பெண்கள் 360: சாதித்த திருநங்கை

பெண்கள் 360: சாதித்த திருநங்கை
Updated on
3 min read

சாதித்த திருநங்கை

உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, முதன்முதலாக சம்யுக்தா விஜயன் என்கிற திருநங்கைக்கு, முதன்மைத் தொழில்நுட்பத் திட்ட மேலாளர் பதவியை வழங்கியிருக்கிறது. சம்யுக்தா விஜயன், Toutestudio என்கிற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் திருநங்கைகளின் ஃபேஷன் டிசைன், மேக்-அப், ஹேர் ஸ்டைலிங் போன்ற திறமைகளை ஊக்குவித்துக்கொண்டிருக்கிறார். “என் திறமையை மதித்து, ஸ்விக்கி நிறுவனம் கெளரவமான பதவியை எனக்கு வழங்கியதில் மகிழ்ச்சி.

என்னைப் போலவே படிப்பில் தேர்ந்த பல திருநங்கைகள் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் இருக்கிறார்கள். மேலும், படிப்பறிவற்ற திருநங்கைகளும் வேலையில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு, இன்டர்ன்ஷிப் அல்லது ஒரு பயிற்சித் திட்டத்தை ஒன்றிணைத்துச் சரியான திறன்களைப் பயிற்றுவித்து, பின்னர் அவர்களை வேண்டிய பணியில் சேர்த்துக்கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்வர வேண்டும். ஸ்விக்கி நிறுவனத்தில் என்னுடைய குழு, நிச்சயமாகத் திறமை வாய்ந்த திருநங்கைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்" என்றார்.

அநீதியை வென்ற எழுத்து

எழுத்தாளர், போராளி, சமூகச் செயற்பாட்டாளர், புலனாய்வுப் பத்திரிகையாளர் எனப் பன்முகங்களைக் கொண்டவர் இடா பி வெல்ஸ். சக்தி வாய்ந்த வார்த்தைகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட வாக்கியங்களே அவரது எழுத்தின் அடையாளம். கறுப்பினத்தவருக்கு எதிரான உலகின் மிக மோசமான அடக்குமுறையைத் தனது வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடினார். மிசிசிப்பி மாகாணத்தில் 1862-ல் கறுப்பின அடிமையாகப் பிறந்த இடா, அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இடாவுக்கு 16 வயதானபோது, அமெரிக்காவில் மஞ்சள் காய்ச்சல் தலைவிரித்தாடி உயிர்களைக் கொத்துக் கொத்தாகப் பறித்தது. இடாவின் பெற்றோரும் அந்த நோய்க்கு இரையாயினர்.

இடா வேலைக்குச் சென்று, தன்னுடைய பாட்டியின் உதவியுடன் தனது குடும்பத்தைக் காத்தார். சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய அவர், ‘தி மெம்ஃபிஸ் ஃப்ரீ ஸ்பீச்’ எனும் நாளிதழில் பங்குதாரராக இணைந்து பணியாற்றத் தொடங்கினார். 1890-ல் அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு எதிராகத் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலைகளை இடா அந்த நாளிதழின் மூலம் ஆவணப்படுத்தினார். குற்றச் செயல்களுக்கான தண்டனை என்ற பெயரில், வெள்ளையினத்தவருடன் போட்டியிடும் திறன்கொண்ட கறுப்பினத்தவர்கள் எப்படி மனிதாபிமானமற்ற முறையில் அழிக்கப்படுகிறார்கள் என்பதை இவரது ஆவணமே உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டியது. இவரது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஜூலை 16 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

சீனப் பெண்களின் நீண்ட ஆயுள்

மக்கள்தொகையில் மிகப் பெரிய நாடான சீனாவில் வாழும் மக்களின் ஆயுட்காலம் இதர மேற்கத்திய நாடுகளில் வாழ்பவர்களின் ஆயுட்காலத்தைவிடச் சற்று அதிகமாக இருந்துவருகிறது. சீனாவில் ஆண்களைவிடப் பெண்கள் அதிக ஆண்டுகள் வாழ்வதாகப் புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன. 40 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் வாழ்ந்த பெண்களின் அதிகபட்ச ஆயுட்காலத்தைவிடத் தற்போது 12.37 ஆண்டுகள் அதிகரித்துள்ளன. 2017-ல்  82.15 வயதாக இருந்த பெண்களின் அதிகபட்ச ஆயுள் எதிர்பார்ப்பு 2018-ல் 84.63 ஆக அதிகரித்துள்ளது.

அரசுக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தாராளமான மருத்துவ வசதி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் போன்றவற்றால் அங்கே பெண்களின் ஆயுள் அதிகரித்துவருகிறது. இதேபோல், 1979-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மகப்பேற்றின்போது பெண்கள் உயிரிழப்பது 68 சதவீதம் குறைந்துள்ளது. குழந்தைகள் இறந்தே பிறப்பதும் 88 சதவீதம் குறைந்துள்ளது.

டிவிட்டரில் டிரெண்டாகும் சேலை

இரண்டு நாட்களுக்கு முன்பு சில டிவிட்டர் கணக்கர்கள், புடவை அணிந்த தங்களது புகைப்படங்களை #sareetwitter எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளனர். பாலிவுட் நடிகைகள், அரசியல் பிரபலங்களான நக்மா, பிரியங்கா காந்தி, நுபுர் சர்மா, பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் இந்தச் சேலை டிரெண்டிங்கில் பங்கேற்றனர். இந்தியர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டுப் பெண்களும் இதில் ஆர்வமாகப் பங்கேற்றுவருகின்றனர்.

“புடவையை நாங்கள் விரும்புகிறோம். புடவை கட்டுவதைப் பெருமையாகக் கருதுகிறோம்” என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘திருமணத்தின் காலை நேர பூஜையின்போது’ எனக் குறிப்பிட்டு 22 ஆண்டுகளுக்கு முன் எடுத்த, புடவை அணிந்திருக்கும் தனது ஒளிப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த sareetwitter ஹாஷ்டாக்கில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் குழந்தைகளும் புடவை அணிந்து ஒளிப்படங்களைப் பதிவிட்டு வருகின்றனர். பாலிவுட் நடிகரான ஆயுஷ்மான் குரானா புடவை அணிந்த ஒளிப்படத்தை டிவிட்டரில் இன்று பதிவிட்டுள்ளார்.

செல்போனுக்குத் தடை

குஜராத் மாநிலத்தில் உள்ள தாக்கூர் சமூக மக்கள், சில நாட்களுக்குமுன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தினர். அதில், தங்கள் இன மக்கள் வாழும் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிப்பதாக அறிவித்தனர். மேலும், செல்போன் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்குச் சுமார் இரண்டு லட்சம் ரூபாய்வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உடனடியாக இந்த நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர். திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in