

சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் உலக அளவில் புகழடைந்துள்ளார் தமிழ்ப் பெண் இளவேனில் வாலறிவன். அவர் பெற்ற பதக்கத்துக்காக மட்டுமல்லாது அவரது பெயருக்காகவும் தமிழர்கள் அவரைக் கொண்டாடிவருகின்றனர். தமிழ்ப் பெண் ஒருவர் சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் எட்டியுள்ள மிகப் பெரிய உயரம் இது.
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ‘சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு’ சார்பில் நடத்தப்பட்ட உலகத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் சீனியர் பிரிவில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கும் இளவேனிலின் வயது 20. தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர், தற்போது குஜராத் மாநிலத்தில் வசித்துவருகிறார். பத்து மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
திருக்குறள் தந்த பெயர்
கடலூர் மாவட்டத்தில் உள்ள காராமணிகுப்பத்தில் பிறந்தவர் இளவேனில். இவருடைய தாத்தா உருத்திராபதி, தமிழ்ப் பற்றாளர். தன்னுடைய பிள்ளைகள், பேரக்குழந்தைகள், உறவினர்களின் குழந்தைகள் ஆகியோருக்குத் திருக்குறளில் இடம்பெற்ற பெயர்களை வைப்பதைக் கடமையாகவும் பெருமிதமாகவும் கொண்டுள்ளார். மகனுக்கு வாலறிவன் (தூய்மையான அறிவு வடிவானவன்) என்று பெயர் சூட்டியவர், பேரக் குழந்தைகளுக்கு இறைவன், இளவேனில் என்று பெயர் வைத்துள்ளார்.
இளவேனிலின் தந்தை வாலறிவன், அகமதா பாத்தில் உள்ள தனியார் வேதியியல் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கிறார். தாய் சரோஜா, தனியார் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிவருகிறார். பெற்றோர் இருவரும் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் பிள்ளைகளின் விருப்பம் எதுவோ, அதைச் செய்யவே ஊக்குவித்துள்ளனர். மகன் இறை வன் ராணுவத்திலும் மகள் இளவேனில் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
“அண்ணன்தான் துப்பாக்கிச் சுடுதலில் எனக்கு ஆதர்சம். தமிழகத்தில் உள்ள அமராவதி ராணுவப் பள்ளியில்தான் அண்ணன் படித்தான். அங்கே துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி அளிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிபெற்றதைப் பற்றி வீட்டுக்கு வரும்போதெல்லாம் அண்ணன் பெருமை யாக என்னிடம் பேசுவான். எனக்குப் பெறாமையாக இருக்கும். ‘உன்னுடைய துப்பாக்கி எதிரிகளைக் கொன்றுதான் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும். ஆனால், நான் போட்டிகளில் பங்கேற்றுத் துப்பாக்கிச் சுடுதலில் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன்’ என விளையாட்டாகச் சொல்வேன்” என்கிறார் இளவேனில்.
தற்போது மூன்றாம் ஆண்டு இளங்கலை ஆங்கிலம் படித்துவரும் இளவேனில், எட்டாம் வகுப்பிலிருந்து துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி எடுத்துவருகிறார். பத்தாம் வகுப்புப் படித்தபோது நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட இளவேனில், வெண்கலப் பதக்கத்துடன் வீடு திரும்பியுள்ளார். “நான் பெற்ற முதல் பதக்கம் வெண்கலம்தான். அந்தப் பதக்கம்தான் வாழ்நாள் எல்லாம் துப்பாக்கியைக் கையில் ஏந்த ஊக்கம் தந்தது. அதற்குப் பிறகு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கினேன்” என்று சொல்லும் இளவேனில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெற்றிபெற்ற ககன் நாரங் சென்னை போரூரில் நடத்தும் ‘Gun for Glory’ அகாடமியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பயிற்சி எடுத்துவருகிறார்.
2014-ம் ஆண்டிலிருந்து உலக, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுவரும் இளவேனில், சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு நடத்திய போட்டிகளில் மட்டும் ஆறு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று சர்வதேச அளவில் பத்து மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உலக அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
சீனியரை வென்ற ஜூனியர்
2018-ல் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற இளவேனில், அதில் தங்கம் வென்றார். ஜெர்மனில் உள்ள மியூனிக் நகரில் இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் பங்கேற்று, நூலிழையில் தங்கப் பதக்கத்தை சகநாட்டு வீராங்கனைகளான ஆபூர்வி சண்டேலா, அஞ்சும் மோட்கில் ஆகியோரிடம் தவறவிட்டார். ஆனால், இம்முறை இளவேனில் தன்னுடைய வெற்றியை இறுகப் பற்றிக்கொண்டார். பிரேசிலில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனைகளான அஞ்சுமும் ஆபூர்வியும் இளவேனிலுக்குச் சவாலாக இருந்தனர். ஆனால், இலக்கை நோக்கிச் சுடுவதற்குமுன் அர்ஜுனனின் கண்கள் கிளியை மட்டுமே பார்த்ததுபோல், இளவேனிலின் கண்கள் இலக்கில் மட்டுமே கவனம் செலுத்தின.
“பத்து மீட்டர் ஏர் ரைபிள் இறுதி போட்டியின்போது என் மனத்தில் எந்த நினைப்பும் ஓடவில்லை. வெற்றிபெற வேண்டும் என்றுகூடச் சிந்திக்கவில்லை. தோட்டா இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தது” என்கிறார் இளவேனில். இலக்கின் மீது இளவேனில் வைத்த குறி தப்பவில்லை. பிரேசில் உலகத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் முதல் தங்கம் வென்று இந்திய பதக்கப் பட்டியலை தொடங்கிவைத்திருக்கிறார் இளவேனில். இந்த உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், இந்திய மூத்த வீராங்கனையான அஞ்சும் மோட்கிலைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் இளவேனில். 20 வயதிலேயே சர்வதேச உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இளவேனில் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கே அடுத்த இலக்கு
இளவேனிலின் கைகள் துப்பாக்கியை மட்டுமல்ல; பரதநாட்டிய அபிநயத்தையும் அழகாகப் பிடிக்கவல்லவை. ஏழு ஆண்டுகளாக அவர் பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். துப்பாக்கிச் சுடுதல் தவிர்த்து பேட்மிண்டன், நீண்ட தூரப் பயணம் ஆகியவை இளவேனிலின் பொழுதுபோக்குகள். “மற்ற பொழுதுபோக்கு விளையாட்டுகளைப் போல்தான் துப்பாக்கிச் சுடுதலையும் தொடங்கினேன். ஆனால், தற்போது அதில் மட்டும்தான் முழுநேரக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளேன். பொதுவாக, இதுபோன்ற உள்ளரங்க விளையாட்டுகளை அனைத்துத் தரப்பு மக்களும் அறிந்துகொள்ள வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் போட்டிக்காக மட்டுமல்லாமல் தற்காப்புக்காகவும் ஏதேனும் ஒரு பயிற்சியை இளம்பெண்கள் பெறுவது அவசியம்” என்று வலியுறுத்துகிறார் இளவேனில்.
2020-ல் ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தன் தோட்டாக்கள் இலக்கை அடைய வேண்டும் என்பதை அடுத்த குறிக்கோளாகக் கொண்டு தயாராகிவருகிறார் இளவேனில் வாலறிவன். ஒலிம்பிக் பதக்கத்துக்கு நாமும் நம்பிக்கையுடன்
காத்திருப்போம்.
- எல். ரேணுகாதேவி