வாசிப்பை நேசிப்போம்: மனபலம் தரும் வாசிப்பு

வாசிப்பை நேசிப்போம்: மனபலம் தரும் வாசிப்பு
Updated on
1 min read

சிறு வயதில் அப்பாவின் கையைப் பிடித்தபடி நூலகத்துக்குச் செல்வதுண்டு. அப்பொழுது ‘கன்னித் தீவு என்கிற சித்திரத் தொடர்கதையின் மூலமாக அறிமுகமானவர்களே சிந்துபாத்தும் லைலாவும். பிறகு ‘அம்புலி மாமா’வில் வரும் குட்டிக் குட்டி கதைகள் என் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டின. வார இதழ்களில் வெளியான தொடர்கதைகள் மூலம் சுஜாதா, சிவசங்கரி போன்றோர் அறிமுகமானார்கள். சுஜாதாவின் அறிவியல் சார்ந்த கதைகளையும் துப்பறியும் கதைகளையும் ஆர்வத்துடன் படிப்பேன். சிவசங்கரியின் கதைகள் கணவன், மனைவி புரிதல், அன்பு என அழகிய நீரோட்டமாய்ச் செல்வது மிகவும் பிடிக்கும்.

சங்கம் தந்த நாவல்கள்

திருமணம் முடிந்து வட இந்தியா சென்றபோது தமிழ் வார இதழ்கள் பத்து நாட்கள் கழித்துத்தான் கிடைக்கும். அப்போது எனக்குக் கைகொடுத்தது தமிழ்ச்சங்கம்தான். அங்கிருந்துதான் நாவல்களைப் படிக்கத் தொடங்கினேன். ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’ எனப் படித்து பிரமித்தேன். இப்படியொரு புதினத்தை எழுத முடியுமா என எண்ணியெண்ணி வியந்தேன். மாமல்லபுரம் செல்லும்போதெல்லாம் சிற்பிகளின் உளிச்சத்தம் கேட்பதுபோல் இருக்கும். அங்கேதான் பாலகுமாரனின் நாவல்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. லாரிகளைப் பார்த்தால் ‘இரும்புக் குதிரை’தான் நினைவுக்கு வரும். எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்ததுபோல இருந்தது ‘உடையார்’. அதைப் படித்து முடித்ததும் கண்களில் கண்ணீர் வந்தது. மனம் மிகவும் கனத்தது. அதன் தாக்கம் ஒரு வாரம் வரைக்கும் நீடித்தது.

புத்தகங்களே பரிசு

ஒரு நாட்டைப் பற்றி அறிந்துகொள்ள பயணம் மிகவும் முக்கியம் என விளக்கியது ஜெயமோகன் எழுதிய ‘தேசத்தின் முகங்கள்’. முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்று மட்டுமே அறிந்திருந்த எனக்கு அவரது பறம்பு மலை, அதன் கலாச்சாரம், கருணை எனப் பன்முகங்களையும் அருமையாக விளக்கும் சு.வெங்கடேசனின் ‘வேள்பாரி’ இப்போது என் கைகளில் உள்ளது. புத்தகங்கள் நமக்கு உற்ற நண்பர்கள் மட்டுமல்ல; வாழ்க்கையை வழிநடத்தவும் உதவுகின்றன. என் பிறந்தநாளுக்கு நெருங்கிய தோழிகள் புத்தகங்களைத்தான் பரிசாகத் தருவார்கள். நானும் என் பேரக்குழந்தைகளுக்கு அவரவர் வயதுக்கு ஏற்ப புத்தகங்களைப் பரிசளிப்பேன். உடல்நலத்துக்கு உடற்பயிற்சியைப் போல் மன பலத்துக்கு வாசிப்பு தேவை.

வாசிப்பை நேசிப்போம்

புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக்கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்க்க முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்கள் ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்.

- பானு பெரியதம்பி, சேலம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in