Published : 11 Aug 2019 09:55 am

Updated : 11 Aug 2019 09:55 am

 

Published : 11 Aug 2019 09:55 AM
Last Updated : 11 Aug 2019 09:55 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 18: பிரமனுக்குப் பேயோட்டிய கருக்காணி

exorcism-for-brahman

பாரததேவி

பிள்ளையை வீட்டுக்குள் விளையாடவிட்டவாறு அடுப்புக்குள்ள வேலை செய்துகொண்டிருந்த கருக்காணிக்குப் புருசனைப் பார்க்கையில் சந்தேகமாக இருந்தது. “பிள்ளைபெத்த உடம்பு நீ வீட்டிலிரு” என்று ஓடி ஓடி பகலும் இரவுமாய் வேலை பார்த்தவருக்கு, இப்போது என்ன வந்துவிட்டது? வேலைக்குப் போயிட்டு வந்ததும் பிள்ளையத் தூக்கிக் கொஞ்சுவாரு. வேல செய்யேல நடந்த விசயத்தயெல்லாம் நம்மகிட்ட சொல்லுவாரு.


ராத்திரி ரெண்டு பேரும் சாப்பிட்டதும் வெத்தல மடிச்சிக் கொடுக்கச் சொல்லுதவருக்கு. இப்ப என்ன வந்துச்சு? சாப்பாட்ட எடுத்து வட்டுல வச்சமின்னா குடிச்சும் குடியாம எந்திரிச்சிதாரு. புள்ளயவும் தூக்கிக் கொஞ்சுறதில்ல. யாரும் வந்துகூப்பிட்டாலும் “நானு இல்லேன்னு சொல்லிரு”ன்னு வீட்டுக்குள்ள முடங்கி, முடங்கிப் படுக்குதாரு என்று எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி மனம் புண்ணாகிக்கிடந்தாள்.

பிறகு ஒருநாள் பொறுக்க முடியாமல், “என்ன மச்சான் இந்த அஞ்சாறு நாளாவே ஒருவடிவா இருக்கீரு? மேலுக்கு என்னமும் சேட்டமில்லையா? பண்ணையாரு கண்டு என்னமும் சொல்லிவிட்டாரா? அப்படிச் சொல்லியிருந்தா சொல்லும் நானு போயி அவரைக் கேட்டுட்டு வாரேன்” என்று கருக்குமணி உரிமையாகச் சொல்வதைக் கேட்டவனுக்கு, ‘ஆகா அவுக சொன்னது கணக்காத்தேன் இவ அவர்கிட்ட உரிமையா பழகியிருக்கா பொலுக்கோ. இல்லாட்டா இம்புட்டுத் தெம்பா பேசுவாளா? சரி இனியும் பொறுக்க முடியாது.

ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சிக்கிடணும். இல்லாட்டி நமக்குக் கிறுக்குப் புடிச்சிரும்’ என்று நினைத்தவன், “கருக்காணி எனக்கு உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்ல. மனசுக்குத்தேன் தடுமாத்தமும் தத்தளிப்புமாயிருக்கு” என்றவன் அவள் முகத்தையே பார்த்தான். கருக்காணியோ வெள்ளந்தியாக, “என்ன மச்சான் நாம வேல செய்தோம் கஞ்சிக் குடிக்கோம். அடுத்தவக பேச்ச பேசுதமா? ஒருத்தர் கூட சண்டைக்குப் போறமா, சத்தத்துக்குப் போறாமா? உம்ம மனசு எதுக்குத் தடுமாறுது?” என்றாள். பிரமனும் மனசுக்குள் நடுங்கியபடி எல்லாம் தெரிந்தும் தெரியாதவன்போல் “ஊர்க்காரக வம்புக்கு ஒரு அளவில்லாம போச்சு கருக்கு” என்றான்.

“நீரு என்ன சொல்லுதீரு?” “இல்ல நம்ம பய கையில ஆறு வெரலு இருக்கா, பண்ணையாரு கையிலயும் ஆறு வெரலு இருக்கா?” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே “அதுக்கு?” என்று வெடுக்கென்று கழுத்தை வெட்டியபடி திரும்பினாள் கருக்குமணி. அதிலேயே பிரமன் அரண்டுதான் போனான். ஆனால், 50 ஏக்கர் தோப்பும் வயலும் அவனைக் கொக்கிப்போட்டு இழுத்தன.

“அதுலயும் பண்ணையாரு நம்ம மவனுக்கு மோதிரம் வேற எடுத்துப்போட்டாரா?” என்றான். “இப்ப நீரு என்னதேன் சொல்ல வாரீரு?”. “நானு ஒண்ணும் சொல்லலை. ஊர்க்காரகதேன் அவரையும் உன்னையும் ஒண்ணா இணைச்சி ‘கண்டாங்கனியா’ பேசுதாக?” என்று சொல்லவும் கருக்காணியின் முகத்தில் அனல் பறந்தது. அங்கே கூரைச் சொருகலில் இருந்த பண்ணரிவாளை எடுத்துக்கொண்டு “எவ அவ சொன்னவ சொல்லு. அவ நாக்கை அறுத்துட்டு வாரேன்” என்று புறப்பட்டவளைத் தடுத்தான். “இப்ப எதுக்கு கருக்கு இம்புட்டு கோவப்படுத. நானு உன்ன என்னமும் சொன்னனா?”. “நீரு வேற என்ன சொல்லுவீராக்கும்.

சரி அதைவிடும். என்னப்பத்தி கொந்தாங் கூறா பேசிய நாக்க அங்கனையே துண்டிச்சிட்டு வந்தீருன்னா நீரு நல்ல ஆம்பள”. “நானும் சும்மா வரல. அவ மூக்க அறுக்கிற மாதிரி, ‘அப்படியே என் புள்ள பண்ணையாருக்குப் பொறந்திருந்தா நல்லதுதான். அத சாக்காவச்சி அவருகிட்ட இருந்து 50 ஏக்கரு தோப்ப வாங்கிருவேன்’னு சொல்லிட்டுத்தேன் வந்தேன். நீ ஒண்ணும் நெனைக்காத கருக்கு. அப்படிகூட நாம செய்யலாம்”. “அப்ப என் மேல உமக்கு நம்பிக்கையில்ல அப்படித்தான?”. “இருக்கு ஆ..னா.. புள்ள கையில ஆறு வெரலு இருக்கேன்னு நெனைச்சேன்” என்றான் தடுமாற்றத்தோடு.

கருக்காணியின் ஆவேசம்

அவுந்துபோன கொண்டய அள்ளி முடிந்த கருக்கு மடிப்புள்ளையைத் தூக்கி இடுக்கிக்கொண்டு “இப்ப இந்தப் புள்ள யாருக்குப் பொறந்ததுன்னு தெரியணும் அப்படித்தானே?” என்றவள் “வாரும் என்கூட” என்றாள். முன்னால் விறுவிறுவென நடக்க பண்ணையாரைத்தான் நம்ம பொண்டாட்டி அடையாளம் காட்டப்போகிறாள் என்ற சந்தோஷத்தோடு பிரமன் அவள் பின்னால் நடக்க ஊர் மந்தையை அடைந்தார்கள்.

அங்கே ஒருவன் வேப்பமரத்தடியில் உட்கார்ந்திருந்தான். “இந்தா பாரும் இவந்தேன் என் புள்ளைக்கு அப்பன்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று தன் தாய் வீடு வந்து சேர்ந்தாள் கருக்காணி. பிரமன் செருப்புத் தைப்பவன் கையைப் பார்த்தான். அவன் கையிலும் ஆறு விரலிருந்தது. பொண்டாட்டியில்லாமல் பிரமன் தானே சாப்பாடும் செய்து வேலைக்கும் போய் பட்டபாடு சொல்லி மாளாது. தனக்கு யோசனை சொன்னவர்களையெல்லாம் வஞ்சிக்கொண்டு திரிந்தான்.

பிள்ளைக் கணக்கு தெரியாத அப்பாக்கள்

அந்தக் காலத்தில் கர்ப்பத்தடை எதுவும் இல்லாததால் ஒவ்வொரு பெண்ணும் வருசத்துக்கு ஒரு பிள்ளை என்று பெற்றுப் போட்டதில் வீடு தவறாமல் எட்டுப் பிள்ளை, பத்துப் பிள்ளைகளுக்குக் குறையாமல் அண்டியும் சவலையுமாயிருந்தன. ஒரு பிள்ளை உட்கார்ந்த இடத்திலிருந்து நகர முடியாமலும் ஒரு பிள்ளை தவழ்ந்து கொண்டும் அப்படி வீடு மொத்தமும் பிள்ளைகளே. அந்தப் பிள்ளைகளின் தகப்பனுக்குத் தனக்கு எத்தனை பிள்ளைகள் பிறந்திருக்கிறது, இப்போது எத்தனை பிள்ளைகள் உயிரோடு இருக்கின்றன என்று ஒரு கணக்கும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் விவசாயம்தான்.

காடு முழுக்கச் சோளமோ நிலக்கடலையோ விதைத்து எடுத்துவிட்டால் அடுத்த வெள்ளாமைக்கு நாலைந்து உழவு உழ வேண்டும். பிறகு வரப்பு சாத்தி, பாத்தி கட்டி, விதைத்து, தண்ணீர் பாய்ச்சி என்று பல வேலைகள் கிடக்கும். இதனால், ஆண்கள் எப்போதும் காட்டிலேயே கிடப்பார்கள். அடைமழைக்கு காட்டில் ஒரு குடிசை போட்டுக்கொள்வார்கள். எப்போதாவது, அதுவும் பெரும்பாலும் இரவில்தான் வீட்டுக்கு வருவார்கள். அவர்கள் வரும்போது பிள்ளைகள் எல்லாம் உறங்கிக்கொண்டு இருக்கும். பகலில் வந்தாலோ எல்லாப் பிள்ளைகளும் விளையாடப் போயிருப் பார்கள். அவர்களுக்குப் பிள்ளைகளின் எண்ணிக்கையைப் பற்றித் தெரியாததற்கு இதுவும் ஒரு காரணம்.

முத்தனின் தவிப்பு

அப்படியான விவசாயிகளில் முத்தன் என்று ஒருவன் இருந்தான். அவன் ரொம்பவும் கஞ்சன்; நல்ல உழைப்பாளியும் கூட. அவன் பொண்டாட்டி பஞ்சவர்ணம், அவன் வீட்டுக்கு வரும் நேரமெல்லாம் தட்டில் சோறு வைப்பதோடு நாக்கில் வசவையும் வைத்திருப்பாள். அவன் சாப்பிட ஆரம்பிக்கும் முன்பே அவள் வசவை ஆரம்பித்துவிடுவாள். “நீயெல்லாம் ஒரு மனுசனா? பெத்த பிள்ளைக்கு மொட்டையெடுக்க இப்படித் துட்டுக் கணக்குப் பாத்தா, ஊரானா உன் புள்ளைக்கு மொட்டையெடுப்பான்? அம்புட்டுப் புள்ளைகளும் ஈரும் பேனுமா புழுத்துப்போயி கிடக்குக. அதுக குடிக்க கஞ்சியெல்லாம் அந்தப் பேனுகளுக்குத்தேன் போவுது.

நீரு மொட்டையெடுக்கப் போறீரா? இல்ல நானு நாலு வண்டிய கூலிக்கு கூப்புட்டு அர மூட அரியும் நம்ம கெடையில் இருக்க ஆடுகள்ல ஒரு கிடாவப் புடிச்சிட்டுப் போயி மொட்ட எடுத்துட்டு வந்துருவேன்” என்று அவள் சொல்ல அவன் திடுக்கிட்டுப்போனான். இவ பாட்டுக்கு இப்படி ஒரு வேல செஞ்சிட்டான்னா நாம பாத்து பாத்து சேத்துவச்ச அம்புட்டுத் துட்டும் செலவழிஞ்சில்ல போவும் என்று நினைத்தவனுக்கு உறக்கமில்லாமல் போய்விட்டது. மொட்டையெடுக்கப் போனால் இருபது படி அரிசியோடு நூறு ரூபாய் பெறுத கிடாவுமில்ல போயிரும்? அதோட நம்ம வண்டி பத்தாதுன்னு இன்னும் நாலு வண்டிக்காரன கூலி எட்டு மரக்கா தவசத்தவுமில்ல கூலியா கொடுக்கணும். என்ன செய்வோமென்று தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தான் முத்தன்.

(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com


அன்றொரு நாள் இதே நிலவில்பிரமன்கருக்காணிபிள்ளைக் கணக்குமுத்தனிவிவசாயிகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author