

ருக்மணி
உடலில் குறைபாடு இருந்தாலும் உள்ளத்தில் உறுதியுடன் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் பலர் தங்களது சுயமுயற்சியால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவருகின்றனர். அவர்களைச் சமூகம் கண்டுகொள்வதில்லை. மாறாக, அவர்களை ஊனமுற்றோர் என்று அலட்சியப்படுத்துவதும் இங்கே நடக்கிறது. சமுதாயத்தில் நலிவுற்ற பிரிவினராக உள்ள அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாகக் கல்வி உதவி, நிதியுதவி, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இட ஒதுக்கீடு போன்றவற்றை அவர்களுக்கு அரசு வழங்கிவருகிறது.
அந்தந்த மாவட்டத்தில் இயங்கிவரும் சமூகநலத் துறையின் ஓர் அங்கமாக ஊனமுற்றோர் துறை செயல்பட்டுவந்தது.
1995-ல் ஊனமுற்றோர் துறை தனியாகப் பிரிக்கப்பட்டது. இத்துறை 2010-ல் ‘மாற்றுத்திறனாளிகள் துறை’ என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. மாவட்டத் தலைநகரங்களில் மாற்றுத்திறனாளிகள் துறைக்கான மாவட்ட அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன.
எட்டுப் பிரிவுகள்
மாற்றுத்திறனாளிகள் எட்டுப் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றனர்.
* கை, கால் பாதிக்கப்பட்டவர்கள்
* காது கேளாதோர்
* பேச முடியாதோர்
* பார்வையற்றோர்
* மனவளர்ச்சி குன்றியோர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர்
* புற உலகுச் சிந்தனையற்றோர் (ஆட்டிசம்)
* பல்வகை ஊனம்
* தொழுநோயால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தோர் உடலில் 40 சதவீதக் குறைபாடு இருந்தால் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் எனக் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் பேருந்து, ரயில் ஆகியவற்றில் பயணம் செய்வதற்கான சலுகை அட்டை, தேசிய அடையாள அட்டை போன்ற அரசின் சலுகைகளைப் பெறத் தகுதி உடையவர்கள்.
சான்றிதழ் வாங்குவது எப்படி?
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் செயல்பட்டுவருகிறது. வாரத்தின் குறிப்பிட்ட நாளில் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் அந்த அலுவலகத்துக்கு வருவார்கள். அப்போது அங்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் பரிசோதனை செய்து சான்று வழங்குவார்கள். அரசு மருத்துவர்களிடமும் சான்று பெறலாம்.
இட ஒதுக்கீடு
அரசின் அனைத்துச் சலுகைகளையும் மாற்றுத்திறனாளிகள் பெறமுடிவதுடன், அனைத்துச் சலுகைகளிலும் அவர்களுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடும் உண்டு. அரசின் சலுகைகள் அனைத்திலும் மூன்று சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டாயமாக வழங்க வேண்டும். சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளி களுக்கான மறுவாழ்வு மையம், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பயிற்சியளித்து அவர்கள் வேலைவாய்ப்பைப் பெற உதவிவருகிறது.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின்கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் சென்னையில் உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில்சார்ந்த பயிற்சிகளை இந்த மையம் அளித்துவருகிறது. அத்துடன், மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பைப் பெறவும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி உதவிவருகிறது. இந்த மையம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மாற்றுதிறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம்.
வேலைவாய்ப்பு
மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புக் குறித்து மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் தகவல் தெரிவிக்கும்போது, பதிவு செய்துள்ளவர்களைத் தேர்வுக்கோ நேர்முகத்தேர்வுக்கோ அனுப்பி வைக்கிறார்கள்.
மத்திய அரசு 1995-ல் புதிய சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறது. இதன்படி, ஒவ்வொரு நிறுவனமும் தங்களது வேலைவாய்ப்பில் மூன்று சதவீதம் இடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.
இதில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மட்டுமல்ல; பன்னாட்டு நிறுவனங்களும் தாங்களாகவே முன்வந்து பலருக்கும் வேலைவாய்ப்பை வழங்குகின்றன. இந்த வகையில் ஒவ்வொரு நிறுவனமும் வேலைவாய்ப்பு குறித்து அறிவிக்கும்போது அந்தப் பணிக்குத் தகுந்த தகுதிபெற்றவர்களை விண்ணப்பிக்க வைக்கிறது. சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.
உதவித்தொகை
தேசிய உடல் ஊனமுற்றோர் நிதி - முன்னேற்ற நிறுவனம் ஆறு மாதங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்குகிறது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மையம், அந்த உதவித் தொகையையும் பெற்றுத் தருவதோடு இங்கே பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசு வழங்கிவரும் மாதாந்திர உதவித்தொகை 110 ரூபாயையும் அளிக்கிறது. இங்கு பயிற்சிபெறுகிறவர்கள் சுயவேலை வாய்ப்பைப் பெற விரும்பினால் அவர்களுக்குத் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனை வழங்கி, நடுத்தர, சிறுதொழில் பயிற்சி நிறுவனத்தின்கீழ் தொழில் முனைவோருக்கான பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளிக்குத் தேவையான கருவிகளும் தரப்படுகின்றன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்கள் இங்கு நேரடியாக வந்து பயிற்சிபெறுகிறார்கள். பிற மாவட்டங்களில் இருந்து பதிவுசெய்பவர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி முகாம் அமைத்து, செல்போன் பழுதுபார்ப்பு, வீடுகளுக்கு சூரிய சக்தி கருவி அமைத்துத் தரும் பயிற்சி, காளான் வளர்ப்பு, ரேடியோ அறிவிப்பாளருக்கான பயிற்சி போன்ற பல பயிற்சிகள் தரப்படுகின்றன. ஊனமுற்றோருக்குத் தேவையான செயற்கை உறுப்புகள் (செயற்கைக்கால், செயற்கைக்கை போன்றவை), மூன்று சக்கர சைக்கிள், காதுகேட்கும் இயந்திரம், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்குத் தொடு உணர்வுக் கருவி, டேப்ரெக்கார்டர் போன்ற கருவிகளும் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகின்றன.
பயிற்சிகள்
இந்த மையத்தில் பதிவுசெய்பவர்களுக்கு ஓராண்டுக்கான கணிணிப் பயிற்சி, தட்டச்சுப் பயிற்சி, ரேடியோ, டிவி பழுதுநீக்கும் பயிற்சி, வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுதடைந்தால் பராமரிப்பு சரிபார்ப்புப் பயிற்சி, தையல், ஒளிப்படப் பயிற்சி, அச்சுக்கலைப் பயிற்சி, தங்க அளவு நிர்ணயப் பயிற்சி போன்றவை வழங்கப்படுகின்றன. பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆண்களுக்குத் தங்கும் வசதியும் குறைந்த கட்டணத்தில் உணவும் வழங்கப்படுகின்றன.
எப்படிப் பதிவுசெய்வது?
கை, கால் ஊனம், காது கேளாமை, பார்வைக் குறைபாடு, மனவளர்ச்சி குன்றியோர் (51-க்கும் 70-க்கும் இடைப்பட்ட IQ–வில் இருப்பவர்கள்), தொழுநோயால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் பதிவுசெய்யலாம். இவ்வாறு பதிவு செய்யும்போது உடல் குறைபாடு குறைந்தபட்சம் 40 சதவீதம் இருக்க வேண்டும். பதிவுசெய்வதற்கு மாவட்ட மண்டல மறுவாழ்வு அதிகாரி வழங்கும் மருத்துவச் சான்றிதழ், வயதுச் சான்றிதழ், எந்த வகுப்பைச் சார்ந்தவர் என்பதற்கான சாதிச் சான்றிதழ் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இங்கு 15 வயதுமுதல் 50 வயதுவரை உள்ளவர்கள் பதிவுசெய்யலாம். ஆண், பெண் பாகுபாடு கிடையாது. கல்வித் தகுதி தேவையில்லை. ஏற்கெனவே பணிபுரிந்திருந்தால் அதற்கான சான்றிதழை இணைத்துப் பதிவுசெய்யலாம்.
பதிவுசெய்பவர்களுக்கு மறுவாழ்வு அதிகாரியின் தலைமையின்கீழ் இரண்டு சமூகப் பணியாளர்கள் ஆலோசனைகளை வழங்குவார்கள். அதையடுத்து, இங்கே பதிவுசெய்தவர்களின் திறமைக்குத் தகுந்தாற்போல் பயிற்சிப் பிரிவுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
(உரிமைகள் அறிவோம்)
கட்டுரையாளர்,
மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.
தொடர்புக்கு: somurukmani@gmail.com