

யுகன்
ஸெனார்ஸ்ட் அகாடமி ஓவியப் பள்ளியில் படிக்கும் 13 ஓவியர்களின் 65 ஓவியங்களின் விற்பனையும் கண்காட்சியும் ‘லைவ் 2.O’ என்னும் தலைப்பில் அண்மையில் சென்னை ‘ஃபோகஸ் ஆர்ட் கேல’ரியில் நடந்தது.
பொதுவாகப் பார்வையாளர்களின் கவனம் பிரபலமான ஓவியர்களின் ஓவியக் கண்காட்சிகளை நோக்கித்தான் அதிகம் திரும்பும்.
ஆனால், இளம் ஓவியர்களின் இந்த ஓவியக் கண்காட்சிக்குத் திரளான ரசிகர்கள் வந்ததிருந்ததுடன், பல ஓவியங்கள் விற்பனையும் ஆகியிருந்தன. ஓவியர் முல்லை ராஜனின் சீரிய பயிற்சியில் ஏறக்குறைய ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இந்த ஓவியர்கள் பட்டை தீட்டப்பட்டிருக்கின்றனர் என்பதற்கு அவர்களின் ஓவியங்களே சான்று. எட்டாம் வகுப்பு முதல் பொறியியல் படிப்பவர்கள் வரை பலதரப்பட்டவர்களின் ஓவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
இயற்கைக் காட்சிகள், நிலக் காட்சிகள், புலிகள் அழிந்துகொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் ஓவியங்கள், சுற்றுச்சூழல் மாசுபாட்டால் இதயம் அடையும் பாதிப்பு, எதிர்காலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டரையும் சுமந்து செல்லும் மனிதன், வாக்கு, கல்வி, மருத்துவம் என எல்லாவற்றையும் விழுங்கும் லஞ்சம் போன்ற கருத்துகளை மையப்படுத்திய ரொவீனா, பொற்கொடி, ஸ்ரேயா ஆகியோரின் ஓவியங்கள் வழக்கமான பாணியிலிருந்து விலகி, பார்ப்பவர்களையும் ஓவியர்களின் நிலைக்கு உயர்த்துவதாக இருந்தன.