Published : 20 Jul 2019 06:03 PM
Last Updated : 20 Jul 2019 06:03 PM

பார்வை: ‘டிக்டாக்’ வீடியோக்கள் என்ன சொல்கின்றன?

பிருந்தா சீனிவாசன்

பெண்களின் சமூக ஊடகப் பயன்பாடு குறித்துப் பேசுவது கத்தி மேல் நடப் பதைப் போன்றது. ஏன் இந்த அளவுக்குப் பெண்கள் சமூக ஊடகங்களில் ஆர்வத்துடன் களமாடுகிறார்கள் என்று கேட்டு முடிப்பதற்குள்ளாகவே, ‘பெண்களின் இயங்கு வெளியைத் தீர்மானிக்க நீங்கள் யார்? பெண்களை அதைச் செய்யாதே, இதைப் பார்க்காதே என்று சொல்லிக் கட்டுப்படுத்துவதும் பெண்ணுரிமைக்கு எதிரானதுதான்’ என்ற எதிர் கருத்து கிளம்பும். அந்தக் கருத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால், இந்தச் சமூகம் ஒரு பெண்ணை எப்படிப் பார்க்க நினைக்கிறதோ, அதற்கு ஏதுவாகப் பெண்களே தங்களைக் காட்சிப்படுத்துவது ஆரோக்கியமானதா?

யாருடைய விருப்பம்?

இன்று வயது வேறுபாடின்றிக் குழந்தைகளும் பெண்களும் இணையத்தில் ஏராளமான வீடியோக்களைப் பதிவேற்றுகின்றனர். யாரோ பேசிய வசனத்துக்கு வாயசைக்கின்றனர். சிலர் தாங்களாகவே சிலவற்றைப் பாடவோ பேசவோ செய்கின்றனர். சிரித்து, கொஞ்சிப் பேசி, நடனமாடி, அழுது எனப் பல்வேறு உணர்வுகளைத் தாங்கிவரும் வீடியோக்கள் இணையம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன.

இவற்றுக்குப் பார்வையாளர்களும் அதிகம். காரணம் திரைப்படக் காட்சிகள் நமக்கு அந்நியமானவை. அவற்றில் வரும் நடிகர்கள் நமக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறவர்கள். ஆனால், ‘டிக்டாக்’ வீடியோக்களில் தோன்றும் பெண்கள் நம் கைக்கெட்டும் உயரத்தில் இருக்கிறவர்கள். நமக்குத் தெரிந்த முகமாகவோ நம் பக்கத்து வீடுகளில்

வசிக்கிறவர்களாகவோ இருக்கலாம். அதனால், அது உண்மைக்கு நெருக்கமாகத் தோன்றுகிறது; அதனாலேயே கவர்ச்சியும் கிளர்ச்சியும் கூடுதலாக ஏற்படுகிறது. பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கூடுகிறது. இப்படிக் கூடுகிற எண்ணிக்கைதான் பெரும் பாலான பெண்களைச் சாய்த்துவிடுகிறது. தன்னை விரும்பிப் பார்க்கிறவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சுயமோகத்தையோ ஆடைக் குறைப்பையோ மோசமான அங்க அசைவுகளையோ கையிலெடுக் கிறார்கள். அது ஆணுக்கு இன்னும் வசதியாகிவிடுகிறது. அவர்கள் விரும்பியது வேண்டாமலேயே கிடைக்கிறது.

அரசாங்கத்தின் தோல்வி

ஒரு பெண் தனக்குப் பிடித்த வகையில் உடையணியவும் சமூக ஊடகங்களில் செயலாற்றவும் எந்தத் தடையும் இல்லை. ஆனால், தங்கள் தோற்றப் பொலிவிலேயே திருப்தியடைந்துகொண்டு, அது நிறைவேறாதபோது மன உளைச்சலுக்கு ஆளாவதும் மரணத்தை நோக்கிச் செல்வதும் ஆரோக்கியமானதல்ல என்பதை அறியாத நிலை ஆபத்தானது. பெண்கள் விருப்பத்துடன் தங்கள் உடலைக் காட்சிப்படுத்துவதும் ‘ஏன் என்னை லைக் பண்ண மாட்டேங்கறீங்க. எவ்ளோ கஷ்டப்பட்டு ‘டிக்டாக்’ பண்றேன். லைக் பண்ணுங்க பிளீஸ்’ எனக் கெஞ்சுவதும் பெண்களை இந்தச் சமூகம் எந்த அளவுக்கு அறிவுடனும் அரசியல் தெளிவுடனும் (!) வைத்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

ஆண்கள் நுகர வேண்டிய பண்டம்தான் பெண்கள் என்பதை இந்தச் சமூகம் அவர்களின் மனத்தில் ஆழமாக விதைத்து வைத்திருக்கிறது. அதுதான் ஆண்டுகளைக் கடந்தும் தலைமுறை தாண்டியும் பெண்களை எழுச்சிகொள்ளவிடாமல் அழகுச் சிறைக்குள்ளேயே அடிமைப் பட்டுக்கிடக்க வைக்கிறது. பெண் விடுதலையையும் பெண்ணுரிமை யையும் போதிக்க வேண்டிய கல்வி முறை, அவற்றைச் சாத்தியப்படுத்தாதது அரசாங்கத்தின் தோல்வியன்றி வேறென்ன? கற்பனைகளோடும் கனவுகளோடும் பள்ளிக்கு நுழையும் குழந்தைகளின் மனத்தில் பாடத் திட்டங்கள் வாயிலாக வெறும் எண்களையும் சொற்களையும் மட்டும்தான் திணித்து அனுப்புகிறோமா? சமூகத்தைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் அவர்களுக்குப் போதிப்ப தில்லை.

அதுதானே பெரும்பாலான பெண்கள் இன்று தங்கள் அழகோடு மட்டும் திருப்தியடைந்து விடுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது?
குடும்பத்துக்கும் இதில் பெரும் பங்கு இருக்கிறது. பெண் குழந்தைக்குப் பொட்டிட்டுப் பூச்சூட்டி அழகுபடுத்திப் பார்த்து பெண் என்றால் தன்னை அலங்கரித்துக்கொண்டு அடுத்தவரின் பார்வைக்கு விருந்தாக இருக்க வேண்டும் என்பதைத்தான் பெரும்பாலான குடும்பங்கள் கற்றுத்தருகின்றன. தனக்குச் சொல்லப்பட்டதை அந்தக் குடும்பம் அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறது அவ்வளவுதான். இப்படிப் பெண்களின் மூளைக்குள் புகுத்தப்பட்ட சிந்தனைதான் தொழில்நுட்பங்களின் துணையோடு இன்று வெவ்வேறு வகைகளில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இது அங்கீகாரத் தேடலா?
வீட்டிலும் வெளியிலும் பெண்களுக்குப் போதுமான அங்கீகாரம் கிடைப்பதில்லை; அவர்களை வெறுமை ஆட்டிப்படைக்கிறது. அதிலிருந்து மீளத்தான் இப்படிப் பொதுவெளியில் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்கிறார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அவை மட்டுமே காரணமல்ல என்கிறார் சேலத்தைச் சேர்ந்த அரசு மனநல மருத்துவர் அபிராமி. “ஆணோ பெண்ணோ தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்வதை ‘நார்சிசம்’ என்பார்கள். ஃபேஸ்புக், டிக்டாக் போன்றவற்றில் அதீதமாக இயங்குபவர்களை இந்த நார்சிச வகைக்குள் அடக்கிவிடலாம். ஒவ்வொருவரது செயல்பாட்டுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம். ஒன்றிலிருந்து விடுபட மற்றொன்றில் சிக்கிக்கொள்வது ஆபத்து என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள்தாம் உணர வேண்டும். இல்லையென்றால் அவர்களை அதிலிருந்து மீட்க முடியாது” என்று சொல்லும் அபிராமி, சுயமோகமும் ஒருவகையான போதைதான் என்கிறார்.

இதுவும் போதைதான்

“குடிப்பது எனக்குப் பிடித்திருக்கிறது அதனால் குடிக்கிறேன் என்று மது அருந்துகிறவர்கள் சொல்வதைப் போலத்தான், சமூக ஊடகங்களில் கட்டற்று இயங்குகிறவர்களும் சொல்கிறார்கள். இங்கே சமூகப் பார்வையைவிடத் தனி மனித பார்வையே ஆதிக்கம் செலுத்துகிறது. எதையும் அறிவுபூர்வமாக அணுகாமல் உணர்வுபூர்வமாக மட்டுமே செயல்படுத்துவதால் உருவாகிற சிக்கல் இது. எனக்குப் பிடித்திருக்கிறது, நான் என்னைக் காட்சிப்படுத்துவதால் பிறருக்கும் பிரச்சினையில்லை என்கிற மனநிலைதான் பலரை அப்படிச் செயல்படத் தூண்டுகிறது” என்று சொல்கிறார் அபிராமி.

குடும்பத்திலும் சமூகத்திலும் ஒருவர் ஏற்றிருக்கும் பொறுப்பு அல்லது பொறுப்பற்ற தன்மையும்கூட இதற்குக் காரணம் என்கிறார் அவர். “ஒருவர் தனித்து வாழலாம். குடும்பத்திலும் எந்தப் பொறுப்பும் இல்லாமல் இருக்கலாம். சமூகக் கடமை குறித்த சிந்தனையும் இல்லாத போது அவர்கள் இப்படியான செயல்பாடுகளின் மூலம் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால், இதன் எதிர்வினைகளைத் தாங்குகிற அல்லது எதிர்கொள்கிற திடம் பெரும்பாலானோருக்கு இல்லை. அதுதான் விபரீத முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது” என்று சொல்லும் அபிராமி, பெண்கள் தங்கள் எல்லையைச் சுருக்கிக் கொள்ளாமல் தங்களை உண்மையாக உணர்ந்தால் மட்டுமே, இதிலிருந்து வெளிவர முடியும் என்கிறார் அவர்.

ஆதிக்க அரசியல்

சிலர் சமூக ஊடகங்களில் விரும்பத்தகாத வகையில் செயல்படுகிறார்கள் என்பதைக் காரணமாகச் சொல்லிப் பெண்களின் பொதுவெளிப் பயன்பாட்டையே தடைசெய்யச் சொல்வது அறிவீனம் என்று சொல்லும் சமூகச் செயற் பாட்டாளர் ஜீவசுந்தரியின் வார்த்தைகளையும் புறக்கணிக்க முடியாது. “எதற்குமே இரண்டு பக்கம் உண்டு. நீ இப்படி உடையணியக் கூடாது, நடனமாடக் கூடாது என யாரும் யாரையும் கட்டுப்படுத்த உரிமையில்லை. சிறு வயதில் நிறைவேறாத ஆசைகளையும் கனவுகளையும் சிலர் இதுபோன்ற வீடியோக்களின் மூலமாக நிறைவேற்றி மகிழ்கிறார்கள்.

ஆனால், அது அவசியம்தானா என அவர்கள் யோசித்தால் இன்னும் நல்லது” என்று பெண்கள் பயணப்பட வேண்டிய பாதை இதுவல்ல என்பதையும் ஜீவசுந்தரி சுட்டுக்காட்டுகிறார்.
பெண்களின் இயங்குவெளியைத் தீர்மானிக்கவோ கட்டுப்படுத்தவோ யாருக்கும் உரிமையில்லை. ஆனால், பெண்களை அடிமைப்படுத்துகிற ஒன்றைப் பற்றி யாரேனும் பேசினால் அதை வேறொன்றுடன் முடிச்சுப் போட்டு, அது பெண்ணுரிமைக்கு எதிரான வாதம் என எளிதாக மடைமாற்றிவிடுவதும் ஆதிக்கத்தின் குரல்தான் என்ற தெளிவுடன் பெண்கள் செயல்பட வேண்டியது அவசியம்.

உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிவிட்ட இந்நாளில் பெரும்பாலான பெண்கள் சகல திசைகளிலும் சிறகு விரித்துப் பறக்கிறார்கள். பெண்கள் பலர் தடைகளைத் தாண்டி சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறார்கள். ஆனால், தங்களது சிந்தனை அடைய வேண்டிய உயரத்தையும் பெண்களே தீர்மானிக்க வேண்டும். தாங்கள் உடலாகவும் அழகாகவும் மட்டும் அறியப்பட வேண்டுமா அறிவுடனும் சிந்தனைரீதியிலும் அறியப்பட வேண்டுமா என்பதைப் பெண்கள் முடிவுசெய்ய வேண்டும். காரணம் பெண் விடுதலைக்கும் அடிமைச் சிறைக்குமான எல்லைகளைச் சாதூர்யமாக வகுத்துவைத்திருக்கிறது இந்தச் சமூகம். தளைகளை அறுத்தெறிவதும் விலங்குகளைப் பூட்டிக்கொள் வதும்கூட பெண்களின் அரசியல் செயல்பாடுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x