

செல்லப்பா
படிப்பு ஏறவில்லை என்பதால் படிக்க முடியவில்லை என்றால் அதற்கான நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பிறப்பு காரணமாகக் கல்விக்கூடத்தின் படியேற முடியவில்லை என்றால், அது எவ்வளவு பெரிய கொடுமை. கல்வி அடிப்படை உரிமை என்ற நிலையில் பிறப்பு காரணமாகக் கல்வி மறுக்கப்படுவது துயரமானதுதானே. அப்படியொரு துயரம் காயத்ரிக்கு ஏற்பட்டுவிடுமோ எனப் பயந்தார் அவளுடைய தந்தை. பிறப்பு காரணமாக அவளால் படிக்க முடியாமல் போகுமோ என அவர் பயந்ததால் அவள் தாழ்த்தப்பட்ட சமூகத்திலோ பிற்படுத்தப்பட்ட சமூகத்திலோ பிறந்துவிட்டாள் என்று நினைக்கிறீர்களா அதுதான் இல்லை. அவள் முன்னேறிய வகுப்பில் பிறந்து விட்டாள்.
இதென்ன புதுக்கதை என்று நீங்கள் திகைக்கக்கூடும். கொஞ்சம் காயத்ரியின் கதையைத் தெரிந்துகொண்டீர்கள் என்றால், உங்கள் திகைப்பு மறைந்து இதென்ன கொடுமை என நீங்களும் வாய்பிளக்க நேரிடலாம். ‘வித்தகம்’ கொண்ட கவிஞர் வாலியின் கற்பனையிலும் கைவண்ணத்திலும் உருவான வர்ணக் காவிய கதாபாத்திரம் காயத்ரி. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் ஆகியவற்றை வாலி எழுத, நடிகை லட்சுமி காயத்ரியாக நடித்த ‘ஒரே ஒரு கிராமத்திலே’ (1989) திரைப்படத்தை இயக்கியவர் ஜோதி பாண்டியன்.
கலைமகள்போல் ஒரு மகள்
இறக்கும் தறுவாயில் சங்கரன் சாஸ்திரியுடைய மனைவி, தன் மகள் காயத்ரியை ஆண் பிள்ளையைப் போல் நன்கு படிக்கவைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என அவரிடம் கோரிவிட்டு உயிரைவிட்டுவிடுகிறார். நடுவில் முற்றம், சுற்றிலும் பல அறைகள், முதன்மை அறையில் பெரிய ஊஞ்சல் கொண்ட பாரம்பரியமான வீட்டில் தன் மகளுடன் வசித்துவரும் சாஸ்திரி பரம ஏழை. தன் மகள் வீணையை இசைத்துப் பாடும் காட்சியைக் கண்டு, கலைமகள் போன்ற பெண் தனக்கு மகளாகக் கிடைத்துவிட்டாள் என்று பெருமிதம்கொள்கிறார் அவர்.
ஊஞ்சலில் அமர்ந்து தன் ஆசை மகளை மடியில் கிடத்தி தலையைக் கோதியபடியே, ‘உன்னை நல்லா படிக்கவைக்க வேண்டும் என ஆசை. ஆனால், நடக்கணுமே’ எனச் சலித்துக்கொள்கிறார். ‘ஏன் நடக்காது, என்னைப் பொண்ணா நினைக்காம புள்ளையா நினைத்துப் படிக்க வையுங்க’ என்கிறாள் காயத்ரி. பிரச்சினை அவள் பெண்ணாகப் பிறந்ததல்ல; பிராமண குலத்துல பிறந்தது என்பதைச் சொல்லி அலுத்துக்கொள்கிறார். ‘நமக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்றால் அது மனுஷ சகாயத்தால் நடக்காது; தேவசகாயத்தாலேயே நடக்கும்’ எனச் சொல்கிறார் சாஸ்திரி.
‘பிச்சை புகினும் கற்கை நன்று’ என்று சொல்லியிருக்கிறார் அதிவீர ராம பாண்டியன். ஆனால், காயத்ரி கற்பதற்காக ஒரு பொய்யைச் சொல்லிவிட்டார் அவளுடைய தந்தை. அதைக்கூட அவர் சொல்லவில்லை தேவசகாயம் என்னும் கிறிஸ்தவர் சொல்கிறார். தாசில்தாரான தேவசகாயம், தனது கல்விக்கு உதவிய சாஸ்திரியின் குடும்பத்துக்குக் கடமைப்பட்டவர். அவரது வீட்டுக்கு வரும் சாஸ்திரி தன் நிலைமையைச் சொல்லி உதவி கேட்கும்போது, அவர் காயத்ரியை அனாதை என்றும், கருப்பாயி என்னும் ஆதிதிராவிட வகுப்புப் பெண் அவள் என்றும் சாதிச் சான்றிதழ் வழங்கி, பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்வி நிறுவனத்தில் சேர்த்துவிட்டால், அவள் வாழ்வு மலர்ந்துவிடும் என்கிறார்.
பசுமையாகும் அன்னவயல்
தேவசகாயத்தின் மச்சான் அந்தோனி இந்தப் பொய்ச் சான்றிதழ் காரியம் நடந்தபோது, அதை உடனிருந்து பார்க்கிறான். இந்தச் சான்றிதழ் காயத்ரியை ஆட்சியராக்கி அழகு பார்த்தது. இப்படித்தான் காயத்ரி, கருப்பாயி ஆனார். அவர் அன்னவயல் என்னும் கிராமத்துக்குத் தனி அதிகாரியாக வருகிறார். கருப்பாயியின் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருக்கிறார் சங்கரன் சாஸ்திரி. இவர்களுக்கிடையே உள்ள உறவு அந்தக் கிராமத்தில் யாருக்கும் தெரியாது. தன் பதவியைப் பயன்படுத்தி அந்தக் கிராமத்துக்குப் பல நன்மைகளைச் செய்கிறார் கருப்பாயி.
செருப்பு தைக்கும் தொழிலாளி இசக்கிமுத்துவின் பேரன் செல்வத்தைப் படிக்கவைக்கிறார். தெருக்குழாய்களில் எல்லோருக்குமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்கிறார். கணவனின் குடிப்பழக்கம் காரணமாகக் குழந்தையைக் கைவிட்டுவிட்டுத் தற்கொலைக்கு முயலும் பெண்ணைக் காப்பாற்றி நல்வாழ்வு அளிக்கிறார். மொழிப் போரில் உயிரைத் துறந்த ஒருவரின் மனைவியான, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தெய்வானையின் மகன் போதிய மனவளர்ச்சி இல்லாத பாண்டியன்.
இந்தப் பாண்டியனைத் தத்தெடுத்து வளர்க்கிறார் கருப்பாயி. தனது வாரிசாகவும் தனக்குக்கொள்ளிபோடுபவராகவும் பாண்டியனையே சொல்கிறார் கருப்பாயி. தன் அலுவலகத்தில் பணியாற்றும், தரங்கெட்ட கணவனைக் கொண்ட கண்ணகிக்குத் திருமண உறவு குறித்த ஆலோசனைகளைப் பரிவுடன் வழங்குகிறார் கருப்பாயி. அன்னவயலைச் சார்ந்த இடைநிலைச் சாதியைச் சார்ந்த ஒப்பந்ததாரர் கமலக் கண்ணன் அணை கட்டுவதற்கான ஒப்பந்தத்தைத் தனக்கே வழங்க வேண்டுமென்று கையூட்டு வழங்க வருகிறார். அவரை விரட்டியடித்த நேர்மையாளராக இருக்கிறார் கருப்பாயி.
செய்தது சரியா காயத்ரி?
இப்படியெல்லாம் நல்லது செய்யும் கருப்பாயியைப் பற்றிய உண்மையை அரசாங்கத்திடம் சொல்லிவிடுவதாக மிரட்டி பணம் பறிக்கிறான் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த அந்தோனி. ஒருகட்டத்தில் அவன் பொய்ச் சான்றிதழ் விவகாரம் பற்றி அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்திவிட்டு மர்மமான முறையில் இறந்துவிடுகிறான். கருப்பாயியும் சாஸ்திரியும் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
வழக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது. தான் பொய் சொன்னது உண்மை; ஆனால், அதைக் குற்றமாகக் கருதவில்லை என வாதிடுகிறாள் காயத்ரி. தான் பொய்ச் சான்றிதழ் வாங்கவே சட்டமும் அரசாங்கமும்தான் காரணம் என்கிறாள். சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்காமல் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும் என்று படபடவென்று பொரிந்து தள்ளுகிறாள். அவள் செய்தது சட்டப்படி குற்றம் என்பதால் காயத்ரிக்கும் அவளுடைய தந்தைக்கும் மூன்றாண்டுகள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளிக்கிறார்.
பெரியவர்கள் முன்பு உட்கார்வது மரியாதையான செயலல்ல என்ற பண்புடன் வளர்ந்த காயத்ரி, தான் கருப்பாயியின் இடத்தில் உட்கார்ந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணரவே இல்லை. எவ்வளவோ படித்து ஐஏஎஸ் ஆகிவிட்ட அவருக்கே இந்த அளவுதான் புரிதல் என்றால் சாமானிய காயத்ரிகளுக்கு இது எப்படிப் புரியும்? காயத்ரிக்கும் அவளைப் போன்றவர்களுக்கும் இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல என்பது புரியவில்லை.
இறைவனுக்கு முன்பும் சட்டத்துக்கு முன்பும் எல்லோரும் சமம் என்று சொல்லப்பட்டாலும், அப்படி ஒரு சூழல் இன்னும் இந்த நாட்டில் வந்திருக்கவில்லை என்பதை பாவம் காயத்ரி அறிந்திருக்கவில்லை. காயத்ரி தான் வாரிசாகத் தத்தெடுத்த பாண்டியனை அர்ச்சகராக்க முயன்றிருந்தால் அப்போது காயத்ரி இந்தச் சமூகத்தின் உண்மை முகத்தைத் தரிசித்திருப்பாள். தான் செய்தது பெருங்குற்றம் என்பதை அவள் உணர்ந்திருப்பாள்.
ஒருவேளை, இப்போது இந்தப் படத்தை காயத்ரி பார்த்தால், கதாபாத்திரங்களை உருவாக்கியதிலும் அவற்றுக்குப் பெயர் வைத்ததிலும் வாலி வெளிப்படுத்திய நுட்பமான கருத்தியல் பார்வையையும் அரசியல் பார்வையையும் தெளிவாக உள்வாங்கியிருப்பாள். தன்னையொத்த அந்தோனியை ஏன் கதாசிரியர் குடிகாரனாக்கினார் என்ற உண்மை அவருக்குப் புரிந்திருக்கும். இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தான் நீதிமன்றத்தில் எழுப்பிய வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதை அறிந்து மனவேதனை கொண்டிருப்பாள். அந்த நேரத்தில் ஆதூரத்துடன் தன் மகனான பாண்டியனை ஆரத் தழுவி அன்பை வெளிப்படுத்தியிருப்பாள்.
(நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத்
தொடர்புகொள்ள:
chellappa.n@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்