Published : 18 Aug 2019 10:22 AM
Last Updated : 18 Aug 2019 10:22 AM

சென்னைப் பெண்கள்: ரெய்னியில் பிறந்த வடசென்னைக்காரர்கள்

நிவேதிதா லூயிஸ்

வடசென்னையில் பிறந்தவர்கள் யாரிடமாவது, “நீங்கள் பிறந்த மருத்துவமனை எது?” என்று கேட்டுப் பாருங்கள். நூற்றுக்குத் தொண்ணூறு பேர் சிறு புன்னகையுடன், “நம்ம ரெய்னியிலதான்” என்று சொல்வார்கள். கிட்டத்தட்ட 130 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனை தொய்வில்லாமல் இயங்கிக்கொண்டிருப்பது சாதாரண விஷயமல்ல.

கொல்லவர் அக்ரஹாரம் சாலையில் நூற்றாண்டு வரலாற்றைத் தாங்கி நிற்கிறது ரெய்னி மருத்துவமனை. பளபளவென மின்னும் புதிய வார்டுகளுக்கு இடப்புறம் சோகையாகக் கவனிப்பின்றிக் கிடக்கும் பழைய கட்டிடத்தின் முன் கம்பீரமாக நிற்கிறது மார்பளவுச் சிலை ஒன்று. டாக்டர் அலெக்சாண்டிரினா மட்டில்டா மக்ஃபெயில் என்ற மகத்தான பெண்ணின் நினைவாக இந்த நகரில் இருக்கும் ஒரே மிச்சம் இதுதான். சென்னையைச் சேர்ந்த பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் 40 ஆண்டுகள் ஓய்வின்றி ஓடிய கால்கள் அலெக்சாண்டிரினாவுடையவை.

பத்தில் ஒருவர்

1888-ல் 28 வயதில் மருத்துவப் படிப்பை இங்கிலாந்தில் முடித்த கையோடு இந்தியா புறப்பட்டு வந்தவர் மக்ஃபெயில். அப்போதைய ஸ்காட்டிஷ் மிஷன் மூலம் வெளிநாட்டு மருத்துவப் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்த பெண் மருத்துவர்கள் பத்தே பேர். அதில் இந்தியா வந்த ஒரே பெண் மக்ஃபெயில். ராயபுரம் ‘உலக மீட்பர் ஆலயம்’ அப்போதைய ஸ்காட்டிஷ் மிஷனால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1888-ல் ராயபுரத்தில் கால் பதித்த டாக்டர் மக்ஃபெயில் தங்குவதற்காகச் சிறு பங்களா ஒன்று ஒதுக்கப்பட்டது.

அன்றைய மதராஸில் பெண்களுக்குத் தனி மருத்துவமனைகள் அதிகம் கிடையாது. எழும்பூர் மகளிர் குழந்தைகள் மருத்துவமனை, திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனை ஆகிய இரண்டு மட்டுமே அப்போது மருத்துவப் பணியாற்றி வந்தன. குழந்தைப்பேறு பெரும்பாலும் வீடுகளில்தான் நடக்கும். அதில் தாய்-சேய் மரணம் என்பதும் வெகு சாதாரண நிகழ்வாக இருந்தது. மருத்துவ சேவையை நாடிச் செல்லும் அளவுக்குப் பணமோ போக்குவரத்து வசதியோ இல்லாத வடசென்னைப் பெண்களின் மீது மக்ஃபெயிலின் பார்வை விழுந்தது.

அடுத்தடுத்து பிள்ளைப்பேற்றில் இறக்கும் பெண்களைக் கண்டு மனம் வாடிய மக்ஃபெயில், தன் பயன்பாட்டுக்கு எனத் தரப்பட்டிருந்த பங்களாவில் இரு அறைகளை ஒதுக்கி 12 படுக்கைகள் கொண்ட சிறு டிஸ்பென்சரியை 1890-ல் தொடங்கினார். மளமளவென்று கூட்டம் குவியத் தொடங்கியது. மிஷனரி என்பதால் லாப நோக்கம் எதுவும் இன்றி மருத்துவப் பணி செய்துவந்தார் மக்ஃபெயில். அவருடைய தோழி கிறிஸ்டினா ரெய்னி, 19-ம்
நூற்றாண்டின் இறுதியில் மதராஸ் வந்தார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல மருத்துவரான ஹேரி ரெய்னியின் மகளான கிறிஸ்டினா, மக்ஃபெயிலின் மருத்துவப் பணியைக் கண்டு ஆச்சரியப்பட்டுப்போனார்.

உதயமானது ‘ரெய்னி’

சிறிய பங்களாவில் இடநெருக்கடி காரணமாக நிறையப் பேருக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. அதனால், மிக மோசமான நிலையில் இருந்த பெண்களும் குழந்தைகளும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அதைக் கண்ட ரெய்னி, தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் மக்ஃபெயிலிடம் தந்து மிஷனுக்குச் சொந்தமான இடத்தில் புதிய மருத்துவமனையைக் கட்ட வேண்டும் என்ற தன் விருப்பத்தைச் சொன்னார். பெண்கள் இருவரும் சேர்ந்து ஸ்காட்டிஷ் மிஷனுக்கு அனுமதி கோரி கடிதம் எழுதினார்கள்.

ஸ்காட்லாந்து திரும்பிய ரெய்னி, கொஞ்சம் கொஞ்சமாக அங்குள்ள மக்களிடம் நிதி திரட்டத் தொடங்கினார். ‘ஃபர்லோ’ எனப்படும் ஆண்டு விடுமுறைக்கென ஸ்காட்லாந்து செல்லும்போதெல்லாம் மக்ஃபெயிலும் நிதி திரட்டினார். ஊர் கூடித் தேர் இழுத்ததால், 1911 மார்ச் 22 அன்று அன்றைய மதராஸ் மாகாண ஆளுநரான சர் ஆர்தர் லாலி அடிக்கல் நாட்ட, ரெய்னி மருத்துவமனை உருப்பெறத் தொடங்கியது.

கட்டணமில்லா சிகிச்சை

கட்டுமானப் பணி முடிந்து 1914 ஜனவரி 19 அன்று மதராஸ் மாகாண ஆளுநர் லார்ட் பென்ட்லண்ட் என்பவரால் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. 75 படுக்கைகள் கொண்ட பிரம்மாண்ட மருத்துவமனையாக, வடசென்னையின் முக்கியக் கட்டிடங்களில் ஒன்றாக ரெய்னி மருத்துவமனை விளங்கியது. கட்டிடம் கட்ட நிதி திரட்டிய ரெய்னியின் பெயரிலேயே இன்றளவும் மருத்துவமனை அழைக்கப்பட்டுவருகிறது. தொடக்க காலம் தொட்டே ரெய்னி மருத்துவமனையில் கட்டாயக் கட்டண வசூல் இருந்ததில்லை. பெண்கள் தங்களால் இயன்றதைத் தந்தனர். கொடுக்க முடிந்தவர்களிடம் பெற்றுக்கொண்டு, தர இயலாதவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மருத்துவமனை ரெய்னி.

பச்சிளங் குழந்தை கவனிப்புப் பிரிவு, குழந்தைகள் சிறப்புப் பிரிவு, பெண் தொழு நோயாளிகளுக்கான தனிப் பிரிவு, பெண் பாலியல் நோயாளிகளுக்கான தனிப் பிரிவு என்று மூன்று ஸ்காட்லாந்து மருத்துவர்கள் தலைமையில் பல வார்டுகளுடன் இயங்கிவந்தது மருத்துவமனை. செவிலியர் பயிற்சிப் பிரிவு ஒன்றும் பின்னர் தொடங்கப்பட்டது. அத்துடன் மாதம் இரு முறை மாட்டு வண்டிகளில் சென்னைக்கு வடக்கேயுள்ள கிராமங்களுக்குச் சென்று தொழுநோயாளிகளுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

ஏன் இந்தப் புறக்கணிப்பு?

முதலாம் உலகப்போர் நடந்தபோது, செர்பிய நாட்டுக்கு ராணுவ மீட்புப் பணிக்கு அனுப்பப்பட்டார் மக்ஃபெயில். சிறந்த மருத்துவப் பணிக்காக ‘கேசர்-ஐ-ஹிந்து’ விருதை அன்றைய வைசிராயிடமிருந்து 1912-ல் பெற்றுக்கொண்டார் மக்ஃபெயில். 1930 ஜூன் 3 அன்று இங்கிலாந்து மன்னர் வழங்கிய ‘ஆர்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர்’ சிறப்புப் பட்டம் ரெய்னி மருத்துவமனை கண்காணிப்பாளரான மக்ஃபெயிலுக்கு வழங்கப்பட்டது.

வடசென்னையில் பெண்களுக்காக மருத்துவமனை அமைத்து அவர்களின் நலனுக்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த மக்ஃபெயில், இங்கிலாந்தின் எடின்பர்க் நகரில் 1946-ம் ஆண்டு காலமானார். 1950-களில் ரெய்னி மருத்துவமனை தென்னிந்திய திருச்சபையின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது.

இந்தப் பெண்மணிகள் கட்டிய கட்டிடம் 100 ஆண்டு ஓட்டத்தை முடித்து, பாதுகாப்புக் காரணங்களால் ஒதுக்கப்பட்டு சிதிலமடைந்து கிடக்கிறது. நீதியரசர் பத்மநாபன் கமிட்டி தயாரித்து அளித்த பாதுகாக்கப்பட வேண்டிய தொன்மைச் சின்னங்கள் பட்டியலில் இந்த மருத்துவமனைக் கட்டிடம் இருந்தும், ஏனோ இந்த அவல நிலை தொடர்கிறது.

கட்டுரையாளர்,
வரலாற்று ஆர்வலர்.
தொடர்புக்கு: niveditalouis@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x