

டி. கார்த்திக்
பி.வி. சிந்து. தேசம் இப்போது இந்தப் பெயரைத்தான் உச்சரித்துக் கொண்டிருக்கிறது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்தாம் முறையாக பதக்கம் வென்றிருக்கும் பி.வி. சிந்து, முதன்முறையாகத் தங்கப் பதக்கத்தை வென்று பாட்மிண்டன் உலகில் இந்தியாவின் பெயரை உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.
2016 ஒலிம்பிக் போட்டியில் சிந்து வென்ற வெள்ளிப் பதக்கத்துக்கு இணையாக, அவர் வென்ற இந்தத் தங்கப் பதக்கம் ஆராதிக்கப்படுகிறது. சிந்துவின் இந்த வெற்றியின் பின்னணியில் 42 ஆண்டு கால இந்திய பாட்மிண்டனின் பயணமும் அடங்கியிருக்கிறது.
முதல் பதக்கம்
இந்தியப் பெண்கள் 42 ஆண்டுகளாக உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றிருந்தாலும், 36 ஆண்டுகள் கழித்துத்தான் இந்தியப் பெண் ஒருவர் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வெல்லும் அரிய வாய்ப்பு கிடைத்தது. உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் பெயரை முதன்முதலில் இடம்பெறச் செய்தவரும் இதே பி.வி. சிந்துதான். 2013-ல் முதன்முறையாக இத்தொடரின் ஒற்றையர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். அடுத்த ஆண்டும் அவரால் வெண்கலமே வெல்ல முடிந்தது.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதற்கு இணையானது. எனவே, தங்கப் பதக்கம் வெல்ல சிந்து தொடர்ந்து முயன்றுவந்தார். 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டிவரை முன்னேறியவர் ஜப்பானின் நசோமி ஒகுஹரா, ஸ்பெயினின் கரோலினா மரின் ஆகியோரிடம் தங்கப் பதக்கத்தை இழந்தார். இரண்டு முறையும் வெள்ளிப் பதக்கத்தோடு நாடு திரும்பினார். இந்தப் போட்டிகளில் 2015-ம் ஆண்டைத் தவிர்த்து எல்லாத் தொடர்களிலும் முத்திரை பதித்திருக்கிறார்.
ஏமாற்றமும் ஏற்றமும்
உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் தொடர்ந்து இரு முறை தோற்றதால் சிந்து கடும் ஏமாற்றத்துக்கு ஆளாகியிருந்தார். “முதல் முறை இறுதிப் போட்டியில் தோற்றபோதும் மனது வலித்தது. இரண்டாம் முறையும் தோற்றபோது சுக்குநூறாக உடைந்துபோனேன். அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என்று தனது ஆற்றாமையை சிந்து வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அந்தத் தோல்விகள் சிந்துவைத் தொட்டுப் பார்த்தனவே தவிர, அசைத்துவிடவில்லை.
தன் முறைக்காக வைராக்கியத்துடன் சிந்து காத்திருந்தார். அந்த வைராக்கியம் இப்போது பலனளித்துவிட்டது. இந்த முறை தரவரிசையில் முன்னணியில் இருந்த வீராங்கனைகளை வீழ்த்திதான் இறுதிப் போட்டிக்கு சிந்து முன்னேறினார். அதேபோல ஒவ்வொரு போட்டியிலும் எதிர்த்து ஆடிய வீராங்கனைகளின் புள்ளிகளுக்கும் சிந்துவின் புள்ளிகளுக்கும் அதிக வித்தியாசம் இருந்ததையும் பார்க்க முடிந்தது. வெல்ல வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு ஒவ்வொரு போட்டியையும் அவர் ஆக்ரோஷமாகவே எதிர்கொண்டார்.
கடும் பயிற்சி
2017-ல் யாரிடம் தங்கப் பதக்கத்தை இழந்தாரோ, அதே வீராங்கனையைத்தான் இறுதிப் போட்டியில் சிந்து எதிர்கொண்டார். ஜப்பானின் நசோமி ஒகுஹராவை அவர் வீழ்த்திய முறை சாதாரணமானதல்ல. சிந்துவின் ஆவேசமான ஷாட்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் மோசமாகத் தோற்றார் ஒகுஹரா. அடுத்த கணமே, சிந்துவின் இந்த அபார வெற்றியை தேசம் தனக்குரியதாக சுவீகரித்துக்கொண்டது.
இந்திய பாட்மிண்டனின் முகமாக மாறிவிட்ட சிந்துவின் இந்த வெற்றிக்கு அவருடைய கடுமையான உழைப்பு மட்டுமே ஒரே காரணம். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற பிறகு, அவர் நாள்தோறும் செய்யும் உடற்பயிற்சிகள் அடங்கிய காணொலி வெளியானது. உடலளவில் பலமான ஆண்களே களைத்துப்போகும் கடினமான உடற்பயிற்சிகளைக்கூட, அதில் மிக எளிதாகச் செய்து சிந்து அசரடித்திருந்தார். கடின உழைப்பு எப்போதுமே வெற்றியைத் தேடித் தரும் என்பதை மீண்டும் ஒரு முறை உணத்தியிருக்கிறார் சிந்து.
உலகத் தரவரிசையில் முதலிடம் பிடிக்க வேண்டும்; ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்பவை மட்டுமே சிந்துவின் பட்டியலில் விடுபட்டு நிற்கும் அம்சங்கள். உலக சாம்பியன்ஷிப்பையே அவர் அசத்தலாகக் கைப்பற்றியிருப்பதை வைத்துப் பார்க்கும்போது, இந்தச் சவால்களும் அவரது உழைப்புக்குத் தலைவணங்கும் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?
அழுத்தமான தடங்கள்
பி.வி. சிந்து முதன்முறையாக உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதைப் போல மற்ற விளையாட்டுகளில் இந்திய வீராங்கனைகள் பதித்த தடங்கள்:
கர்ணம் மல்லேஸ்வரி: ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டி யில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை (2000). ஒலிம்பிக்கில் இந் தியப் பெண் ஒருவர் பெற்ற முதல் தனிநபர் பதக்கம்.
ஹீனா சித்து: உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை.
ஸ்வப்னா பர்மன்: 2018 ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை.
மிதாலி ராஜ்: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் உலக அளவில் இரண்டாயிரம் ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை (2018).
ஹிமா தாஸ்: 20 வயதுக்குட்பட்ட உலகத் தடகளப் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண்.
தீபிகா பள்ளிக்கல்: 15 வயதுக்கு உட்பட்ட ஐரோப்பிய - ஆசிய ஸ்குவாஷ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை.
கிருஷ்ண பூனியா: 2010 காமன்வெல்த் வட்டெறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை.
மேரிகோம்: 2012 லண்டன் ஒலிம்பிக்கில் குத்துச் சண்டையில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. ஆறு முறை உலகக் குத்துச்சண்டை சாம்பியனான உலகின் ஒரே வீராங்கனையும்கூட.
வினேஷ் போகத்: ஆசிய விளையாட்டுப் போட்டி மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை.
சாக்ஷி மாலிக்: 2016 ஒலிம்பிக்கில் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற இந்திய முதல் வீராங்கனை.