

ஒருவரின் சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்கு நுனிவரைதான். அதைத் தொடுவது அல்ல. ஆனால் இந்த வரையறை பெண்களின் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படுவதே இல்லை. சமீபத்தில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவரின் சட்டை காலரைத் தொட்டுச் சரிசெய்யும் படம் இணையதளங்களில் வெகுவேகமாகப் பரவிவருகிறது.
மருத்துவரின் சட்டை காலர் மடிந்திருந்தால் அதை அவரிடமே சரிசெய்யச் சொல்லியிருக்கலாம். அல்லது உடன் வரும் அதிகாரிகளிடம் தெரிவித்து, அவரது சட்டை காலரை சரியாக அணியச் செய்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் அமைச்சரே, மருத்துவரின் சட்டை காலரைச் சரிசெய்துவிடுவது சரியான அணுகுமுறையா என இணையத்தில் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
‘நெர்வஸாக’ இருப்பதை சாதகமாக்கிக்கொண்டு, ஒரு பெண் மருத்துவரின் சட்டை காலரைச் சரிசெய்வதற்கான துணிவை ஒரு அமைச்சருக்குக் கொடுப்பது எது என்கிற குரல்களும் ஒலிக்கின்றன. இந்தச் செயல் அமைச்சரின் அக்கறையை வெளிப்படுத்துவதுதான் என்றும் பலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
பணிபுரியும் இடங்களில், சாலையில் நடக்கும்போதும், பேருந்து, ரயில் போன்ற வாகனங்களில் பயணிக்கும் போதும் பெண்களின் உடல் மீதான சீண்டல்களுக்கு அளவே இல்லை.
பெண் ஐஏஎஸ் அதிகாரியான ஸ்மிதா சபர்வால், அழகை முன்னிறுத்திதான் பதவியையும் கூடுதல் அதிகாரங்களையும் பெறுவதாகச் செய்தி வெளியிட்டதற்காக ஒரு ஆங்கில வார இதழ் மீது நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்டிருக்கிறார்.
இத்தனைக்கும் நல வாழ்வு, மின் ஆளுமை போன்ற பல விஷயங்களை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக பல விருதுகளைத் தேசிய அளவில் பெற்றிருப்பவர் அவர். ‘மக்கள் அதிகாரி’ என்றே தெலங்கானா மாநிலத்தில் அவரை அழைக்கும் அளவுக்கு மக்களுடன் நெருங்கிப் பழகும் அதிகாரியாக இருப்பவர். “அழகை முன்னிறுத்திதான் பல பதவிகள் எனக்குக் கிடைக்கின்றன என்ற அந்தப் பத்திரிகையின் செய்தி கண்டிக்கத் தக்கது. இது, வேலைக்குச் சென்று வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் பல்லாயிரக் கணக்கான பெண்களை அவமானப்படுத்துவதாகவும் உள்ளது” என பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.