

இளங்கலை அறிவியல் படிக்கும் நான், பள்ளிப் பருவத்திலி ருந்தே பாடப் புத்தகங்கள் தாண்டி வாசிக்கத் தொடங்கினேன். செய்தித் தாள்களில் வரும் சின்னச் சின்னக் கட்டுரைகளை ஓய்வு நேரத்தில் வாசிக்கும் பழக்கம் இருந்தது. அவை வாசிக்க சுவாரசியமாக இருக்கும். பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரி சென்றபோது என் மனம் சோர்வுற்றிருந்தது. நான் எதைச் செய்தாலும் அதில் திருப்தி இல்லை. தொடர் தோல்விகளாகவே இருந்தன. தாழ்வு மனப்பான்மை அதிகரித்து மனம் உடைந்து போய் ‘அவ்வளவுதான் வாழ்க்கை’ என உட்கார்ந்துவிட்டேன்.
அந்த நெருக்கடியான நேரத்தில் புத்தகங் களே எனக்குத் துணை நின்றன. என்னை அறியாமலேயே வாசிக்கத் தொடங்கி னேன். என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தேன். அதுவரை அலங்காரப் பொருட்கள் மட்டுமே வாங்கிக் குவித்த நான் அப்போதிலிருந்து புத்தகங்களை வாங்கி சேகரிக்கத் தொடங்கினேன்.
மாதம் ஒரு புத்தகமாவது வாங்கிவிட வேண்டும் என்று என் வாசிப்பையும் புத்தகத் தேடலையும் தீவிரப்படுத்தினேன். ‘ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்கா தீங்க’, ‘வேடிக்கை பார்ப்பவன்’, ‘வட்டியும் முதலும்’ போன்ற புத்தகங்கள் எனக்கு நேர்மறை எண்ணங்களைக் கொடுத்தன.
குடும்பம், சமூகம், உறவினர் என யாரும் ஆறுதல் கொடுக்காத நேரத்தில் புத்தகம் மட்டுமே துணையாக இருந்தது. யாரும் கற்றக்கொடுக்காத விஷயங்களைப் புத்தகங்களே கற்றுக்கொடுத்தன. உணவை மறந்து கவலைகளை மறந்து வாசித்துக் கொண்டிருந்தேன். மீளமுடியாத துயரத்தில் இருந்து தாழ்வுமனப்பான்மையிலிருந்து என்னை மீட்டுக்கொண்டு வந்தவை புத்தகங்களே.
வாசிப்பை நேசிப்போம்
புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப் பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்க்க முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங் களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்.
- கி.பூங்குழலி, தருமபுரி.