுகி, திட்டத்துக்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, அதில் குறிப்பிட்டுள்ள சான்றுகளை இணைத்து மாவட்டத் தொழிலாளர் நல அலுவலரிடம் (சமூகப் பாதுகாப்பு) சமர்ப்பிக்க வேண்டும். பயனாளிகள், வாரியத்தில் பதிவுபெற்ற உடலுழைப்புத் தொழிலாளியாக இருக்க வேண்டும். 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்; 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சிறுபான்மை இனப் பெண்களிடையே தலைமைப் பண்பை மேம்படுத்தும் திட்டம்

மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சிறுபான்மையின மகளிருக்கு வாழ்க்கை, வாழ்வாதாரம் ஆகியவற்றுடன் குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டத்தை 2007 – 2008-ல் அறிமுகப்படுத்தியது. 2009 -2010-ல் இத்திட்டம், சிறுபான்மை மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டு, ‘சிறுபான்மையினப் பெண்களிடையே தலைமைப் பண்பை மேம்படுத்தும் திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சௌராஷ்டிரா இனப்பெண்களுக்குச் சிறுபான்மையின மேம்பாட்டுத் துறை மூலம் இத்தகைய பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது.
திட்டப் பரிந்துரையில் பெண்களுக்கான பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பரிந்துரைகள்:

ஒவ்வொரு கிராமத்தில் இருக்கும் அடிப்படை வசதிகள், சேவைகள் பற்றிய விரிவான அடிப்படைத் தகவல்களை உள்ளடக்கியதாக இப்பயிற்சி வடிவமைக்கப்பட வேண்டும். சேவைகள் பற்றிக் குறிப்பிடுகையில் அவற்றின் தரம், அவை அளிக்கப்படும் விதம், சந்திக்கும் பிரச்சினைகள், நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடங்கல்கள் ஆகிய அனைத்தையும் அப்பெண்களே விவாதித்து அக்கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெறும் வகையில் திட்டங்களைத் தீட்டக்கூடிய திறனைப் பெறக்கூடிய விதத்தில் பயிற்சி அவர்களுக்கு அமைய வேண்டும்.

கிராமத்தின் மேம்பாட்டில் முக்கியத்துவம் பெறுகின்ற இதர விஷயங்களான பள்ளிகளில் கழிவறை, விளையாட்டு, மதிய உணவு, அளிக்கப்படும் கல்வியின் தரம், அங்கன்வாடி மையச் செயல்பாடுகள், மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்கள், குடும்பக் கட்டுப்பாடு பற்றிய செய்திகள், நியாய விலைக் கடைகளில் அளிக்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரம், குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, வங்கி - அஞ்சல்துறை வசதி, மகளிர் காவல்நிலையச் செயல்பாடுகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வழிமுறைகள், பெண்களுக்கான சட்ட உரிமைகள் போன்ற பலவிதமான விஷயங்களும் பயிற்சியின் அங்கமாக விவாதிக்கப்படும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட வேண்டும். இப்பயிற்சிக்குப் பின்னர் பயிற்சி பெற்ற பெண்கள் துணிவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்துத் தங்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறி, அவற்றுக்கான தீர்வுகளையும் பெறக்கூடிய திறனைப் பெற்றிருக்க வேண்டும். இதுதான் இத்தகைய பயிற்சிகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.

(உரிமைகள் அறிவோம்)
கட்டுரையாளர்,
மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.
தொடர்புக்கு: somurukmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x