நிறைவேறிய கனவு!

நிறைவேறிய கனவு!
Updated on
1 min read

படிப்பது, வரைவது, கைவினைப் பொருட்கள் செய்வது இவைதான் சரண்யாவின் முழுநேர வேலை. திருச்சியைச் சேர்ந்த இவர் எம்.பி.ஏ பட்டதாரி. வேலை தேடும் முனைப்பில் மும்முரமாக ஈடுபட்டாலும் கிடைக்கிற சிறு இடைவெளியையும் கிராஃப்ட் செய்ய ஒதுக்கிவிடுகிறார்.

ஆறாம் வகுப்பு படிக்கும்போதே சரண்யாவுக்கு ஓவியங்கள் வரைவதில் அலாதிப் பிரியம். முறைப்படி ஓவியம் கற்கவில்லையென்றாலும் நாளிதழ்கள், வார இதழ்களில் வருகிற ஓவியங்களை வரைந்து பழகுவாராம்.

“எனக்கு முறைப்படி பயிற்சி எடுத்துக்க அப்போ வாய்ப்பில்லை. நேரம் கிடைத்தால் ஓவிய வகுப்புக்குப் போகலாம்னு இருக்கேன்” என்று சொல்லும் சரண்யாவுக்கு ஃபேஷன் துறையில் சாதிக்க வேண்டும் என்பது கனவாம்.

“நான் ஃபேஷன் டெக்னாலஜி படிக்க வேண்டும் என்றுதான் விரும்பினேன். காரணம் புதுப் புது டிசைன்களில் ஆடைகளை வடிவமைப்பது எனக்குப் பிடிக்கும்” என்று சொல்லும் சரண்யா, தான் விரும்பிய படிப்பைப் படிக்க முடியவில்லை என்றாலும் அந்த ஆசையைக் கலைப் பொருட்கள் செய்வது மூலமாகப் பூர்த்திசெய்துகொள்கிறார்.

விதவிதமான வாழ்த்து அட்டைகள், செயற்கைக் களிமண் பொம்மைகள், ஃபேஷன் நகைகள், காகித நகைகள் என்று பல்வேறு கைவினைப் பொருட்களைச் செய்கிறார். தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் அவற்றைப் பரிசளிக்கிறார். அனைத்துக்கும் மேலாக இப்படிக் கலையும் கையுமாக இருப்பது எப்போதும் தன்னை உற்சாகமாக வைத்திருக்கிறது என்கிறார் சரண்யா.

படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in