பெண்கள் 360: முத்தலாக் முறைக்குத் தடை

பெண்கள் 360: முத்தலாக் முறைக்குத் தடை
Updated on
3 min read

தொகுப்பு: முகமது ஹுசைன்

முத்தலாக் முறைக்குத் தடை

திருமணமான முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவியை விட்டு நிரந்தரமாகப் பிரிய விரும்பினால், மூன்று முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை அமலிலிருந்தது. இந்த முத்தலாக் முறைக்குத் தடைவிதித்து 2017-ல் அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. இதைச் சட்டமாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மசோதா, மக்களவையில் நிறைவேறியது; மாநிலங்களவையில் நிறைவேறவில்லை.

இதனால் அவசரச் சட்டம் காலாவதியானது. தேர்தலில், பா.ஜ.க. வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து முத்தலாக் தடை சட்ட மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே கடந்த வாரம் மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி முத்தலாக் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. சமூக ஆர்வலர் சையத் ஜரீன் கூறுகையில், “முத்தலாக் தடை மசோதா சாத்தியமானதால் முஸ்லிம் பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதன் மூலம் முத்தலாக் என்ற அச்சம் அவர்களின் மனத்திலிருந்து அகலும்” என்றார்.

கபடியில் ஜொலிக்கும் குருசுந்தரி

மலேசியாவில் கடந்த மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை மகளிர் கபடிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுக் கோப்பையைக் கைப்பற்றியது. கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற ஒரே தமிழக வீராங்கனை மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த குருசுந்தரி. இதுகுறித்து குருசுந்தரி கூறுகையில், “அரசு உதவினால் என்னைப் போன்ற வீராங்கனைகள் பலர் கபடி மட்டுமில்லாமல் பல விளையாட்டுகளில் சர்வதேச அளவில் ஜொலிப்பார்கள். நான் பள்ளிப் பருவத்திலிருந்து 15 ஆண்டுகளாக விளையாடிக்கொண்டிருக்கிறேன்.

இந்த விளையாட்டில் கை, கால் அடிப்பட்டுவிடும். அதனால், பலர் பாதியிலேயே விளையாட்டு ஆசையை மூட்டைகட்டி வைத்துவிடுவார்கள். வீட்டில் பெண்களையும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு விளையாட விட மாட்டார்கள். நானும் பல சோதனைகளைக் கடந்தே இந்தச் சாதனையைச் செய்ய முடிந்தது. நான் எம்.ஃ.பில். முடித்திருக்கிறேன். ஆர்வமும் இடைவிடாத பயிற்சியும் பெற்றோர் தந்த ஊக்கமும்தான் இந்த வெற்றியைப் பெறுவதற்கு முக்கியக் காரணம்” என்றார்.

ஐன்ஸ்டீனை விஞ்சிய தமிழ்ச் சிறுமி

அறிவுக்கூர்மை என்பது ஒரு விஷயத்தை விரைவாக உள்வாங்கிக் கொள்வது மட்டுமின்றி, சிக்கல்களைத் தீர்ப்பதில் மூளையின் செயல்பாட்டுத் திறனையும் அடிப்படையாகக் கொண்டது. உலகின் புகழ்பெற்ற அறிவுக்கூர்மை சோதனைகளில் ஒன்றான பிரிட்டிஷ் மென்சாவின் Cattell III B தேர்வில் பங்கேற்ற பிரிட்டன்வாழ் தமிழ்ச் சிறுமி ஹரிப்பிரியா, 162 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீவன் ஹாக்கிங்ஸ் போன்ற பிரபல அறிவியலாளர்களின் அறிவுக்கூர்மை மதிப்பீட்டைவிட இது அதிகம். மற்றொரு அறிவுக்கூர்மை தேர்வான Culture Fair Scale தேர்விலும் அதிகபட்ச மதிப்பீடான 140 புள்ளிகளைப் பெற்று அசத்தியுள்ளார்.

இதுதான் பொழுதுபோக்கா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் சரவணன், “நானும் கல்லூரி படிக்கும்போது பேருந்துகளில் பெண்களிடம் தவறாக நடந்திருக்கிறேன்” என்று சொன்னபோது அங்கே கூடியிருந்தவர்கள் கைதட்டி ரசித்தனர். கமலும் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் சிரித்துக்கொண்டே நகர்ந்து சென்றார்.

இது குறித்து நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி, “ஓர் ஆண் பெண்களிடம் பொது இடத்தில் பாலியல்ரீதியாக அத்துமீறியிருக்கிறேன் என்பதைச் சிரித்தபடி சொல்லும் தைரியத்தை யார் கொடுத்தது? உலகம் முழுவதும் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் இப்படியொரு கருத்தை அவர் சொல்லும்போது, அவர் ஏதோ சாகசம் பண்ணிவிட்ட மாதிரி அங்கிருக்கும் மக்களும் கைதட்டி ரசிப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

மற்றவர்களின் தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டும் கமல் ஏன் சிரித்தபடியே கடந்துபோனார் எனத் தெரியவில்லை. சரவணனையும் கைதட்டிய மக்களையும் அவர் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.  சிலர் சமூக வலைத்தளங்களில், ‘சரவணன் தன் தவறை ஒப்புக்கொண்டார். தவறை ஒப்புக்கொண்டவர்களை ஏன் விமர்சிக்க வேண்டும்?’ எனப் பதிவிடுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் தன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் இப்படித்தான் பேசுவார்களா? இப்படிப்பட்ட சமூகத்தில் பெண்களுக்கு எப்படிப் பாதுகாப்பு இருக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திட்டமிட்டு துரத்தும் கொடுமை?

ஜூன் 2017-ல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உனா பகுதியைச் சேர்ந்த பெண்ணை வல்லுறவு செய்ததாக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் மீது புகார் எழுந்தது. அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டைக் காவல் நிலையம் ஏற்க மறுத்தது. இதனால் அந்தக் குடும்பம் நீதிமன்றத்தை நாடியது. ஏப்ரல் 2018-ல் அந்தப் பெண் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார். அடுத்த நாள் அந்தப் பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் உயிரிழந்தார். இந்த நிலையில் உனா பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே நிகழ்ந்த விபத்தில் சிக்கினார்.

இதில் அவருடன் பயணித்த உறவினர் இருவர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய வழக்குரைஞரும் காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா, “வல்லுறவுக்கு உள்ளான பெண் விபத்துக்குள்ளான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை எந்த அளவு முடிந்துள்ளது? குற்றம் சாட்டப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் இன்னும் பாஜகவில் ஏன் நீடிக்கிறார்?” எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in