Published : 01 Sep 2019 10:50 AM
Last Updated : 01 Sep 2019 10:50 AM

முகங்கள்: ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரா?

கவி

பிறக்கும் குழந்தை செல்பி எடுத்தபடியே உலகைத் தரிசித்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அந்த அளவுக்கு இணையமும் தொழில்நுட்பமும் பெரியவர்களை மட்டுமல்ல, குழந்தைகளையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கியிருக்கின்றன. குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதே அரிதாக இருக்கும்போது குழந்தைகளுக்கு எங்கிருந்து கதை சொல்வது? அதுவும் தனிக் குடும்பங்கள் அதிகரித்துவிட்ட இந்நாளில் கதை கேட்டு வளரும் குழந்தைகள் மிகக் குறைவு. கேட்கிறவர்கள் இல்லாததால் கதைசொல்லிகளும் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக அத்திபூத்தாற்போல் இருக்கும் கதைசொல்லிகளில் ஜெயலட்சுமியும் ஒருவர்.

மாயாஜாலக் கதைகளை விஞ்சிவிடுகிற செல்போன் விளையாட்டுகள் இருக்கும் போது, பாட்டியோ தாத்தாவோ சொல்கிற கதைகளைக் குழந்தைகள் எப்படிக் கேட்பார்கள்? ஆனால், அப்படியான குழந்தை களையே செல்போன் மோகத்திலிருந்து மீட்டு, கதைகேட்க வைத்திருக்கிறார் ஜெயலட்சுமி. இவர் கள்ளக்குறிச்சி தண்டலை கிராமத்தில் வசிக்கிறார்.

நேர்த்தியான தமிழ் உச்சரிப்பும் தேவாரம், திருவாசகப் பாடல்களைப் பாடியபடி கதைகளை சுவாரசியம் குன்றாமல் சொல்வதும் குழந்தைகளை ஈர்த்திருக்கின்றன. தஞ்சை மாவட்டம் திருப்புறம்பியத்தைச் சேர்ந்த இவருடைய தாய்வழிக் குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாகக் கதைகள் சொல்வதில் சமர்த்தர்கள். இவருடைய தாத்தா சுந்தரராஜ் அந்தப் பகுதியில் புகழ்பெற்ற சித்த வைத்தியர். அவர் சொல்லும் கதைகளைக் கேட்க வயது வித்தியாசமின்றிச் சிறுவர்களும் பெரியவர்களும் கூடுவார்களாம். தன்னுடைய அம்மா தனலட்சுமியிடமிருந்து கதை சொல்லும் கலை தாய்வீட்டுச் சீதனமாக ஜெயலட்சுமிக்குக் கிடைத்திருக்கிறது. ஜெயலட்சுமி தமிழ் பேசுவதைக் கேட்பதே ஒரு இனிய அனுபவம்.

“அம்மா மாதிரி கதைசொல்ல யாராலும் முடியாது. அம்மா சொல்லும் பட்டி விக்கிரமாதித்தன் கதைகளை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. பட்டி விக்கிரமாதித்தன் காடாறு மாதம் நாடாறு மாதம் நாட்டை ஆண்ட கதை நமக்கெல்லாம் தெரியும். பட்டி ஒரு மதியூக மந்திரி. அவன் எப்படி விக்கிரமாதித்தனுக்கும் சேர்த்து 2000 வருட ஆயுளை காளியிடமிருந்து தனது சாமர்த்தியமான வாதத் திறமையால் வரமாக வாங்கினான் என்பதை அம்மா அவ்வளவு சுவையாகச் சொல்லுவார். கதைக்குள் கதையாக விரிந்துகொண்டே போகும் விக்கிரமாதித்தன் கதைகள் நமக்குள் எத்தனையோ கற்பனைகளை விதைத்துவிட்டுப் போகும். நானும் பட்டி விக்கிரமாதித்தன் கதைகளை முடிந்தவரை சொல்லித்தான் பார்க்கிறேன். ஆனாலும், அம்மாவை விஞ்ச முடியவில்லை” என்று சொல்லும் ஜெயலட்சுமி, திருத்தமான தமிழ்ப் பேச்சைத் தன் அம்மாவிடமிருந்து கற்றதாகச் சொல்கிறார். தான் குழந்தைப் பருவத்தில் கேட்ட கதைகளை இந்தக் காலக் குழந்தைகளுக்கு ஏற்றபடி மாற்றிச் சொல்கிறார்.

“என் கதையிலும் மன்னர் வேட்டைக்குப் போவார். மானையும் முயலையும் பறவைகளையும் வேட்டையாடுவார். ஆனால், நரி குறுக்கிட்டு இதெல்லாம் பாவமில்லையா என்று மன்னரைக் கேட்கும். மன்னர் மனம் மாறி உயிர்க் கொலையைக் கைவிடுவதாக மாற்றிச் சொல்லுவேன். என் பேத்தியும் என்னை மாதிரியே பாட்டி வடை சுட்ட கதையை மாற்றிச் சொல்லுகிறாள். இந்தக் கதையில் வடையைத் திருடிக் கொண்டு போன காக்கையிடம் பாட்டி அழுவதாகவும் வடையைத் திருப்பித் தருமாறும் நரி கெஞ்சுகிறது. காக்கை இரக்கப்பட்டு வடையைத் திருப்பி கொடுத்து விட்டதாம் என்று என் பேத்தி கதை சொன்னபோது, எனக்கு ஒரு வாரிசு வந்தாச்சு என்று சந்தோஷப்பட்டேன்” என்கிறார் ஜெயலட்சுமி.

செல்போனில் மூழ்கியிருக்கும் குழந்தைகளை மீட்கப் பொறுமை வேண்டும் என்று சொல்லும் ஜெயலட்சுமி, கதை கேட்கும்படி குழந்தைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்க வேண்டும் என்கிறார். கதைகளைக் காலத்துக்கு ஏற்ப மாற்றிச் சொல்லும் வித்தை கைவரப்பெற்றிருக்கிறார் ஜெயலட்சுமி. ‘ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி’ என்று குரலை ஏற்றி இறக்கி முகத்தில் பாவனையோடு ஜெயலட்சுமி சொல்ல, சுற்றி அமர்ந்திருக்கும் குழந்தைகள் ஆச்சரியத்தில் கண்களை அகலத் திறந்தபடி கேட்கிறார்கள். செல்போனின் பிடியிலிருந்து குழந்தைகளை மீட்க கதையும் ஒரு கருவி என்பதை ஜெயலட்சுமி தன் கதைகள் மூலம் நிரூபிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x