

மாணவர்களை மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மட்டும் பார்க்காமல் அவர்களுக்குள் இருக்கும் தனித்துவத்தை வெளிப்படுத்த உதவும் அரும்பணியில் ஈடுபட்டுவருகிறார் லதா. கோவை ராம்நகரைச் சேர்ந்த இவர், சுற்றியிருக்கும் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கிவருகிறார்.
அன்புக்கு ஏங்கும் குழந்தைகள், பெற்றோர் அரவணைப்பு கிட்டாத பிள்ளைகள், பிறரால் புறக்கணிக்கப்பட்ட மாணவர்கள், கற்றல் மற்றும் செயல்திறன் குறைந்த குழந்தைகள் என ஒவ்வொருவரையும் இனம் கண்டு அவர்களைத் தனித்தனியே பிரித்தெடுத்து அவரவர்க்கு வேண்டிய உளவியல் ஆலோசனை தருகிறார். மாநகராட்சிப் பள்ளிகள் மட்டுமல்ல, பல தனியார் பள்ளிகள், கல்லூரிகளும்கூட லதாவின் உளவியல் ஆலோசனையை வரவேற்கின்றன.
“படிப்பே வராது எனப் பள்ளியில் வெளியே அனுப்ப நினைத்த மாணவனை நாங்கள் எங்கள் கவுன்சலிங் மூலம் இந்த ஆண்டு ப்ளஸ் டூவில் 900 மதிப்பெண்கள் எடுக்கவைத்திருக்கிறோம்” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் லதா.
மாணவர்களுக்கு ஆலோசனை
சேலத்தில் பிறந்த லதா, வளர்ந்தது கோவையில். அப்பா, பள்ளி ஆசிரியர். அம்மா நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பள்ளிக்கூடத்தைச் சொந்தமாக நடத்தி வந்தார். கணவர், ஆடிட்டர். கல்லூரியில் படிக்கும்போது லதாவுக்கு வாலிபால் விளையாட்டில் ஆர்வம். அந்த ஆர்வம் லதாவுக்குத் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வாங்கித் தந்ததுடன் ரயில்வே துறையில் கணக்காளர் பணியையும் பெற்றுத் தந்தது. விளையாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் கோவையில் உள்ள ராக், சிறுதுளி போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வேலை பார்க்கத் தொடங்கினார்.
“வெவ்வேறு அமைப்புகளோடு சேர்ந்து சேவை செய்வதைவிட நாமே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து செய்தால் பலருக்கும் பலன் கிடைக்குமே என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் அறம் ஃபவுண்டேஷன் சேரிடபிள் டிரஸ்ட்” என்கிறார் லதா. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்களாக இருக்கிறார்கள். முதலில் 83 கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் சுமார் 24,170 மாணவ மாணவிகளுக்கு கவுன்சலிங் நடந்தது.
“முதலில் அனைத்து மாணவர் களிடமும் கலந்துரையாடுவோம். பிரச்சினைக்குரிய குழந்தைகளைத் தனியாகக் கண்டெடுத்துப் பேசவைப்போம். கடைசியில் மிகவும் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பல படிகளாக கவுன்சலிங் நடக்கும். படிப்பில் ஆர்வம் குறைவு, பீடி, சிகரெட், குடிப்பழக்கத்துக்கு ஆளாவது, பாலியல்ரீதியான துன்புறுத்தல் போன்றவையே மாணவர்களின் ஆர்வக் குறைவுக்குக் காரணம் எனத் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட பெற்றோர், ஆசிரியர்களுக்கும் கவுன்சலிங் கொடுத்து சரி செய்திருக்கிறோம்” என்று தங்கள் பணியை விவரித்தார் லதா.
மாற்றம் சாத்தியமே
இந்த ஆண்டு அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலிருந்தும் படிப்பில் கீழ்நிலையில் கண்டுணரப்பட்ட 900 மாணவர் களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள்.
“கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கவுன்சலிங் நடத்தினோம். ஒரே ஒரு மாணவரைத் தவிர அத்தனை பேரும் தேர்ச்சி பெற்றனர். எல்லோருமே 50 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் 90 சதவீத மதிப்பெண் வரை பெற்றிருந்தார்கள். ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாததால் உடைந்துபோய் அழுத அந்த மாணவனையும், உடனடி தேர்வு எழுதவைத்து, கல்லூரியில் சேர்ப்பதாக உறுதியளித்திருக்கிறோம்” என்கிறார் லதா.
படிப்புக்கு மட்டுமல்ல, தற்காப்புப் பயிற்சிகளையும் அறம் அமைப்பு சார்பில் கற்றுத்தருகிறார்கள். அதற்காகப் ‘புதுமைப்பெண்கள்’ என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து விநியோகித்திருக்கிறார்கள்.
“வளமான குழந்தைகள்தான் வளமான இந்தியா என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் குழந்தைகளிடம் இருந்து எங்கள் பணியைத் தொடங்கியிருக்கிறோம்” என்கிறார் லதா.
படம்: ஜெ. மனோகரன்