அகம் புறம்: எட்டித்தான் பார்ப்போமே!

அகம் புறம்: எட்டித்தான் பார்ப்போமே!
Updated on
3 min read

உலகத் தற்கொலைத் தடுப்பு நாள் செப்.10

கலைதங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ளும் கொடுமையில் உலக அளவில் ஆண்களே அதிகம். ஆனால், உலக நிலைமையுடன் ஒப்பிட, இந்தியாவிலோ பெண்களின் தற்கொலை வீதம் அதிகமாக இருக்கிறது. 2016 நிலவரப்படி நம் நாட்டில் தற்கொலைக்கு ஆளான பெண்களின் எண்ணிக்கை 94,380. ஒட்டுமொத்தப் பெண்கள் தற்கொலையில் இது 36.6 சதவீதம். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது என்கிறது ‘லான்செட்’ மருத்துவ ஆய்விதழின் புள்ளிவிவரம்.

பரவலாக மருத்துவர்கள் கூறுவதைப் போல, துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லை என்றாலும், ஆண்களைவிடப் பெண்களே அதிக எண்ணிக்கையில் தற்கொலைக்கு முயல்கிறார்கள் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் திருமணமான பெண்கள்தாம் அதிக அளவில் தன்மாய்ப்பில் ஈடுபடுகிறார்கள்; ஏற்பாட்டுத் திருமணம், சிறுவயதுத் திருமணம், பருவ வயதிலேயே கருத்தரிப்பு, குடும்ப வன்முறை, பொருளாதாரச் சார்பு, ‘கீழான’ சமூக அந்தஸ்து ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்கள். வயதின்படி பார்த்தால், 15 முதல் 39 வயதுக்குட்பட்ட பெண்களே அதிக அளவில் தற்கொலைக்கு முயல்கின்றனர். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் எனப் பெரிய வேறுபாடு இல்லை. சமூகத்தின் அனைத்துத் தரப்பிலும் தற்கொலைத் துயரம் நிகழ்ந்துவருகிறது.

கண்டுகொள்ளப்படாத மனப் பிரச்சினை

கடந்த வாரம் நடந்த இரண்டு நிகழ்வு களைச் சுட்டிக்காட்டுகிறார், மூத்த மனநல மருத்துவர் ஒருவர். மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் அதிக வருவாய் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் அவர். வீட்டிலும் சுற்றத்திலும் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒருநாள் வீட்டில் யாருமில்லாத நேரத்தில், தற்கொலைக்கு முயன்றுள்ளார். நல்லவேளையாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை மருத்துவமனையில் சேர்த்து, உயிர்பிழைக்கச் செய்துள்ளனர். தாங்க முடியாத வயிற்றுவலிதான் காரணம் என மருத்துவர்களிடம் கூறியிருக்கிறார் அந்தப் பெண். எவ்வளவு சிக்கலான நோயாக இருந்தாலும் அதற்கான சிகிச்சைக்குச் செலவழிக்கக்கூடியது, அவரது குடும்பம்; ஆனாலும், அவரது மனப் பிரச்சினை அந்த அளவுக்குக் கண்டுகொள்ளப்படவில்லை.

இன்னொருவர் அறுபதைக் கடந்தவர். நடுத்தட்டு வருவாய் கொண்ட குடும்பம்; மகன்களுக்குத் திருமணமாகி, தனித்தனி குடும்பமாக இருக்கிறார்கள்; கணவன் இறந்துவிட்டார். அடிக்கடி மனச்சோர்வுக்கு உள்ளாகியிருக்கிறார். பிள்ளைகளிடம், “என்ன வாழ்க்கை, இது? தற்கொலை செய்துகொள்ளத் தோன்றுகிறது” என அடிக்கடி கூறிவந்திருக்கிறார். முதுமையால் அம்மா இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறார் எனப் பிள்ளைகள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. திடீரென ஒருநாள், அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும்தான் குடும்பத்தினருக்கு விபரீதம் உறைத்திருக்கிறது. காப்பாற்றப்பட்ட முதிய பெண்மணியின் மகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனது குறித்தும் அவர்கள் மருத்துவர்களிடம் விளக்கிய பிறகே, சித்திரம் தெளிவானது.

பிரசவத்துக்குப் பிந்தைய தடுமாற்றம்

தாயாகும் பெண்களுக்குக் குழந்தை பிறந்தவுடன் அடுத்த சில வாரங்களில் தற்கொலை எண்ணம் மேலெழும் என்கிறார்கள், மனநல மருத்துவர்கள். “குழந்தைப்பேற்றுக்கு அடுத்த இரண்டு வாரங்களில், உடல், மனச் சோர்வும் பிள்ளையை எப்படி வளர்த்து ஆளாக்கப் போகிறோம் என்கிற கவலையும் ஏற்படும். பிரசவத்தால் ஏற்படும் ஹார்மோன் மாற்றம், தூக்கமின்மை, பரிவான கவனிப்பின்மை ஆகியவற்றால் ஏற்படும் சிக்கல் இது. இதை ‘போஸ்ட்பார்ட்டம் புளூ’ என்பார்கள். இது 80 சதவீதத்தினருக்கு இயல்பாக வரக்கூடியதுதான். பிறகு சரியாகிவிடும்.

இதுவே சற்று அதிகமாகி, ‘போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன்’ எனும் நிலைக்குக் கொண்டுபோகும். அப்போது, கடுமையான விரக்தி ஏற்படும். குழந்தைக்குப் பாலூட்ட விருப்பம் இருக்காது. தான் சுத்தமாக இருக்க வேண்டும் எனத் தோன்றாது. மனச்சோர்வு ஒரு படி மேலேபோய், மனக்குழப்பமும் சேர்ந்து பிரமை பிடித்ததைப் போல நடந்துகொள்ளும் நிலையும் ஏற்படலாம். உச்சகட்டமாக, தன்னுடைய குழந்தையையே காயப்படுத்தும் அளவுக்கும் மனநிலை மாறும். மனச்சிதைவுக்கு முந்தைய நிலைமைக்கும் கொண்டுபோக வாய்ப்பு உண்டு.

பல்வேறு காரணங்களால் இந்தப் பிரச்சினைகள் ஏற்படலாம். பிரசவத்தின்போது தாயின் மூளைக்குப் போகும் ரத்தக்குழாய் உறைவதால், பிட்யூட்டரி சுரப்பி வேலைசெய்யாமல் போகும். வேறு ஹார்மோன் மாறுபாட்டாலும் இது நிகழலாம். நரம்புக் கோளாறுகளும் காரணமாக இருக்கக்கூடும். முன்கூட்டியே ஏதாவது மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநலம் குன்றியவர்களை இப்பிரச்சினை எளிதில் பற்றிக்கொள்ளும். இந்தச் சூழலைப் புரிந்துகொண்டு அவரவர் நிலைக்கு ஏற்ப, கணவரும் குடும்பத்தினரும் பரிவாக நடந்துகொண்டு, உரிய சிகிச்சை அளிப்பது அவசியம். இல்லாவிட்டால் அவர்களுக்குள் தற்கொலை எண்ணம் எழ வாய்ப்பு உண்டு” என்கிறார், அரசு மருத்துவக் கல்லூரி உதவி மனநலப் பேராசிரியர் அபிராமி.

மாதவிடாய்க்கும் தொடர்புண்டு

பெண்களில் மாதவிடாய்க்கு முந்தைய உணர்வுவய நிலை உள்ளவர்களில் கணிசமானவர்களுக்குத் தற்கொலை எண்ணம் வரலாம். இதை, ‘பிரிமென்சுரல் டிஸ்போரியா டிஸார்டர்’ என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் கோபம் அதிகமாக வரும்; வறண்ட நெஞ்சு, மூட்டு வீக்கம் போன்றவை ஏற்படும். எதையுமே நம்பாமல், ஒரு பிடிமானம் இல்லாமல் வெறுமை மனநிலை இருக்கும். ஆனால், இதைக் கணிப்பது கடினம். சரியான காரணங்களைக் கண்டறியாதபோது பத்து ஆண்டுகள்வரை இந்தப் பிரச்சினையைக் கண்டறிய முடியாமலும் போகும். மாதவிடாய் தொடங்கியதிலிருந்து நிற்கும்வரை இந்தப் பிரச்சினை நீடிக்கலாம்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்களுக்கு, பாலினப் பாகுபாட்டால், துன்புறுத்தலால் மனச்சிக்கல் உண்டாகிறது. இதனால், அவர்கள் சட்டென முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். தங்கள் மீதான துன்புறுத்தலைப் பற்றிக் குடும்பத்தாரிடமோ வெளியிலோ சொன்னால் அது அவமானம் என நினைப்பது முக்கியமான காரணம். சிறுவயது முதலே பெண் குழந்தைகளிடம் நட்பாகப் பழக வேண்டும். பொது விவகாரங்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். அப்படிச் செய்வதால், சமூகத்தில் எதையும் எதிர்கொள்ளும் துணிவு இயல்பாகவே வரும்.

காதல் விவகாரத்தால் கல்வியை நிறுத்துவது போன்றவற்றைச் செய்யக் கூடாது. உறவுமுறிவு போன்ற சிக்கல்களில், அதை எளிதாகக் கடந்துபோகும்படியாக ஆறுதலாக இருக்க வேண்டும். மனப்புண்ணை மேலும் அதிகப்படுத்திவிடக் கூடாது. மண உறவுகளில் சிக்கல் வந்தால், அதை எதிர்கொள்ளக் குடும்பத்தார் துணையாக இருக்க வேண்டும். பிறந்த வீட்டில் தனக்கு முக்கியத்துவம் இருப்பதைப் போலவே புகுந்த வீட்டிலும் எதிர்பார்ப்பது இயல்பு. தன் பெண்ணுக்குத் தாயாக இணக்கமாக இருப்பவர், தன் வீட்டுக்கு வரும் மருமகளிடம் இப்படி நடந்துகொள்ளாமல் இருப்பது பெரிய முரண்பாடு. சமூகக் கட்டமைப்பு உருவாக்கியுள்ள இந்தப் பிணக்கைப் பெண்கள் சிந்தித்துக் களைய வேண்டும்.

முதுமையிலும் தோன்றலாம்

இளமையில்தான் என்றில்லை, முதுமையிலும் உயிரைப் போக்கிக்கொள்ளும் எண்ணம் வரச் சாத்தியம் உள்ளது. சும்மா மிரட்டலுக்காகச் சொல்வதைப் போலத் தோன்றினாலும், தற்கொலை செய்துகொள்வதாகக் கூறுபவர்களை மிகவும் அணுக்கமாகக் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட எப்போதும் தயாராக இருப்பார்கள்.

“பொதுவாக, தற்கொலையில் இறங்கு பவர்கள், வாழ்க்கையே முடிந்துவிட்டது; இனி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என விரக்தியின் விளிம்புக்குச் சென்றுவிடுவார்கள். ஒரு நொடிப்பொழுதாவது அவர்களின் மனதில் தாங்க முடியாத அளவுக்கு வலி இருப்பதாக, மனமே ரணமானதைப் போல வேதனைப்படுவார்கள். அந்தக் கண நேரம் தான் அவர்களை இருட்டுக்குள் தள்ளிவிடும்” என எச்சரிக்கை சொய்கிறார், மருத்துவர் அபிராமி. ஆண்டுதோறும் செப்டம்பர் 10 அன்று ‘உலக தற்கொலைத் தடுப்பு நாளா’கக் கடைப்பிடிக்கப்படுகிறது.

அத்துடன், அக்டோபர் 10 அன்று கொண்டாடப்படும் உலக மனநாளில், இந்த ஆண்டு, ‘அனைவரும் இணைந்து தற்கொலையைத் தடுப்போம்’ என்பதை உலக சுகாதார நிறுவனம் மையக் கருத்தாக முன்வைத்திருக்கிறது. மனித உயிர்கள் அற்பமாகப் பறிபோவதைத் தடுக்க, நம்மால் இயன்றதைச் செய்வோமே!

- கலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in