Published : 01 Sep 2019 11:14 AM
Last Updated : 01 Sep 2019 11:14 AM

நட்சத்திர நிழல்கள் 21: நேர்கொண்ட பார்வை கொண்ட லலிதா

செல்லப்பா

கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்பார்கள். உண்மையைப் பார்த்தோ கேட்டோ அறிந்துகொள்ள முடியாது. நிதானமாக அலசி, பல கோணங்களிலும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்க வேண்டிய விஷயம் அது. ஒவ்வொரு மனிதரின் நடத்தைக்குப் பின்னும் நியாயமான காரணங்கள் இருக்கும். குறிப்பாக, ஒரு பெண்ணின் நடத்தைக்குப் பின்னணியாக எத்தனையோ காரணங்கள் இருக்கக்கூடும். அவை குறித்து விளங்கிக்கொள்ளாமல் நடத்தையை மட்டும் வைத்து தீர்ப்பை எழுதிவிடலாகாது.

பொதுச் சமூகம் விரும்பத்தகாத விஷயங் களில் ஒரு பெண் ஈடுபட்டால், அவள் எதற்காக அப்படி நடந்துகொண்டாள், அதன் பின்னணிக் காரணம் என்ன, அது நியாயமானதுதானா என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு விடை கண்ட பிறகு, அவள் குறித்து முடிவுசெய்ய வேண்டுமே தவிர நேரில் பார்ப்பதையும் காதால் கேட்பதையும் வைத்துக்கொண்டு சட்டென்று ஒரு முடிவுக்கு வருவது பிழையாகவே முடியும் என்பதைச் சொல்கிறது லலிதாவின் வாழ்க்கை.

இயக்குநர் தரின் ‘அவளுக்கென்று ஓர் மனம்’ (1971) திரைப்படத்தில் லலிதாவின் வாழ்க்கைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக் கின்றன. நடிகை பாரதி அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். லலிதா தன்னை அதிர்ஷ்டம் கெட்டவள் என்றுதான் நம்பினாள். அவள் அப்படி நம்பியது சரிதான் என்ற அளவிலேயே இருந்தன, அவளது வாழ்வின் நிகழ்வுகள். அப்பா, அம்மாவை இழந்து ஆதரவற்ற நிலையில் லலிதா தன் அத்தை வீட்டில் வாழ வேண்டியதிருந்தது.

கல்யாண பரிசு

லலிதா சூட்டிகையான பெண். ஹாக்கி விளையாடுவது, நீச்சல் பயில்வது எனத் தன்னை எல்லாவற்றிலும் ஈடுபடுத்திக்கொண்டவள். அத்தை மகன் கண்ணன் மீது அவளுக்குப் பிரியமிருந்தது. அவனையே கணவனாக அடைய வேண்டும் என்று விரும்பினாள். உயர் நீதிமன்ற நீதிபதியான அவளுடைய மாமாவும் அத்தையும் அதைத் தான் விரும்பினர். ஆனால், லலிதா விஷயத்தில் விதி வேறொரு கணக்குப் போட்டது. அது கண்ணனையும் லலிதாவையும் இணைத்து வைப்பதை ஏனோ விரும்பவில்லை. அதுவரை ஒழுங்கான திசையில் சென்றுகொண்டிருந்த லலிதாவின் வாழ்க்கைப் பாதை மாறத் தொடங்கியதற்கு அதுவும் ஒரு காரணம்.

லலிதாவுடைய கல்லூரித் தோழியான, ஏழைக் குடும்பத்தில் பிறந்த மீனாவை கண்ணன் கைப்பிடிக்கிறான். தான் ஆசையுடன் கைகோத்துச் செல்ல நினைத்திருந்த கண்ணனின் கையைப் பற்றியபடி மீனா வலம்வருகிறாள். ஒரு பெண்ணாக இந்தக் காட்சிகளை எல்லாம் பார்க்கும் லலிதா வெறுமையில் துவண்டு விழுகிறாள். வெறுமைக் குழியிலிருந்து அவளை மீட்கும் கொடியாக வந்து சேர்கிறான் கோபால். அவன் கொடியல்ல, கொடியவன் என்பதைக் காலம் உணர்த்துகிறது. அவன் கண்ணனுடைய தோழன். ஆனால், கண்ணன்போல் சமூகம் விரும்பும் குணங்களைக் கொண்டவனல்ல. இளம் பெண்கள் பலருடன் சுற்றுபவன். தனக்கு எது மகிழ்ச்சியோ அதை மட்டும் செய்பவன். தனது சுகத்துக்காகப் பிறரைப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்காதவன்.

திருமணத்துக்கு முன்னரே மீனாவுக்கு கோபாலைத் தெரியும். அவனது குணமறியாமல் பருவம் தந்த பரவசத்தால் அவனுக்குக் காதல் கடிதம் ஒன்றை வேறு எழுதியிருந்தாள். ஏதோ மோகத்தில் மீனா எழுதிய கடிதம் லலிதாவின் வாழ்வைச் சூறையாடியது விதியின் விபரீத விளையாட்டுத்தான். கோபாலின் சூது அறிந்து மீனா அவனிடமிருந்து விலகிவிட்டாள்.

ஆனால், லலிதாவோ அந்தச் சூதிலிருந்து விலகிட முடியாத அளவு வசமாகச் சிக்கிக்கொண்டாள். கோபால் விரித்த வலையின் விபரீதம் புரியாமல் வெற்றுத் தானியங்களுக்காகச் சென்று அதில் மாட்டிக் கொண்டாள் லலிதா. அதிலிருந்து விடுபட அவள் கடுமையான விலையைத் தர வேண்டியதிருந்தது.

சுமைதாங்கி

கோபாலின் சுயரூபம் அறிந்து அவனிடமிருந்து லலிதா விலக முற்படுகையில் மீனா தனக்கு எழுதிய கடிதத்தைக் காட்டி மிரட்டு கிறான் கோபால். ‘கல்யாணமான ஒரு பெண் தன் மனசால ஒருத்தன நெனைக்கக் கூடாது; நெனச்சிருக்கவும் கூடாது; அவதான் உத்தமின்னு ஹிந்து தர்மத்தில் சொல்லியிருக்கு’ என்று கோபால் சொல்லும்போது, ‘அப்படிப் பார்த்தால் உலகத்துல யாருமே உத்தமியா இருக்க முடியாது’ என்று சொல்லும் அளவுக்கு லலிதாவுக்குப் புரிதல் உள்ளது. ஆனால், உலகத்தினர் அதை அவ்வளவு சரியாகப் புரிந்துகொள்வார்களா? அந்த ஒரு கடிதமே மீனாவின் வாழ்வை அதலபாதாளத்தில் தள்ளிவிடுமே எனப் பயப்படுகிறாள் லலிதா. எந்த விலை கொடுத்தாவது அதைத் தடுத்து நிறுத்திட வேண்டும் எனத் துணிகிறாள். இன்று ஹிந்து தர்மத்தை முன்னிட்டுப் பேசப்படும் இப்படி ஒரு வசனத்தை, எளிதாக எடுத்துக்கொள்வார்களா என்றே தெரியவில்லை.

மீனாவின் கடிதத்தை கண்ணனோ மாமாவோ அத்தையோ படித்துவிட்டால் அதனால் மீனாவின் வாழ்க்கை மட்டுமல்ல; அந்தக் குடும்பத்தின் மானமே போய்விடும் என அஞ்சுகிறாள். அதற்காக என்ன செய்யவும் துணிகிறாள் லலிதா. இந்தத் துருப்புச் சீட்டை வைத்தே கோபாலும் லலிதாவைத் தன் விருப்பப்படி ஆட்டிவைக்கிறான். நீதிபதியான மாமாவோ லலிதாவைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாடுகிறார். எந்தக் குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்ற லலிதா போராடுகிறாளோ அந்தக் குடும்பத்தின் மானத்தை அவள் கெடுப்பதாக எழும் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல வழியில்லை லலிதாவுக்கு. அவள் தன்னை நிரூபித்தால் மீனா அம்பலப்பட்டுப் போவாள். மீனாவைக் காப்பாற்ற தன்னை இழப்பதைத் தவிர வேறு ஒரு வழியும் புலப்படவில்லை லலிதாவுக்கு.
லலிதாவின் நல் வாழ்வுக்கென தேவி பூஜை ஒன்றுக்கு வீட்டில் ஏற்பாடு செய்கிறாள் மீனா. அன்று குறித்த நேரத்தில் வந்துவிட வேண்டும் என்று லலிதாவிடம் கோருகிறாள் மீனா. கண்டிப்பாக வந்துவிடுவதாகச் சொல்கிறாள் லலிதா. ஆனால், கோபாலோ அன்று தன் நண்பர்களுக்கு பார்ட்டி ஒன்று தரப்போவதாகவும் தன்னுடன் லலிதா இருந்தே ஆக வேண்டும் என்றும் வற்புறுத்துகிறான். லலிதா மறுத்தபோது வழக்கம்போல் கடிதத்தை ஆயுதமாக்குகிறான். நிராயுதபாணியாகிறாள் லலிதா. ஒரு புறம் குடும்ப மானத்தைக் காப்பாற்ற மீனா கடவுளிடம் கையேந்துகிறாள். மறுபுறம் அதே குடும்ப மானத்தைக் காப்பாற்ற லலிதா கயவனிடம் கைகட்டி நிற்கிறாள்.

வைர நெஞ்சம்

நேருக்கு நேராக நிறுத்தி லலிதாவைக் கேள்விகேட்க அவளுடைய மாமாவுக்குத் துணி வில்லை. அவளுக்கு எல்லாம் தெரியும், அவள் செய்கையில் ஏதாவது நியாயம் இருக்கும் என்றே அவர் நம்புகிறார். லலிதாவுக்குத் தன் வாழ்வில் நடந்தேறும் சிக்கல்களுக்கு இதுதான் காரணம் என்று சொல்ல இயலவில்லை. இரண்டுக்கும் இடையே மாட்டிக்கொண்ட லலிதாவின் வாழ்வு தொடர்ந்து சிக்கலாகிக்கொண்டே வருகிறது. கோபால் ஓர் இக்கட்டில் மாட்டிக்கொள்ள, அதிலி ருந்து தான் விடுபட பணம் கேட்டு லலிதாவை மிரட்டுகிறான். அவள் மறுக்கவே மீனாவை நாடப் போவதாகச் சொல்கிறான். வேறு வழியற்ற சூழலில் கோபாலைக் கொன்றுவிடுகிறாள் லலிதா. கடிதத்தையும் எரித்துவிடுகிறாள்.

ஆதரவற்ற லலிதாவை நல்லபடி வளர்க்க முடியாமல் போய்விட்டதே என அந்த நீதிபதி வருந்துகிறார். ஆனால், லலிதா எதற்காக அப்படி நடந்துகொண்டாள் என்பதை அவர்கள் ஒருவருமே அறிந்திருக்கவில்லை. தனது வாழ்வைக் கொடுத்து குடும்ப மானத்தைக் காப்பாற்றிய குலதெய்வமாக நிமிர்ந்து நின்றாள் லலிதா. கருவறைக்குள் தெய்வத்தை வைத்து கதவை இழுத்துப் பூட்டுவதுபோல் காலம் லலிதாவைச் சிறையில் வைத்துப் பூட்டியது. அடைக்கலம் தேடி நீதிபதி வீட்டுக்கு வந்த லலிதாவைக் குற்றவாளியாக்கி அனுப்புகிறது காலம். லலிதாவின் மனத்தை நிச்சயம் நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். கண்ணனையோ மீனாவையோ அந்தக் குடும்பத்தினரையோ பார்த்தால் லலிதாவின் நல்ல குணம்பற்றிச் சொல்வீர்கள் அல்லவா?

(நிழல்கள் வளரும்)

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@hindutamil.co.in

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x