Published : 20 Jul 2019 06:12 PM
Last Updated : 20 Jul 2019 06:12 PM

வானவில் பெண்கள்: இந்தியாவின் முதல் திருநங்கை செவிலி

ச.ச.சிவசங்கர்

ஆதரவற்ற நிலையிலும் முயற்சியைக் கைவிடாமல் விடாப்பிடியாய்த் தனது லட்சியத்தை அடைந்துள்ளார் ரக்‌ஷிகா ராஜ். சமீபத்தில் நடந்த  டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் ரக்‌ஷிகா பட்டம் பெற்றபோது அனைவரது விழிகளும் ஆச்சரியத்தால் உயர்ந்தன. காரணம், இந்தியாவிலேயே செவிலியாகப் பட்டம்பெற்ற முதல் திருநங்கை ரக்‌ஷிகா.
திருநங்கையர் என்றில்லாமல் பொதுவாக மாற்றுப் பாலினத்தவர்கள் குடும்பத்துக்கு உள்ளும் வெளியும் எண்ணற்ற சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். அப்படியான துயரங்களுக்கு மத்தியில்தான் ரக்‌ஷிகாவின் இந்தச் சாதனையும் அரங்கேறியிருக்கிறது.

யார் இந்த ரக்‌ஷிகா?

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (23). சொந்த ஊரிலேயே பள்ளிக் கல்வியை முடித்தார். பின் பத்ம நர்சிங் கல்லூரியில்  பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ளார். பள்ளிப் பருவத்திலேயே தான் யார் என்பது ராஜ்குமாருக்குப் புரிந்துவிட்டது. ஆனால், அதை வெளியே சொன்னால் நிகழும் விபரீதங்களைத் தன்னால் தாங்க முடியாது என நினைத்து யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், நீண்ட நாட்களுக்கு அதை மறைத்துவைக்க முடியவில்லை. தன்னைத் திருநங்கையாக அறிமுகம் செய்துகொண்டார். மாற்றுப் பாலினத்தவருக்கு வழக்கமாக நடக்கும் அத்தனை துன்பங்களும் இவருக்கும் நடந்தன. கேலி, கிண்டல்களில் தொடங்கி அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்கொண்டார்.

வீட்டுக்குள் நிலைமை இன்னும் மோசம். ராஜ்குமாரின் வார்த்தைகளை அவ்வளவு உவப்புடன் ஏற்றுக்கொள்ளவில்லை. மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகும் வீடு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வில்லை. பெற்றோர் அரவணைத்தாலே இப்படியான சிக்கல்களை எளிதாகக் கடந்துவிட முடியாது. குடும்பத்தின்  ஆதரவற்ற நிலையில் ரக்‌ஷிகாவால் என்ன செய்துவிட முடியும்? ஆனால், எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் அனைத்தையும் தகர்த்தெறிந்து செவிலியாகப் பணியாற்ற வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டார். திருநங்கைகள் செவிலியர் படிப்பில் சேர சில சிக்கல்கள் இருப்பது தெரிந்தபோது, ஆணாகவே தன் படிப்பைத் தொடங்கினார்.

பின்னாளில் தனது திருநங்கை அடையாளத்தை வெளிப்படுத்தியதுடன் அதை அரசின் பதிவுகளிலும் மாற்றிக் கொண்டு பல போராட்டங்களுக்கு பிறகே ரக்‌ஷிகா ராஜ் ஆனார். ரக்‌ஷிகாவின் இந்தச் செயல்பாடுகளால் வீட்டின் எதிர்ப்பு வலுக்க, கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது வீட்டைவிட்டு வெளியேறினார் ரக்‌ஷிகா. “எனக்குப் பெரிய அளவுல யாருடைய ஆதரவும் இல்லை. ரொம்ப கஷ்டபட்டுத்தான் படிச்சேன். பொதுவா திருநங்கைனா ஒரு மாதிரியா பேசுவாங்க.

கிண்டல் பண்ணுவாங்க. பலர் நிறைய தொல்லை தருவாங்க. இதையெல்லாம் உடைக்கணும்னு நினைச்சேன். அதுக்காகத்தான் நர்ஸிங் படிக்க ஆசைப்பட்டேன். என் அப்பா போலீஸ். போலீஸோட பையன் திருநங்கைன்னா ஊர் உலகம் என்ன சொல்லும்னு சொல்லியே என்னைப் பையனாவே இருக்கச் சொன்னாங்க. அதுக்காக என்னை ரொம்ப கட்டுப்படுத்தி னாங்க. நானும் எவ்ளோ நாள்தான் அப்படி இருக்க முடியும்? அதனாலதான் வெளியே வந்துட்டேன்” என்கிறார் ரக்‌ஷிகா.  

தடைகளைத் தாண்டி

கல்லூரியில் சேர்ந்தபோதே தன்னைத் திருநங்கையாகவே அறிமுகப்படுத்திக் கொண்டார். படித்த மனங்கள்  மட்டும் விதிவிலக்கா என்ன? கல்லூரியிலும் கேலி, கிண்டல் தொடர, ரக்‌ஷிகா மனத்தளவில் காயம்பட்ட காலங்களில் கல்லூரி முதல்வர் ஆறுதலாக இருந்தார். அவர் அளித்த ஆதரவு தான் தனது லட்சியத்தை அடைய முக்கியக் காரணமாக இருந்ததாக ரக்‌ஷிகா சொல்கிறார்.

பெற்றோர் பணம் அனுப்பிப் படிக்கும் நிலை ரக்‌ஷிகாவுக்கு வாய்க்கவில்லை. வேறு எந்த வகையான பொருளாதார உதவியும் இல்லாததால் அன்றாடத் தேவைகளையும் கல்லூரிச் செலவுகளையும் சமாளிக்க முடியாமல் அவர் திண்டாடினார். பொருளா தாரச் சிக்கலைச் சமாளிக்கத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பகுதிநேர ஊழியராக இணைந்தார்.  விழாக்களில் கலைக்குழு வினருடன் இணைந்து கரகாட்டம் ஆடினார். அவற்றில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு கல்லூரிப் படிப்பை முடித்தார்.

கல்வி என்னும் கைவிளக்கின் துணையோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டதுடன் தான் சார்ந்த சமூகத்துக்கும் பெருமைதேடித் தந்திருக்கிறார் ரக்‌ஷிகா.  “நான் படிச்சு பட்டம் வாங்கிட்டேனே தவிர இன்னும் எனக்குப் பதிவு எண் கிடைக்கலை. திருநங்கைங்கற ஒரே காரணத்தால என்னை ரொம்ப நாளா அலையவிடுறாங்க. அந்தப் பதிவு எண் இல்லாம மேற்படிப்பும் படிக்க முடியாது, எங்கே யும் வேலையும் செய்ய முடியாது. எதுக்குமே பயன்படாம இருக்கறதுக்கா இந்தப் பட்டத்தை வாங்கினேன்? அரசாங்கப் பதிவு எண் கிடைச்சாதான் நான் பட்ட கஷ்டங்களுக்குப் பலன் கிடைக்கும்” என்று வேதனையுடன் சொல்கிறார் ரக்‌ஷிகா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x