

ஆறே வாரத்தில் சிவப்பழகு, ஏழே வாரத்தில் எடை குறைப்பு என்று திரும்பிய பக்கமெல்லாம் பளிச்சிடும் விளம்பரங்களைத் தவிர்க்க முடிவதில்லை. இன்னும் சிலர் வீதிக்கு வீதி குடைவிரித்து உட்கார்ந்திருக்கிறார்கள். நம் உயரத்துக்கு ஏற்ற உடலமைப்பும் எடையும் இருக்கிறதா என்று இலவசமாகப் பரிசோதிக்கும் அவர்கள், அதைச் சரிசெய்வதற்காகவே விதவிதமான திட்டங்களும் வைத்திருக்கிறார்கள். இந்த கேப்ஸ்யூலைச் சாப்பிட்டால் ஸ்லிம்மாகிவிடலாம், இந்தப் பவுடரைத் தண்ணீரில் கரைத்துக் குடித்தால் ஜீரோ சைஸ் அழகு பெறலாம் என்று ஆளாளுக்கு அஸ்திரத்தை வீசுகிறார்கள்.
எப்படி முயன்றாலும் பெண்கள் ஏதாவதொரு அஸ்திரத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். காரணம் பெண் என்றால் அவளது அறிவு, திறமை, பண்பு இவற்றையெல்லாம்விட அவளது அழகுதான் முன்னிலைப் படுத்தப்படுகிறது. அதுவே அவளது அடையாளம் என்று இந்தச் சமூகத்தால் வலிந்து திணிக்கப்படுகிறது. இதுபோன்ற வெற்று அடையாளங்களைக் கடந்துவருகிற பெண்கள் மிகச் சிலரே.
அதற்காக எந்த நேர்த்தியும் செய்துகொள்ளாமல் வாழ முடியுமா என்று கேட்கலாம். புறத்தோற்றம் முக்கியம்தான். அதைப் பராமரிப்பதிலும், உடல் நலத்தைப் பாதுகாப்பதிலும் தவறில்லை. ஆனால் அழகாகவும், நல்ல உடலமைப்புடனும் இருக்க வேண்டும் என்பதற்காக ஆபத்தை விலைகொடுத்து வாங்கலாமா? அழகுக்காக மேற்கொள்ளப்படும் பல முயற்சிகள் உயிருக்கே உலைவைத்துவிடுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வாலின் மரணம் அதற்குச் சமீபத்திய உதாரணம்.