பெண்கள் 360: சிங்கப் பெண்கள்

பெண்கள் 360: சிங்கப் பெண்கள்
Updated on
2 min read

டெல்லியிலுள்ள நாங்லோய் என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் 30 மாலையில் பெண்கள் இருவர் சைக்கிள் ரிக்ஷாவில் இருந்து இறங்கி சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியே ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த இருவர் அவர்கள் அருகே சென்றனர். பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் திடீரென பெண்ணின் கழுத்திலிருந்த நகையைப் பறித்தார். பைக்கை வேகமாக ஓட்டித் தப்பிக்க முயன்றபோது அவர்கள் தடுமாறினர்.

இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த பெண்கள் பைக்கில் அமர்ந்திருந்த நபரைப் பிடித்து இழுத்துத் தாக்கினர். இதனால், வண்டியை ஓட்டிவந்த இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்து தப்பியோடிவிட்டார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், மாட்டிக்கொண்ட இளைஞரைப் போலீசில் ஒப்படைத்தனர். நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவரைப் பெண்கள் துணிச்சலுடன் பிடித்துத் தங்கள் நகையைக் காப்பாற்றிய இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.


தமிழகத்திலிருந்து ஆளுநராகும் முதல் பெண்

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் பர்மாவில் பிறந்த தமிழ்ப் பெண்ணான ஜோதி வெங்கடாசலம், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கேரள ஆளுநராகப் (1977 முதல் 1982 வரை) பதவிவகித்தார். இதனால், தமிழகத்தில் பிறந்த முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை தமிழிசை பெறுகிறார். ஆளுநராக நியமிக்கப்பட்டது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ஆளுநர் நியமனம் மகிழ்ச்சி அளிக்கிறது. கடுமையான உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் இது. தமிழக பா.ஜ.க. தலைவராக எனது பதவிக் காலம் டிசம்பர் மாதத்துடன் நிறைவுபெறும் நிலையில் மிகப்பெரிய பதவியைக் கட்சித் தலைமை கொடுத்துள்ளது. எனக்கு ஆதரவளித்த தமிழக அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

ஆடை பெண்களின் சுதந்திரம்

தென் கொரியாவில் சமீபத்திய ஆண்டுகளில் ஆணாதிக்கக் கலாச்சாரத்துக்கு எதிராகவும் பாலியல் வன்முறைக்கு எதிராகவும் கழிவறை, பொது இடங்களில் ஆண்கள் 'ரகசிய கேமரா' பொருத்துவதற்கு எதிராகவும் பெண்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2018-ல் பெண்கள் மட்டுமே பங்கேற்ற மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. ரகசிய கேமராவில் எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களை ஒழிக்க வலியுறுத்தி சியோல் நகரத் தெருக்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஊர்வலமாகச் சென்றனர். ‘மார்பில் இறுக்கமான உடை அணிவதிலிருந்து விடுதலை' என்ற இயக்கம் தீவிரமடைந்தது.

இந்நிலையில், தென்கொரிய நடிகையும் பாடகியுமான சல்லி என்பவர், லட்சக்கணக்கானோர் பின்தொடரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உள்ளாடை அணியாமல் மேலாடை மட்டும் அணிந்த படங்களைப் பதிவேற்றம் செய்ததையடுத்து இந்த நடவடிக்கை பரவிவருகிறது. இதனையடுத்து தென்கொரியாவில் பெண்கள் மேலாடைக்கு உள்ளே பிரா அணியாமல் இருக்கும் படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றிவருகிறார்கள்.

#NoBra என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்தி இதைச் சமூக ஊடகப் பரப்புரையாக மாற்றிவருகின்றனர். தென்கொரியாவில் பிரா அணியாத இயக்கத்தின் அடையாளமாக நடிகையும் பாடகியுமான சல்லி மாறியுள்ளார்.

பெண்களுக்கு வேலையில்லையா?

நாடு முழுவதும் வேலையில்லாத பெண்களின் எண்ணிக்கை ஆண்களைக் காட்டிலும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. ‘இந்தியாவில் பணி அமர்த்தலில் பாலினப் பாகுபாடு’ என்ற தலைப்பில் ஹார்வர்டு பல்கலை மாணவர்களான ரேச்சல் லெவன்சனும் லயலா ஓகேனும் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில், “நகர்ப்புறங்களில் படித்த பெண்களில் 8.7 சதவீதத்தினருக்கு வேலையில்லை. அதேநேரம் ஆண்களின் எண்ணிக்கை 4 சதவீதமாக உள்ளது. வேலை தேடுவதில் பெண்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ள போதிலும் பாலின இடைவெளியோடு உயர்கல்வி கற்ற பெண்கள் ஆண்களுடன் போட்டி போடும்போது கூடுதல் தடைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

கல்வித் தகுதி, அனுபவம், ஆள்தேர்வு, நேர்முகத் தேர்வு, விண்ணப்ப நடைமுறை ஆகியவற்றில் பெண்களுக்குச் சிக்கல் ஏற்படுகிறது. பெண்களுக்குக் கல்வி, அனுபவம் ஆகியவை அதிகமாக இருந்தபோதிலும் பாலினப் பாகுபாட்டால் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பெண்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்தும்பட்சத்தில் அவர்களால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 27 சதவீதம் அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.

ஒரு ரூபாய் இட்லி

இன்றைய தேதியில் ஒரு ரூபாய்க்கு மதிப்பு குறைவு. ஆனால், கோவை மாவட்டம் வடிவேலம்பாளையம் கிராமத்தில் இன்றும் ஒரு ரூபாய்க்குச் சுடச்சுட இட்லி சுட்டுக் கொடுக்கிறார் கமலாத்தாள். இவருக்கு 80 வயது. இந்தத் தள்ளாத வயதிலும் ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மிக் கல்லில் சட்னி அரைக்கிறார். காலை 5:30 மணிக்கு எழுந்து சட்னி, சாம்பார் செய்கிறார்.

ஆறு மணியளவில் இட்லி அடுப்பைப் பற்ற வைக்கும் அவர், 12 மணி வரைக்கும் இட்லி ஊற்றி விற்கிறார். “அரிசி, பருப்பு, தேங்காய், கடலை, எண்ணெய் இதெல்லாம் சேர்த்து எனக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் செலவாகும். 200 ரூபாய் லாபம் கிடைக்கும். அவ்வளவுதான். சாகும் வரை ஒரு ரூபாய்க்குத்தான் இட்லி விற்பேன். யார் சொன்னாலும் விலையை ஏற்ற மாட்டேன்.

இன்னும் எத்தனை நாட்கள் நான் வாழப்போகிறேன்?” என்று சொல்கிறார் கமலாத்தாள். சிலர் தாங்களாகவே இட்லி எடுத்துச் சாப்பிட்டுச் செல்கிறார்கள். சிலர் காசு கொடுக்கிறார்கள். சிலர் காசு கொடுக்காமல் சாப்பிட்டுச் செல்கிறார்கள். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பதைப் போல அவர் எதையும் கண்டுகொள்ளாமல் இட்லி ஊற்றிக்கொண்டே இருக்கிறார்.

- தொகுப்பு: முகமது ஹுசைன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in