Published : 25 Aug 2019 10:31 AM
Last Updated : 25 Aug 2019 10:31 AM

என் பாதையில்: பெண்களிடம் ஏன் இல்லை ஒற்றுமை?

வேலூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தேன். ரயில் காட்பாடியை வந்தடைந்ததும் நாங்கள் அமர்ந்திருந்த பெண்கள் பெட்டியில் ஆண்கள் சிலர் ஏறினர். இது பெண்கள் பெட்டி, ஆண்கள் ஏறக் கூடாது என்று நாங்கள் சொல்லியும் அவர்கள் கேட்கவும் இல்லை. இறங்கி வேறு பெட்டிக்கு மாறவும் இல்லை. அவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த நிறுத்தங்களில் எங்களது பெட்டி ஆண்கள் வசமானது. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டு ரயில்வே காவலரிடம் புகார் சொல்லிவிட்டேன். புகார் சொன்ன பிறகும்கூட அவர்கள் தொடர்ந்து பெண்கள் பெட்டியிலேயே பயணம் செய்தனர்.

அரக்கோணம் வந்ததும் ரயில்வே காவலர்கள் வந்து ஆண்களை அழைத்துச் சென்றனர். அப்போது எங்களுடன் இருந்த பெண் ஒருவர் எங்களிடம் சண்டைபோட ஆரம்பித்துவிட்டார். அதுவும் என்னைப் பார்த்து, “என் புருஷன் உன்னை என்ன பண்றாரு? கையையா புடிச்சான்?” என்று கொச்சையாக வசைபாட ஆரம்பித்தார். நானும் அந்த அம்மாவிடம், “இது பெண்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டிய பெட்டி. இதில் ஆண்களுக்கு அனுமதி இல்லை. நீங்கள் உங்கள் கணவரிடம் சொல்லி அவரைப் பொதுப் பெட்டிக்கு அனுப்பியிருக்கலாமே” என்று பொறுமையாகச் சொன்னேன். ஆனால், பலனில்லை. அந்த அம்மா மீண்டும் என்னை வசைபாட ஆரம்பித்துவிட்டார்.

பெண்கள் தங்களைச் சார்ந்த ஆண்கள் தவறுசெய்தால் தட்டிக் கேட்பதில்லையா? பிறர் தவறு செய்தால் மட்டும் எதிர்க்கும் உறுதி, தன் வீட்டு ஆண்கள் என்றவுடன் மட்டும் ஏன் குறைந்துவிடுகிறது? என்னை ஆண்கள் திட்டுவதைக்கூடப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பெண்களுக்காக நான் செய்த செயலால் பெண்களிடமிருந்தே திட்டு கிடைத்ததை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

தங்களுக்கு நெருக்கமான ஆண்கள் தவறு செய்வதை இன்று பெண்கள் பலர் கண்டுகொள்வதில்லை. சொல்லப்போனால் அதை மறைக்கத்தான் செய்கிறார்கள். இதுவொரு சாதாரண சம்பவம். ஆனால், பாலியல் வழக்குகள் பெரும்பாலானவற்றில் ஆண்களைச் சம்பந்தப்பட்ட வீட்டுப் பெண்கள் காக்கத்தான் நினைக்கிறார்கள்.
பெண்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதாலேயேதான் ஆண்கள் தந்திரமாக நுழைந்துவிடுகிறார்கள் அல்லது தப்பித்துவிடுகிறார்கள்.

ஒருவேளை என்னுடன் பயணம் செய்த அந்தப் பெண், “இது பெண்கள் பெட்டி. நீங்கள் பொதுப் பெட்டியில் ஏறிக்கொள்ளுங்கள்” என்று சொல்லித் தன் கணவரை அனுப்பியிருந்தால் பிரச்சினையே இல்லை. அந்த இடத்தில் பெண்களின் ஒற்றுமை ஓங்கியிருக்கும். ஆண்களும் பெண்களின் ஒற்றுமையைக் கண்டு அஞ்சி ஒதுங்கியிருப்பார்கள். பெண்கள் எந்த இடத்திலும் யாருக்காகவும் நியாயத்தை விட்டுத்தராமல் ஒற்றுமையுடன் இணைந்து நிற்க வேண்டும்.

- பவித்ரா தேவி, ஓமகுப்பம்,
வாணியம்பாடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x