

இன்று நம் சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் அடிமைத்தனங்களையும் சட்டத்தின் வாயிலாகத் தட்டிக் கேட்கிறோமோ இல்லையோ, கட்டாயம் சமூக வலைத் தளங்களில் கேட்டு விடுகிறோம்.
அப்படி 35 வருட காலமாக மதக் கட்டுப்பாடு என்ற பெயரில் தங்களைக் கட்டுபடுத்திவந்த ஒரு சட்டத்தை இரானியப் பெண்கள் ஒரு சமூக வலைத்தளம் மூலம் முறியடித்திருக்கின்றனர்.
இரான், சௌதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் ‘ஹிஜாப்’ என்ற முகம் மட்டும் வெளித் தெரிவதுபோல் தலையைச் சுற்றி முக்காடு அணிவது கட்டாயச் சட்டம். ‘ஹிஜாப்’ என்றால் அரபு மொழியில் ‘மறைத்துக்கொள்ளுதல்’ என்று அர்த்தம். இந்தக் கட்டுப்பாட்டை உடைத்தெறிய பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் ‘மை ஸ்டெல்தி ஃப்ரீடம்’ என்ற பக்கத்தைத் தொடங்கியுள்ளார் லண்டனைச் சேர்ந்த இரானியப் பெண் பத்திரிகையாளர் மாசி அலிநிஜாத் (Masih Alinejad).
இம்மாதம் 12-ம் தேதி தொடங்கப்பட்ட இப்பக்கத்தில், பல இரானியப் பெண்கள் தங்களது ‘ஹிஜாபை’க் காற்றில் பறக்கவிட்டவாறு, மிகவும் மகிழ்ச்சியாக சுதந்திரக் காற்றை சுவாசிப்பது போன்ற ஒளிப்படங்களைப் பதிவேற்றிவருகின்றனர்.
அது மட்டுமில்லாமல், சுதந்திரத்தையும் அமைதி யையும் பிரிக்க முடியாது; ஏனெனில் சுதந்திரத்தைப் பெறாமல் ஒருவர் அமைதியாக இருக்க முடியாது, எப்போது நாம் நமது கொள்கைகளை பிறர் மீது திணிப்பதை நிறுத்துக்கிறோமா, அப்போதுதான் இந்த உலகம் சொர்க்க பூமியாகும் என்பது போன்று பெண் சுதந்திரத்தைக் குறிக்கும் பல வாசகங்களை #MyStealthyFreedom என்ற ஹேஷ்டேக் உடன் நிலைத் தகவல்களாக எழுதுகிறார்கள்.
ஒரு வாரத்துக்குள் 8000-க் கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளியுள்ள இந்தப் பக்கம், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் அடிமைத்தனத்தை ஒழிக்கும் முயற்சியாக இது போன்ற பக்கங்களை நாம் தொடங்க நினைத்தால், பல பக்கங்களை தொடங்க வேண்டியிருக்கும்.