Last Updated : 07 Jun, 2015 02:29 PM

 

Published : 07 Jun 2015 02:29 PM
Last Updated : 07 Jun 2015 02:29 PM

முகம் நூறு: பசுக்களால் அமைந்த வாழ்வு!

‘சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு’ என்ற வாக்குக்கு நிகழ்கால உதாரணம் தேவிகா ராணி. நாகப்பட்டினம் அருகேயுள்ள பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தேவிகா ராணி, முப்பத்தியோரு தலைமுறை பசுக்களை வளர்த்த பெருமைக்குச் சொந்தக்காரர். 65 வயதிலும் தன் வளர்ப்பான வள்ளி, ரெங்கம்மாள், வள்ளியின் மகள் தெய்வானையைக் காலை, மாலை தீனி வைத்துக் குளிப்பாட்டி, மகள்களைப் போலப் பராமரித்து வருகிறார்.

“எவ்ளோதான் மழையடிச்சு ஊத்தினாலும் சரி, வெயில் கொளுத்துனாலும் சரி, மாட்டு முகத்துல முழிச்சி, அதுக்குத் தேவையானதைச் செஞ்சு, பால் கறந்து, கன்றுக்குப் பால் விட்டாதான் எனக்குப் பொழுது விடிஞ்சதா அர்த்தம். ஆறு மணிக்குள்ள நான் எந்திரிச்சு வரலைன்னா அதுங்க ம்மா, ம்மான்னு கத்தி என்னைக் கூப்பிட்டுவாங்க” என்று சொல்லும் தேவிகா ராணியின் கையை நாக்கால் நக்கி, தன் பாசத்தை வெளிப்படுத்துகிறது வள்ளி.

“இவ 31-வது தலைமுறை. இவளுக்கு மூதாதை, நான் முதன்முதல்ல வாங்கின லெஷ்மி. அவள்ல இருந்து ஆரம்பிச்சு சரியா இது 31-வது தலைமுறை” என்று வள்ளியின் வரலாற்றைச் சொல்கிறார் தேவிகா ராணி.

பெருகிய மந்தை

தேவிகா ராணியின் கணவர் ராமலிங்கம், மயிலாடுதுறையில் காவலராகப் பணியில் இருந்தபோது 1981-ம் ஆண்டு கோமதி தியேட்டர் எதிரில் ஐநூறு ரூபாய்க்குக் கிடாரிக் கன்றாக வள்ளியை வாங்கியிருக்கிறார். சரியாக இரண்டு வருடங்களில் அது வளர்ந்து, சினை பிடித்து மாதரசியை ஈன்றது. அது பத்தாம் மாதத்தில் சினை பிடித்து மீனாட்சியை ஈன்றது. பிறகு அபிராமி, சரஸ்வதி, நந்தினி, கண்ணகி என்று தலைமுறைகள் பெருகியிருக்கின்றன. இதற்கிடையே சீர்காழிக்கு மாற்றலாகி அங்கே குடிபெயர்ந் திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மாடுகள் அதிகமானதால் காவலர் குடியிருப்பில் இருக்க முடியாமல் மாடுகளுடன் கிளம்பிச் சொந்த ஊருக்கே வந்து விட்டார்கள்.

மாடுகள் மேல் தேவிகா ராணி பாசம் வைத்துக் கரிசனம் காட்ட, அவை ஒன்றுக்குப் பத்தாகத் திருப்பித் தந்தன. பொரவச்சேரி கிராமத்துக்கே தேவிகா ராணிதான் பால், மோர் விநியோகம் செய்கிறார். இதனால் குடும்ப வருமானம் பெருக, இன்னொரு புறம் ஒவ்வொரு கன்றும் அதன் சந்ததிகளைப் பெருக்கிக்கொண்டே இருந்தது. வயதான மாடுகளை விற்க, அந்த வகையிலும் பணம் புழங்கியது.

வளர்ந்த வருமானம்

மாடு விற்ற பணம், பால் விற்ற பணம் இவற்றைக் கொண்டு முதன் முதலாக ஐந்நூறு ரூபாய்க்கு 1 சவரன் தங்கம் வாங்கியிருக்கிறார். பின்னர், தனக்குத் தேவையான நகைகள், சொந்த ஊரில் மனை, அதில் வீடு, இரண்டு ஆண் பிள்ளைகளின் படிப்பு, திருமணம் என்று எல்லாவற்றுக்கும் பசுக்களே உதவியிருக்கின்றன.

1999-ம் ஆண்டு வரையிலும் ஒவ்வொரு மாட்டிலிருந்தும் எவ்வளவு வருமானம் வந்தது என்பதைத் துல்லியமாகக் கணக்கு வைத்திருக்கிறார் தேவிகா ராணி. அந்த ஆண்டுவரை கிட்டத்தட்ட ஆறு லட்ச ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது.

“அதுக்குப் பிறகு ஒன்பது லட்ச ரூபாய் வருமானம் வந்திருக்கும்னு நினைக்கிறேன்” என்கிறார் தேவிகா ராணி.

“மாடு வளர்ப்பில் என் வீட்டுக்காரரும், பிள்ளைகளும் பெரிய அளவில் உதவுனாங்க. அவங்க ஒத்துழைப்பு இல்லைன்னா இத்தனை மாடு களை என்னால வளர்த்திருக்க முடியாது. எனக்கு உடம்பு சரியில்லைன்னா எப்படிப் பதறிப் போவாங்களோ அதே போல மாட்டைப் பார்த்தவுடனே அதுக்கு எதுவும் பிரச்சினையான்னு கண்டுபிடிச்சு மாட்டு டாக்டரைக் கூட்டிட்டு வருவாங்க. தீவனம், குடல் புழு நீக்கம், கன்றுகள் பராமரிப்பு, பால் கணக்கு இப்படி எல்லா வகையிலும் அவங்க உதவுனாங்க. படிச்சு முடிச்சு பெரியவன் போலீஸ் வேலைக்கும், சின்னவன் பேங்க்லயும் வேலைக்குப் போறாங்க” என்று சொல்லும் தேவிகா ராணி, தன் கணவனின் இறப்புக்குப் பிறகு மாடுகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டார். இப்போது வள்ளி, தெய்வானை, ரெங்கம்மாள் ஆகிய மூன்று பசுக்கள் மட்டுமே இருக்கின்றன.

“இதுவும் இல்லைன்னா என் வாழ்க்கைக்கு அர்த்தமே இருக்காது. என் கடைசி மூச்சு வரைக்கும் அதுகளுக்குத் துணையா நானும் எனக்குத் துணையா அதுகளும் இருக்கும்” என்று நெகிழ்ந்துபோய்ச் சொல்கிறார் தேவிகா ராணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x