Published : 18 May 2014 16:20 pm

Updated : 20 May 2014 14:54 pm

 

Published : 18 May 2014 04:20 PM
Last Updated : 20 May 2014 02:54 PM

தொழில் மையத்தில் ஒரு தொண்டுள்ளம்

அது 1993-ம் ஆண்டு, மார்ச் மாதம் 12-ம் நாள். இந்தியாவின் நிதி வருவாய்த்துறைத் தலைநகராகக் கருதப்படும மும்பை நகரத்தின், மிகப் பிரபலமான கட்டிடங்கள் சிலவற்றில் 12 முறை தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அந்தக் கொடூர குண்டுவெடிப்புகள், மும்பை நகரத்தையே உலுக்கிவிட்டன.

அப்போது மூன்றாம் மாடியில் தனது அலுவலக அறையில் இருந்த அந்தப் பெண், அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடி ஒருவழியாக உயிர் தப்பினார். அந்தப் பெண், மஹாராஷ்டிராவின் மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் முதல் பெண் தலைவியாகப் பொறுப்பேற்றுப் பெருமைப் படத்தக்க விதத்தில் பணியாற்றிய தீனா மேத்தா. குண்டுவெடிப்பு ஏற்பட்டபோது, தீனா மேத்தா ஏழு மாதக் கர்ப்பிணி.

“நினைவில் நிற்கும் சம்பவங்கள் என் வாழ்க்கையில் எத்தனையோ உள்ளன. இருந்தாலும்கூட, அந்தக் குண்டுவெடிப்பு நாள்தான் மறக்கவே முடியாத தினம்” என்று நீண்ட பெருமூச்சுடன் கூறுகிறார் 52 வயதாகும் தீனா மேத்தா.

பங்குச் சந்தை பணியில்

தீனா, மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்; மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் பயிற்சிக் கழகத்தில் படித்து, பங்குச் சந்தை படிப்புக்கள் துறையில் டிப்ளமா பட்டம் பெற்றவர்; அரசாங்க சட்டக் கல்லூரியில் செக்யூரிட்டீஸ் சார்ந்த சட்டத் துறையில் எம்.ஏ. பட்டதாரியான தீனா மேத்தா, லண்டனின் செக்யூரிட்டீஸ் மற்றும் முதலீட்டுக் கழகத்தில் உறுப்பினர். மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் நடத்தை நெறிமுறைக் கமிஷனிலும் இவர் உறுப்பினராக இருந்தார்.

கடந்த பத்தாண்டுக் காலத்தில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது தொடர்பான அபாயங்கள், லாபம் ஈட்டுவது, அதிலுள்ள எதிர்பாராத இழப்பு மற்றும் அபாயங்கள் பற்றிய நிதி சார்ந்த விஷயங்களை முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாகப் பெண் முதலீட்டாளர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்து அறிவூட்டுவதற்காக, 400க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பயணம் செய்து இந்தியா நெடு கிலும் ஆயிரத்துக்கும் அதிகமான முதலீட்டாளர் கல்விப் பயிற்சித் திட்டங்களை நடத்தியுள்ளார்.

குவிந்த விருதுகள்

125 ஆண்டு கால மும்பையின் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் போர்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி இவரே. நிதித்துறையில் இவர் ஆற்றிய சிறப்பான பணிக்காக 2005-ம் ஆண்டில் காஸ்மோஸ் வங்கி இவருக்கு விருது வழங்கிச் சிறப்பித்தது. 1998-ல் இந்தியன் ஜேஸீஸ் அமைப்பினர், வர்த்தகப் பிரிவில் தலைசிறந்த இளம் இந்தியர் என்ற விருதை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தனர். ஜப்பானுக்குச் சென்ற எட்டாவது ஜேஸீ இளைஞர்கள் நீள்பயணத்தில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்ணான இவர், இப்போது மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் அமைப்பின் ஆலோசகர் குழுவில் உறுப்பினர். 2001-ல் கோல்டன் மகாராஷ்டிரா விருதைப் பெற்றுள்ளார்.

இத்தனை விருதுகளைப் பெற்றாலும் தன்னைச் சாதனையாளராக இவர் கருதிக்கொள்ளவில்லை. “சிலர் பிறவியிலேயே சிறப்பான தகுதிகளுடன் பிறக்கிறார்கள். வேறு சிலர், முயற்சித்து மேன்மையையும் சிறப்பையும் அடைகிறார்கள். இன்னும் சிலர் மீது சிறப்பும் மேன்மையும் திணிக்கப்படுகின்றன; நான் கடைசிப் பிரிவைச் சேர்ந்தவள். நான் ஒரு பெண் என்ற காரணத்தால் விருதுகளும் பாராட்டுக்களும் எனக்குக் கிடைத் திருக்கலாம்” என்று அடக்கமாகக் கூறுகிறார் தீனா மேத்தா.

2001-ல் குஜராத்தில் நிகழ்ந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் பிற நிறுவனங்களின் உதவி மூலம் பத்துக் கோடி ரூபாயைத் திரட்டி வழங்கியுள்ளார் இவர். தனது சொந்தப் பணத்தைக்கொண்டே, தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் ஓலைமேடு மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அறுபது வீடுகளைக் கட்டிக்கொடுத்தார்.

இந்தப் பங்குச் சந்தைப் பிரியரின் கணவர் அஸீத் மேத்தாவும் இதே தொழிலில்தான் இருக்கிறார். இவர்களுக்கு இரு மகன்கள். மூத்தவர் ஆதித்யா மேத்தா, பங்குச் சந்தைத் தொழிலில் இருக்கிறார். 21 வயதாகும் ஆகாஷ் மேத்தா, ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ செய்யும் கலைஞராக இந்தி சேனல்களில் சக்கை போடு போடுகிறார்.

பங்குச் சந்தையில் வேலை பார்க்கும் அனுபவம் தீனாவுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. “பங்கு வர்த்தகத் துறை, தொட்டால் சுருங்கியைப்போல அடிக்கடி மாறுபடுகிற வசீகரமான பிசினஸ். இந்தத் தொழிலின்பால் நான் ஈர்க்கப்பட்டு முப்பதாண்டுகள் ஓடிவிட்டன. எப்போதும் சுறுசுறுப்பான, விறுவிறுப்பான நடவடிக்கைகள் அலுப்பு சலிப்பில்லாமல் இங்கு நிகழ்ந்துகொண்டே இருப்பதால், எனக்குப் பிடித்த தொழிலாக இது அமைந்துவிட்டது” என்று சொல்லும் தீனா கடுமையான உழைப்பாளி.

தீனாவின் விருப்பமான பொழுதுபோக்கு புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது, புத்தகங்களைப் படிப்பது, நிதித்துறை சார்ந்த கட்டுரைகள் எழுதுவது போன்றவை. சினிமாவிலோ, டிவி தொடர்களிலோ அரசியலிலோ ஈடுபாடு இல்லை.

பல்வேறு விருதுகளும் பெருமைகளும் பெற்றுள்ள தீனாவுக்கு ரோல் மாடல் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி. அவருடைய நேர்மையும், திறனாற்றலும், அடக்கமும், எந்த விஷயத்திலும் பதற்றப்படாத அணுகுமுறையும் அலாதியானவை என்கிறார். நடிகர் அமிதாப் பச்சனையும் முன்னுதாரணமாகக் கொள்வதாக இவர் சொல்கிறார்.

படப்பிடிப்பில் நடந்த கொடுமையான விபத்துக்குப் பின் அசாத்தியமான மனஉறுதியுடன் அதிலிருந்து மீண்டெழுந்தவர் அமிதாப். அந்தத் தன்னம்பிக்கையும் மனவலிமையும் தன்னை வியக்கவைக்கின்றன என்கிறார், எத்தனையோ பெண்களுக்கு ரோல் மாடலாக விளங்கும் வகையில் பல்வேறு சாதனை களைப் படைத்த இந்தப் பெண்.


தீனா மேத்தாமுகங்கள்நிதித் துறைஸ்டாக் எக்ஸேஞ்ச்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author