

கல்லூரியில் முதலாமாண்டு முடித்ததும் திருமணம். அதைத் தொடர்ந்து குழந்தை. என் அம்மாவின் தூண்டுதலாலும் என் புகுந்த வீட்டினரின் சம்மதத்தாலும் என் படிப்பு தொடர்ந்தது. பி.எஸ்சி. கணிதத்தைப் படித்து முடித்தேன். அதற்கிடையில் தமிழ் மற்றும் ஆங்கிலத் தட்டச்சு முடித்தேன். பிறகு இந்தி மொழியையும் கற்றுக்கொண்டேன். தோழிகளின் ஆசைக்கு இணங்கி அவர்களுடன் சேர்ந்து பி.எட். படிப்பையும் முடித்தேன். இதற்கிடையில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தேன்.
பள்ளி நாட்களில் நான் கர்னாடக வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டேன். என் மகளைப் பாட்டு வகுப்பில் சேர்த்துவிட்டு, நானும் அவளுடன் இணைந்துகொண்டேன். இசையில் டிப்ளமோ பட்டம் பெற்றேன். என் படிக்கும் ஆசைக்கும் மற்ற ஆர்வத்துக்கும் என் கணவர் எப்போதும் தடை சொன்னதில்லை. எனக்கு மட்டும் ஒரே துறையில் மேற்படிப்பு படிக்காமல், எல்லாவற்றையும் சம்பந்தம் இல்லாமல் படிக்கிறோமே என்ற குறை இருந்தது.
என் மனக்குறையைப் போக்கும் விதமாக ஒரு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்குத் தலைமையாசிரியை பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை நான் படித்த படிப்பும் அதனுடன் இணைந்த கலைகளும் எனக்கு உதவிபுரியத் தொடங்கின.
சில வருடங்களுக்குப் பிறகு அந்தப் பள்ளியின் தாளாளர், பள்ளியை என்னையே ஏற்று நடத்துமாறு கூறினார். அப்போது மறுத்தாலும் பிறகு நானே சொந்தமாக ஒரு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியை நடத்த முடிவு செய்து, அரசாங்க அனுமதியும் பெற்று, நடத்திவருகிறேன்.
என் பெண், கல்லூரியில் கணினி பிரிவு எடுத்ததால் வீட்டில் கணினி வாங்கினோம். உடனே நானும் கணினி கற்றேன். அதில் விரைவாகச் செயல்பட தட்டச்சு எனக்கு உதவியது. சொந்தப் பள்ளியில் தலைமையாசிரியை பொறுப்பேற்றுக்கொண்டதும் என் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள எம்.ஏ. ஆங்கிலம் படித்தேன். உடன் எம்.ஏ. இந்தியும் முடித்தேன்.
ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோரின் தேவைகள், பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பு இருப்பதால், தற்போது உளவியல் இரண்டாமாண்டு படித்துவருகிறேன்.
திருமணம் முடிந்துவிட்டதே, இதற்குப் பிறகு நாம் படிக்க முடியுமா என நான் முடங்கியிருந்தால் இந்த வளர்ச்சியும் முன்னேற்றமும் எனக்கு வாய்த்திருக்காது. கல்விதான் என் தன்னம்பிக்கையை அதிகரித்தது. கல்விக்கு வயதும் இல்லை, முடிவும் இல்லை.
தோழிகளே, திருமணமாகி விட்டது, பேரன், பேத்தி எடுத்துவிட்டோம் என்பது போன்ற காரணங்களைச் சொல்லிக்கொண்டு, உங்களை நீங்களே சுருக்கிக்கொள்ள வேண்டாம். அடுத்தவர்கள் கேலி செய்வார்களோ என்ற தயக்கத்தை விட்டொழியுங்கள். என்னைப் பார்த்து என் தோழிகளும் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நீங்களும் அப்படியொரு மாற்றத்துக்கு ஏன் தயாராகக் கூடாது?
- அ. கீதா, அண்ணாநகர், திருச்சி.