செய்திப்பிரிவு

Published : 01 Sep 2019 11:59 am

Updated : : 01 Sep 2019 11:59 am

 

என் பாதையில்: ஐவரோடு ஒருவரானார்

en-padhaiyil

தங்கள் வீட்டுப் பணிகளில் உதவுகிறவர்களைப் பற்றி வாசகியர் இருவர் நெகிழ்வுடன் எழுதியிருந்ததைப் படித்ததும் 45 ஆண்டுகளாக எங்கள் வீட்டில் வேலைசெய்த ராசம்மாவைப் பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.

அப்போது நாங்கள் நாகை மாவட்டம் கீழ்வேளூரில் இருந்தோம். என் அண்ணன் பிறந்தபோது 1948 வாக்கில் எங்கள் வீட்டுக்கு வேலைசெய்ய வந்தார் ராசம்மா. அதற்குப் பிறகு என் அம்மாவுக்கு நான் உட்பட ஐந்து பிரசவங்கள். ஒவ்வொரு பிரசவத்தின் போதும் கைக்குழந்தையின் துணியைத் துவைப்பதில் தொடங்கி, பிரசவித்த என் தாயையும் சேய்போல் பார்த்துக்கொள்வதுவரை அனைத்தையும் முகம் சுளிக்காமல் செய்வார். தலைமுறை கடந்த பந்தம் என்று சொல்வார்களே அது ராசம்மா விஷயத்தில் நிஜமாகிப்போனது. என் அம்மாவுக்கு மட்டுமல்ல; குழந்தைகளாக இருந்த எங்களுக்குக் குழந்தை பிறந்தபோதும் ராசம்மாதான் அனைத்தையும் கவனித்துக்கொண்டார்.

எங்கள் வீட்டில் விருந்தினருக்குக் குறை இருக்காது. திருமணம், வளைகாப்பு என்று மாற்றி மாற்றி ஏதாவது சுபநிகழ்வுகள் இருந்துகொண்டே இருக்கும். ஆண்களின் வேலை வரவேற்பறையோடு முடிந்துபோகும். பெண்களுக்குத்தானே சமையலறை சாம்ராஜ்ஜியம். மலையாகக் குவிந்துவிடும் பாத்திரங்களையும் மூட்டை மூட்டையாகச் சேர்ந்துகிடக்கும் துணிகளையும் பார்த்து ராசம்மா ஒரு நாளும் மலைத்ததே இல்லை. அதிகமோ குறைவோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் கருமமே கண்ணாக நேர்த்தியாக அவ்வளவு வேலைகளையும் செய்துமுடிப்பார்.

வீட்டுக் கிணற்றில் உப்புத் தண்ணீர் என்பதால் அலுக்காமல் சலிக்காமல் தெருக் குழாயிலிருந்து குடம் குடமாகத் தண்ணீர் தூக்கிவருவார். என் அம்மாவுக்கு உணவுக் குழாயில் பிரச்சினை இருந்ததால் சாப்பிடும்போது சில நேரம் அவருக்கு
மூச்சுத் திணறல் ஏற்பட்டுவிடும். அப்போதெல்லாம் எங்கள் அம்மாவுக்குத் துணையாக இருந்து, அவரை ஆசுவாசப்படுத்துவார். பிறகு பெரிய அறுவை சிகிச்சை முடிந்து அம்மா ஆறு மாதங்கள் ஓய்வில் இருந்தபோது தாயைவிடச் சாலப் பரிந்து கவனித்துக்கொண்ட கருணை உள்ளத்துக்கும் ராசம்மாவே சொந்தக்காரர்.

எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் எங்களுக்கு உறவா இல்லை ராசம்மாவுக்கா என்றே புரியாது. காரணம் வீட்டுக்கு யாராவது வந்திருப்பது தெரிந்ததும் யாரும் சொல்லாமலேயே பால், காய்கறி என அனைத்தையும் வாங்கிக்கொண்டு வந்துவிடுவார். எல்லாம் எழுதிவைத்த மாதிரி நல்லபடியாகவே போனால் நன்றாக இருக்காதுதானே. அதுபோல சில நேரம் என் அம்மாவிடம் கோபித்துக் கொண்டு இரண்டு, மூன்று மாதங்கள் வேலைக்கு வராமல் இருந்துவிடுவார். பிறகு மனசு கேட்காமல் திரும்பி வந்துவிடுவார்.
ஒருமுறை அவர் வேலைக்கு வராமல் இருந்தபோது எனக்கு இரண்டாம் குழந்தை பிறந்திருந்தது. பிரசவத்தின்போது ஏற்பட்ட பிரச்சினையால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டுவிட்டது. கோபித்துக்கொண்டு வராமல் இருந்த எங்கள் பாசக்கார ராசம்மா, என் உடல்நிலை பற்றிக் கேள்விப்பட்டதும் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடிவந்து அழ ஆரம்பித்துவிட்டார். 1980-ல் இது நடந்தது. அதற்குப் பிறகு 1995-ல் கிராமத்தில் இருந்த எங்கள் வீட்டை விற்கும்வரை அவர் தொடர்ந்து வேலைசெய்தார். வீட்டை விற்றபோது எங்கள் குடும்பத்தில் ஒருவரான ராசம்மாவுக்கும் ஒரு தொகையைக் கொடுத்தோம்.
என் பெற்றோரும் ராசம்மாவை வேற்று ஆளாக, வேலை செய்கிறவராக நடத்தியதே இல்லை. அவருடைய மகள், காதல் திருமணம் செய்ய விரும்பியபோது (50 ஆண்டுகளுக்கு முன்) என் தந்தைதான் இரு வீட்டாரையும் அழைத்துப் பேசி, சமரசம் செய்து திருமணம் நடக்க ஏற்பாடு் செய்தார். எங்கள் ஊரை விட்டு நாங்கள் வந்த பிறகும்கூட ராசம்மா இறக்கும்வரை என் சகோதரர்கள் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்குப் புடவைகள் வாங்கிக் கொடுத்து, பண உதவியும் செய்தனர். அது எங்கள் கடமையல்லவா? ராசம்மாவைப் போன்றவர்கள் கிடைப்பது அபூர்வம். இப்போதுகூட என் பேரக் குழந்தைகளிடம் அந்தப் பாசக்கார ராசம்மா பாட்டியைப் பற்றி அடிக்கடி சொல்வதுண்டு. நினைவில் தங்கிவிட்டவரை இப்படி அடிக்கடி யாரிடமாவது பகிர்ந்துகொள்வதன் மூலம் நினைவுபடுத்திக்கொள்வதுதானே நாங்கள் அவருக்குச் செய்யும் மரியாதை?

- பி. லலிதா, திருச்சி.

ஐவரோடு ஒருவரானார்என் பாதையில்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author