முகம் நூறு: அனைத்தையும் சாத்தியப்படுத்திய அன்பு

முகம் நூறு: அனைத்தையும்  சாத்தியப்படுத்திய அன்பு
Updated on
2 min read

நாமக்கல் மாவட்டத்துக்கு இடைப்பட்ட பகுதியில் சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் இருக்கிறது மேரியம்மாள் கருணை இல்லம். நிராதரவான குழந்தை களுக்கும் ஆதரவற்ற முதியோருக்கும் அதன் வாசல் எப்போதும் திறந்திருக்கும். சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்குப் பரிச்சயமான மேரியம்மாள், எப்போதெல்லாம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் அவர் கையில் பச்சிளம் குழந்தை தவழும். பிறந்ததுமே குப்பையென வீசப்படும் சிசுக்களை எடுத்து வந்து, பராமரித்து, அந்தக் குழந்தைகளை அரசிடம் ஒப்படைப்பதுதான் மேரியம்மாளின் பணி. கடந்த 21 ஆண்டுகளில் மூன்று ஆண் குழந்தைகள் உட்பட 80 குழந்தைகளை, தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்துள்ளார். திக்கற்றுத் தவிக்கும் 15 ஆதரவற்ற முதியோர்களைத் தன் வீட்டில் வைத்துப் பராமரித்துவரும் மேரியம்மாளிடம் பேசினோம்.

சேலம், ‘‘தொப்புள் கொடியின் ரத்தம் உலர்வதற்கு முன் தெருவில் வீசப்பட்டு, பாலுக்காக வீறிட்டு அழும் குழந்தைகளின் குரல் கேட்டால் எப்படிப்பட்ட மனிதருக்கும் இதயம் நடுங்கும்” என்று தழுதழுத்த குரலில் சொல்கிறார் மேரியம்மாள்.

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் தஞ்சாவூர் அய்யம்பேட்டையில் அந்தோணி -அற்புதமேரியின் இரண்டாவது மகளாக இவர் பிறந்தார். பிறர் துன்பம் காணச் சகியாத இளகிய மனம் மேரிக்கு. திருமணத்துக்குப் பிறகு தன் கணவர் மைக்கேலுடன் இணைந்து ஆதரவற்றோருக்கு ஆதரவளித்தார்.

“தெருவில் வீசப்படும் குழந்தை களைப் பார்த்து உடைந்துபோனேன். இந்த அவலத்தைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தால் இந்தப் பிறவி எடுத்து என்ன பயன்?” என்று கேட்கும் மேரியம்மாள் 21 ஆண்டுகளுக்கு முன்பு, தனது வீட்டை ‘மேரி கருணை இல்ல’மாக மாற்றினார்.

சேவையே நிம்மதி

சேலம் நாமக்கல் மாவட்டங்களில் குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்ட குழந்தைகள் குறித்த தகவல் கிடைத் தால் போதும். காற்றைவிட விரைவாகச் சென்று குழந்தையை மீட்பார்.

“தாயின் இதம் தேடி அழுகிற அந்தச் சிசுக்களின் குரல் என்னை வதைத்தாலும், பசியாறி விசும்பல் அடங்கும் அந்தத் தருணத்தில் என் உள்ளம் பூரிக்கும்” என்கிறார்.

“கண் தெரியாத மூதாட்டிகள் ஐந்து பேர், மன வளர்ச்சி குன்றிய மூதாட்டிகள் நான்கு பேர் என 25 ஆதரவற்ற மூதாட்டிகளைப் பராமரித்துவருகிறேன். நல்ல உள்ளம் படைத்தவர்கள், வீடாக இருந்ததை இல்லமாகக் கட்டிக்கொடுத்தார்கள். மாதம் மூவாயிரம் ரூபாய் வாடகை. கொடையுள்ளம் கொண்டவர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகை பொருட்கள் வாங்கிக் கொடுப்பதால் இந்த ஜீவன்கள் பசியாறுகின்றன” என்று சொல்லும் மேரியம்மாள், முதுமை காரணமாகத் தன்னால் பழையபடி ஒடியாடி ஆதரவற்ற முதியவர்களுக்கு வேலை செய்ய முடிவதில்லை என்கிறார்.

“என் குழந்தைகள் திருமணம் முடித்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். என் மூத்த மகன் சகாயம், கடந்த மூன்று ஆண்டுகளாக எனக்கு உதவியாக இருக்கிறான்” என்கிறார் மேரியம்மாள்.

சேலம் மருத்துவக் கல்லூரிக்குத் தன் உடலை தானமாக எழுதி வைத்திருக்கிறார். தன் இல்லத்தில் வயது முதிர்ந்து இறந்த மூன்று பேரின் உடலையும் ஒருவரின் கண்களையும் தானமாக அளித்திருக்கிறார்.

“வாழும் ஒவ்வொரு நொடியும் பிறருக்காக உதவி செய்து வாழ்கிறோம் என்ற பூரிப்புக்கு ஈடு இணையே இல்லை” என்று சொல்லும் மேரியம்மாள், அன்பால் அனைத்தும் சாத்தியம் என்பதற்குச் சாட்சியாக வாழ்கிறார்.

படம்: எஸ்.குரு பிரசாத்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in