Published : 01 Sep 2019 11:05 AM
Last Updated : 01 Sep 2019 11:05 AM

எல்லாம் நலமே 21: செயற்கைக் கருத்தரிப்பில் என்ன நடக்கிறது?

அமுதா ஹரி

கருவுறுதல் தொடர்பாக இரண்டு அடிப்படை விஷயங்களை மனத்தில் தொடர்ந்து பதியவைத்துக்கொள்ள வேண்டும். எந்தவிதக் கருத்தடைச் சாதனங்களையும் முறைகளையும் பயன்படுத்தாமல் 12 மாதங்களில் ஒரு பெண் கர்ப்பமடையவில்லை என்றால் மட்டுமே மருத்துவரை அணுக வேண்டும். அதற்கு முன்னர் அவசரப்படத் தேவையில்லை.

இரண்டாவது, பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் கணவன், மனைவி இருவரும் இணைந்து மருத்துவரிடம் செல்ல வேண்டும். இயற்கையான வழியில் கருத்தரிக்க இயலாதபோது மேற்கொள்ளப்படும் முயற்சிதான் ஐ.வி.எஃப். (In Vitro Fertilisation). அதாவது உடம்புக்கு வெளியே கரு உருவாவது என்று பொருள்.

பெண்ணின் கருமுட்டையையும் ஆணின் விந்தணுவையும் எடுத்து, பரிசோதனைக் குழாயில் கருவை உருவாக்குகிறோம். இப்படிப் பிறப்பதால்தான் அந்தக் குழந்தையை டெஸ்ட் டியூப் பேபி என்கிறோம். ஏதோ ஒரு காரணத்தால் சில ஆண்டுகள் குழந்தை பிறக்கவில்லை. சினைக்குழாய் பிரச்சினை, ஆணுக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாக உள்ளது அல்லது விந்தணு விரைந்து செல்லவில்லை என எந்தக் காரணமாக வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படியான பிரச்சினைகள் இருக்கிறவர்கள் ஐ.வி.எஃப். மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இது பற்றி ஆண், பெண் இருவரும் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும்.

இருவர் ஒத்துழைப்பும் வேண்டும்

35 வயதில் இருந்த ஒரு தம்பதி குழந்தைப்பேறின்மைப்பிரச்சினைக்காக என்னிடம் வந்தார்கள். இயற்கையாகக் கருத்தரிப்பதில் அவர்களுக்குப் பிரச்சினைகள் இருந்தன. அவர்களிடம் ஐ.வி.எஃப். முறை பற்றி விளக்கிச் சொன்னேன். சொல்லும்போதே அந்தப் பெண் ஆர்வமில்லாமல் இருந்ததுபோல் இருந்தது. அவரைத் தனியாகப் பரிசோதிக்க வேண்டும் என்று சொல்லி, கணவரை வெளியே அனுப்பிவிட்டுப் பேசினேன். ஹார்மோன் ஊசி போடுவது, தொடர் சிகிச்சைக்கு வருவது போன்றவற்றில் அவருக்கு விருப்பமில்லை என்று தெரிந்தது. பலரிடம் இது குறித்துப் பேசியிருக்கிறார். சிலர் சிகிச்சைக்குத் தொடர்ந்து செல்ல வேண்டியிருக்கும் என்றும் செலவு அதிகம் ஆகும் என்றும் சொன்னார்களாம். சிகிச்சைக்கான பணத்தில் பாதியை அவரது பிறந்த வீடுதான் தர வேண்டும் என்று கணவர் வீட்டில் சொல்லியிருக்கிறார்களாம்.

அவர் அப்படிச் சொன்னதும் எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மருத்துவரீதியான விஷயங்களை நான் கையாளலாம். மற்ற விஷயங்களில் எப்படித் தலையிட முடியும்?

பிறகு கணவரைக் கூப்பிட்டு சிகிச்சையில் உள்ள முறைகள், வெற்றி சதவீதம், ஆகக்கூடிய செலவு எல்லாவற்றையும் சொல்லி மனைவியிடம் ஆலோசித்துவிட்டு அடுத்த வாரம் வரச் சொன்னேன். அவர்கள் மீண்டும் வரவே இல்லை. ஐ.வி.எஃப். மாதிரியான செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறையில் கண்டிப்பாகக் கணவன், மனைவி இருவருடைய ஒத்துழைப்பும் மிக அவசியம்.

சோதனைக்குழாய் சிகிச்சை முறை

ஐ.வி.எஃப். முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பாகப் பலருக்கும் பலவிதச் சந்தேகங்கள் இருக்கின்றன. இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது எனக் கணவன், மனைவி இருவரும் தீர்மானித்துவிட்டால் மாதவிடாய்ச் சுழற்சி வந்த முதல் நாளிலேயே பெண்ணை இந்த சிகிச்சையில் சேர்த்துக்கொள்கிறோம். கருமுட்டை வளர்ச்சிக்காக அவருக்கு ஹார்மோன் ஊசிகள் போட ஆரம்பிப்போம். இந்த ஹார்மோன் ஊசிகள், கரு முட்டையின் வளர்ச்சியை அதிகரிக்கும். இதனால், மாதம் ஒன்றுக்கு ஒரு கருமுட்டை முதிர்ச்சி அடைவதற்குப் பதிலாகப் பல முட்டைகள் வளரும். சிலருக்கு 25 முட்டைகள் வரைகூட முதிர்ச்சி அடைய வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு இரண்டு, மூன்று மட்டுமே வரலாம். எவ்வளவு முட்டைகள் வருகின்றன என்பது சினைப்பையின் இயக்கத்தைப் பொறுத்தது. சினைப்பையின் ஆற்றலையொட்டி சிலருக்குத் தினம் ஊசிபோட வேண்டியிருக்கலாம். சிலருக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, மூன்று நாட்களுக்கு ஒரு முறை என ஊசிபோட வேண்டியிருக்கலாம். இந்த முட்டைகளை ஒரு குறிப்பிட்ட அளவுவரை வளர விட்டுவிட்டு, பிறகு அவற்றைத் தூண்டிவிடுவதற்கான ஊசியைப் போடுவோம். இந்த ஊசியைப் போட்ட 36 மணி நேரத்துக்குள் கருமுட்டை முதிர்ச்சியடைந்து வெளியே வரத் தயாராகிவிடும்.

முதிர்ச்சியடைந்த அந்தச் சினைமுட்டைகளை எடுத்து அவற்றின் வளர்ச்சி, தரம் பற்றி ஆராய்வோம். இதே நேரத்தில் ஆணிடமிருந்து விந்தணுவைச் சேகரித்து வைத்திருப்போம். வெளியூர்களில் இருப்பவர்கள் என்றால் அவர்களிடமிருந்து விந்தணுவைச் சேகரித்து உறைநிலையிலும் வைக்கலாம். இப்போது இந்தச் சினைமுட்டையையும் விந்தணுவையும் சோதனைக்குழாய்க்குள் வைத்து கரு உருவாக விடுவோம்.

உடல் ஏற்றுக்கொள்ள வேண்டும்

சில நேரம் முட்டைகள் கடினமாக இருக்கும். அல்லது விந்தணுக்கள் சோர்வாகவோ சத்துக்குறைவாகவோ இருக்கும். அப்படியிருந்தால் அவை முட்டையைத் துளைத்து நுழையாது. அதுபோன்ற நேரத்தில் விந்தணுவை எடுத்து, சினைமுட்டைக்குள் வைப்போம். இப்படிக் கரு உருவாகிறபோது சில நேரம் 20 முட்டைகள்கூடக் கருவாக உருவாகிவிடும். ஆனால், அவற்றில் தரமானதைத் தேர்ந்தெடுத்து ஒன்று அல்லது இரண்டை மட்டும் எடுத்துப் பெண்ணின் கருப்பைக்குள் வைப்போம்.
கரு உருவான அதே மாதத்தில் கருவைக்கருப்பையில் வைக்க முடியலாம். சில நேரம் கருவைச் சுமக்க வேண்டிய படுக்கை போன்ற அமைப்பு பெண்ணின் கருப்பையில் சரியாக உருவாகாமல் இருந்தால் கருவை உறைநிலையில் வைத்துவிட்டு, கருவைத் தாங்கும் நிலைக்குக் கருப்பை வந்ததும் உறைநிலையிலுள்ள கருக்களில் அதிகபட்சமாக மூன்றைக் கருப்பையில் வைப்போம். இந்தக் கரு நன்றாக வளர்வதற்கான மாத்திரைகளைத் தருவதுடன் ஊசியும் போடுவோம். 15 நாட்கள் கழித்து கருத்தரிப்பு நன்றாக இருக்கிறதா என்று ரத்தப் பரிசோதனை மூலமாகவோ ஸ்கேன் மூலமோ பார்ப்போம். நாம் என்னதான் செயற்கை முறை மூலம் இவற்றையெல்லாம் செய்தாலும் சில நேரம் உடல் அதை நிராகரித்து வெளியேற்றிவிடலாம்.

பணம் கொடுத்துவிட்டோம், இவ்வளவு ஊசி போட்டார்கள், தொடர்ந்து சிகிச்சை பெற்றோம், ஆனால், எதுவும் நடக்கவில்லை என்று வெறுப்படையவோ விரக்தியாகவோ கூடாது. இந்த முறை எல்லோருக்கும் நூறு சதவீதம் வெற்றிதரும் என்று சொல்ல முடியாது. என்ன செய்தாலும் கடைசியாக இது வெற்றியடைவது உடலின் ஒத்துழைப்பில்தான் இருக்கிறது.

(நலம் நாடுவோம்)

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.

தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x