

அமுதா ஹரி
திருமணம் முடிந்தவுடன் பெண்கள் இரண்டு விஷயங்களைக் கவனத் தில் கொள்ள வேண்டும். முதலாவது, உடல்ரீதியாக ஒரு ஆணிடமிருந்து வரக்கூடிய தொடுதலையும் உறவையும் புரிந்துகொள்வது, ஏற்றுக்கொள்வது பற்றிய பயம். இரண்டாவது, வலியால் வரும் சங்கடம்.
மிகவும் கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்ட பெண்களில் சிலருக்கு, திருமண உறவில் ஓர் ஆணின் தொடுதலும் பாலியல் உறவும் இருக்கும் என்பது புரியாமலே இருக்கக் கூடும். புரியும்போது தொடுதலில் பிடித்தமும் இருக்கலாம்; பயமும் இருக்கலாம். அதேபோல் சிலருக்கு மருத்துவரீதியாகச் சில கேள்விகள் எழலாம். நாமாக யாரிடமிருந்தாவது அரைகுறையாகத் தெரிந்துகொள்வதைவிட மருத்துவரை அணுகுவது நல்லது. சிலருக்கு உறவு கொள்வது வலிக்கலாம். உறவில் இணக்கம் இருந்தால் சரி. இல்லையென்றால், யோசிக் காமல் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
புரியாத புதிரா?
திருமணத்தில் உடலுறவு என்பது முக்கியமான பகுதி. இது பற்றி ஆண்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று பெண்களில் சிலர் நினைக்கிறார்கள். இது தவறான அணுகுமுறை. பெண்ணைப் போலவே ஆண்களில் சிலருக்கும் பாலுறவு என்பது புரியாத புதிராக இருக்கலாம். பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உடலியல் கல்வி இருந்தாலும், பலருக்குத் தங்களின் உடல் பற்றிய புரிதலே இல்லை. உறவுகொள்வது பற்றிய புரிதலும் இருப்பதில்லை. நண்பர்களிடம் இதைப் பற்றிக் கேட்டால் கேலி செய்யப்படலாம் என்று நினைத்து யாரிடமும் கேட்காமல் இருக்கவும்கூடும்.
திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில் ஓர் இளம் தம்பதி என்னைச் சந்தித்தனர். கணவன் விரைவில் வெளிநாடு செல்லவிருப்பதால் அதற்கு முன்னதாகக் குழந்தை உருவானால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அவர்கள் பேசியதிலிருந்து அதுவரை அவர்களுக்குள் முழுமையான உடலுறவு நிகழவில்லை என்பது தெரியவந்தது. கணவன் உறவுகொள்ள விழைந்தபோதெல்லாம் அந்தப் பெண் வலிக்கிறது என்று பதறி விலகியிருக்கிறாள். காதல் திருமணம் வேறு. சரி, கொஞ்ச நாளில் சரியாகவிடும் என்று நினைத்துக் கணவனும் அந்தப் பெண்ணின் போக்கில் விட்டுவிட்டார். பிறகு, அவர்களுக்கு உடலுறவு கொள்வதன் அம்சங்கள் பற்றிப் படம்போட்டு விளக்க வேண்டியதாயிற்று.
ஆண்-பெண் உறவில் தாங்க முடியாத வலி இருக்கும் என்றால், எப்படி இவ்வளவு பேர் இதை விரும்பிச் செய்கிறார்கள்? ஆரம்பத்தில் கொஞ்சம் வலி இருக்கலாம். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அது சரியாகிவிடும். உறவின்போது சிலநேரம் லூப்ரிகண்ட்ஸ் பயன்படுத்த லாம் என்று சொல்லி அனுப்பினேன்.
மூன்றே மாதத்தில் பதற்றம்
திருமணமான மூன்றாம் மாதத்திலேயே கர்ப்பம் தரிக்கவில்லை என்று மாமியாரும் அம்மாவும் ஒரு பெண்ணை அழைத்துவந்தனர். அந்தப் பெண்ணுக்கும் அவருடைய நாத்தனாருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடந்திருக்கிறது. நாத்தனார் உடனே கர்ப்பமாகிவிட்டார். இந்தப் பெண் கர்ப்பமாகவில்லை என்றவுடன் மூன்று மாதங்களிலேயே பொறுக்க முடியாமல் அம்மாவும் மாமியாரும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள். ஏதாவது பிரச்சினையா என்று பார்க்கச் சொன்னார்கள்.
எந்தவிதக் கருத்தடை முறையையும் பயன்படுத்தாமல் தொடர்ந்து ஓராண்டுவரை உடலுறவு இருந்தும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் டாக்டரிடம் போகலாம். இப்படி மூன்றே மாதத்தில் அவசரப்படும்போது, அது அந்தப் பெண்ணை மட்டுமல்லாமல் இரு குடும்பங்களைச் சேர்ந்த அனைவருக்கும் மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. நாத்தனார் கர்ப்பமாகிவிட்டதால் இந்தப் பெண்ணும் கர்ப்பமாக வேண்டும் என்பது விதியல்ல.
இது போட்டியுமல்ல. ஒவ்வொரு உடலும் அதனளவில் தனித்துவம் வாய்ந்தது. ஆணுக்கு விந்தணு எப்போதும் வரும் என்றாலும், பெண்ணுக்கு அவளுடைய மாதாந்திரச் சுற்றில் 48 மணி நேரத்துக்குத்தான் கருத்தரிக்கிற வாய்ப்பு உள்ள கருமுட்டை வெளிப்படுகிறது. அவளுக்குக் கர்ப்பம்தரிக்க வாய்ப்புள்ள நாட்களில் உறவு இல்லாமல் போனால் மற்ற நாட்களில் அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உறவு இருந்தாலும் கரு உருவாக வாய்ப்பில்லை.
பதற்றம் தேவையில்லை
வயதாகித் திருமணம் செய்பவர்கள் (40 வயதைத் தொட இருப்பவர்கள்) வேண்டு மானால் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் பற்றி உடனடியாகக் கவலைப்படலாம். அவர்கள் கூட முதல் ஆறு மாதங்கள் எந்தக் கவலையும் இன்றி இல்லற வாழ்வைச் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும். குழந்தைப்பேற்றை மனத்தில் கொண்டு உடல் உறவைத் திட்டமிடுவது பலருக்கும் பதற்றத்தைத் தரலாம். இதனால் முழுமையாகச் சந்தோஷம் அடையாமலும் போகலாம்.
மற்றபடி 30 வயதுக்குள் திருமணம் செய்பவர்கள் முதல் 12 மாதங்கள்வரை ஆரோக்கியமான உறவில் இருந்தும் கர்ப்பம் நிற்க வில்லை என்றால் கவலைப்பட வேண்டியதில்லை.
உண்மையில் சொல்லப்போனால் இப்படி முதல் 12 மாதங்களுக்குள் குழந்தை வரவில்லை என்று டாக்டரிடம் போவது, திருமண வாழ்வில் அழுத்தத் தைக் கொண்டுவருகிறது. ஒவ்வொரு மாதமும் மாதாந்திர உதிரப் போக்கு வந்துவிடும்போது பரீட்சை யில் தோற்றுவிட்ட மனப்பான்மை யைப் பலர் பெறுகிறார்கள். மன அழுத்தம் அதிகமாகிறது. சிலர் மாதவிடாய் வந்துவிட்டால் அழக்கூடச் செய்கிறார்கள். இதனால் இல்லற உறவில் ஆர்வம் குறையக்கூடும். அந்தரங்க மான இன்பத்துக்கான விஷயமாக இருப்பதை மன அழுத்தத்துக்கான விஷயமாக்கி விடுகிறாரகள்.
கருவுறும் நாட்களில் உறவு கொள்ள முடியாதபடி சூழல் இருந்தால் (கணவன் ஊருக்குப்போவது, வீட்டில் விருந்தாளிகள் வந்துவிடுவது) அதற்குக்கூட அழ ஆரம்பித்துவிடுவார்கள். கணவன் – மனைவிக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே அம்மாவும் மாமியாரும் பெண்ணை மருத்துவரிடம் கூட்டிக்கொண்டு போவார்கள். பெண்ணிடம் பேசிப்பார்த்தால் உடனடியாகக் குழந்தை பெறுவதைத் தவிர்க்கக் கணவன் – மனைவி இருவரும் கருத்தடை முறைகளைப் பயன்படுத்துவது தெரியவரும்.
முதலில் செய்ய வேண்டிய தெல்லாம் இதுதான்: நம்முடைய பொதுவான உடல்நலம் எப்படி இருக் கிறது என்பதைப் பற்றிப் பரிசோதனை செய்து தெரிந்துகொள்ளலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிட வேண்டும். ரத்த சோகை, தைராய்டு போன்ற பிரச்சினைகள் இருக்கின்றனவா என்பதைப் பார்க்க வேண்டும்.
கருமுட்டை வெளிப்படுவது, எப்பொழுது கூடினால் குழந்தை பிறக்கும் என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொண்டு அமைதியாக முயல வேண்டும்.
இதை விட்டுவிட்டுக் கவலைப்படுவது, மூன்றாம் மாதத்திலேயே டாக்டரிடம் செல்வது போன்றவையெல்லாம் தேவையில்லை. சிலர் திருமணமான ஒன்றரை ஆண்டிலேயே செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றியெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
அதே மாதிரி குழந்தை பெறும் தன்மைக்கான பரிசோதனை செய்துகொள்ளவேண்டி வரும்போது ஆண், பெண் இருவரும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இருவரின் கூட்டில்தான் குழந்தை உருவாகிறது என்பதால் பெண் மட்டுமே போவதில் பலனில்லை.
(நலம் நாடுவோம்)
கட்டுரையாளர்,
மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in