

பிக்கல் பிடுங்கல் இல்லாத வங்கிப் பணி, அதில் 20 வருட அனுபவம், கை நிறைய சம்பளம். நாற்பதுகளில் இருக்கும் பெண்ணுக்கு இதைவிட வேறென்ன வேண்டும் என்று தோன்றலாம். ஆனால் இத்தனை இருந்தும் ஏதோ ஒரு போதாமை ஜெயலக்ஷ்மிக்கு. தன் வாழ்நாள் கனவாக நினைத்துக் கொண்டிருந்ததை நிறைவேற்ற இதுவே சரியான தருணம் என்று நினைத்தார். வங்கிப் பணியை உதறினார். வயல்வெளியில் இறங்கினார். இன்று விவசாயியாகத் தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து நிற்கிறார்.
ஜெயலக்ஷ்மியின் சொந்த ஊர் மதுரை. இவருடைய தாத்தா விவசாயி. ஆனால் இவருடைய தந்தை காலத்தில் குடும்பத்தின் முதன்மைத் தொழிலாக விவசாயம் இல்லை. தந்தை தாசில்தாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜெயலக்ஷ்மியும் உடன்பிறந்தவர்களும் தனியார் நிறுவனங்களில் பணியில் அமர்ந்தனர். ஜெயலக்ஷ்மிக்கு சிறுவயது முதலே விவசாயத்தில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகம். வளர்ந்த பிறகு விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் குடும்பத்தின் பொருளாதாரத் தேவை, ஜெயலக்ஷ்மியை வங்கிப் பணியில் அமர்த்தியது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வங்கியில் வேலைபார்த்த பிறகும் தன் விவசாயக் கனவுகளை ஜெயலக்ஷ்மி கைவிட்டுவிடவில்லை.
மெய்ப்பட்ட கனவு
நேரம் கிடைக்கும் போதெல்லாம் விவசாயம் குறித்த புத்தகங்களையும் செய்திகளையும் தொடர்ந்து படித்து வந்தார். குறிப்பாகச் சுபாஷ் பாலேகர், நம்மாழ்வார் போன்ற வேளாண் அறிஞர்களின் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்தார். வேளாண் துறையில் சிறந்து விளங்கும் நண்பர்களிடம் இருந்து அவ்வப்போது ஆலோசனை பெற்றுவந்தார். புத்தகங்கள் மற்றும் நண்பர்கள் வாயிலாகக் கிடைக்கும் இந்த வேளாண் அறிவு நிச்சயம் ஒருநாள் பயன்படும் என்று உறுதியாக நம்பினார்.
பொருளாதாரத்தில் ஓரளவு தன்னிறைவு பெற்ற பிறகு துணிந்து வங்கிப் பணியில் இருந்து விலகினார். விவசாயம் செய்யப்போவதாக வீட்டில் சொன்னதும், அனைவரும் ஆதரவு தெரிவித்தது இவரது உற்சாகத்தை இரட்டிப்பாக்கியது. சிலர் மட்டும் நாற்பத்தைந்து வயதில் இதெல்லாம் தேவையா, ஏசி அறையில் வேலை பார்ப்பதை விட்டுவிட்டு எதற்கு இந்த வேண்டாத வேலை என்று எதிர்மறை கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்த ஜெயலக்ஷ்மிக்கு அவர்களின் பேச்சும் மறைமுக ஆதரவு போலவே தோன்றியது.
இயற்கையின் வழியில்
ஜெயலக்ஷ்மியின் குடும்ப நண்பர் ஒருவரின் விவசாய நிலம் குமாரபாளையத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அந்த நிலத்தைப் பார்வையிட்டார். நண்பரின் நிலம் என்பதால் தன் முயற்சிக்கு எந்தத் தடையும் இருக்காது என்று அங்கிருந்தே தன் விவசாயப் பணியை ஜெயலக்ஷ்மி தொடங்கினார். விவசாயம் என்பது வங்கிக் கணக்கைச் சரிபார்த்து எழுதுவது போன்ற செயல் அல்ல என்று ஜெயலக்ஷ்மிக்குத் தெரியும். அதிகபட்ச உடலுழைப்பும் அதைத் தோற்கடிக்கிற பொறுமையும் வேண்டும் என்பதையும் அவர் உணர்ந்தே இருந்தார்.
விவசாயத்தின் ஆணிவேர் மண். அதைப் பண்படுத்துவதுதான் விவசாயத்தின் முதல் படி. செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மண்ணைப் பண்படுத்தும் பணியில் இறங்கினார். வயல்வெளியைக் கவனித்துக்கொள்ள ஒரு விவசாயக் குடும்பத்தை நியமித்தார். எக்காரணம் கொண்டும் செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்தார். அதனால் உரத் தேவைகளுக்காக மூன்று மாடுகளை வளர்த்துவருகிறார்.
“என்னோட இந்த முயற்சிக்கு என் வீட்டில் இருக்கிறவர்கள் மட்டுமல்ல, தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று பலரும் பல வழிகளில் உதவுறாங்க. நான் என்னதான் புத்தகங்களில் படிச்சு தெரிஞ்சிக்கிட்டாலும் அனுபவ அறிவோட துணை அவசியம்தானே. அதனால வயசுல மூத்த, அனுபவம் வாய்ந்த விவசாயிகளிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்வேன்” என்று சொல்கிற ஜெயலக்ஷ்மி எந்நேரமும் விவசாயப் பணிகள் குறித்த யோசனையிலும் செயல்களிலும் பரபரப்புடன் இருக்கிறார்.
தொடரும் பயணம்
பண்படுத்திய நிலத்தில் முதலில் நெல், காய்கறி, கீரை வகைகளை விதைத்தார். அடுத்த போகத்துக்கு நெல், எள், உளுந்து ஆகியவற்றை விதைத்தார். சாணம், கோமயம், வெல்லம் ஆகியவற்றைக் கலந்து விவசாயிகளின் உதவியுடன் இவரே பஞ்சகவ்யா உரத்தைத் தயாரித்தார். வேப்பங்கொட்டை, புங்கங்கொட்டையை கோமயத்தில் ஊறவைத்துத் தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லியைப் பயிர்களுக்குத் தெளித்தார். ஆனால் இவரது இந்தச் செயல்பாடுகளை ஆரம்பத்தில் அனைவரும் கேலி பேசினர்.
“உரம் போடாம எப்படிம்மா பயிர் வளரும்? சும்மா ஒரு மூட்டை யூரியாவையாவது போடும்மா” என்று பலரும் என்னிடம் சொன்னார்கள். ஆனால், “இயற்கை உரத்தில் என்ன விளைகிறதோ அதுவே எனக்குப் போதும்” என்றேன். களையெடுக்கவும், அறுவடைக்கும் இங்கே பக்கத்தில் இருக்கிற விவசாயப் பணியாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறேன். இயற்கை உரத்தில் விளைந்த உணவுப் பொருட்களைப் பார்த்து இப்போ எல்லாரும் ஆச்சரியப்படுறாங்க” என்று வெற்றிப் புன்னகையுடன் சொல்கிறார் ஜெயலக்ஷ்மி. தன் கனவை விரிவுபடுத்தத் தன் தம்பியின் உதவியுடன் விவசாய நிலத்தைச் சொந்தமாக வாங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
“சகல வசதிகளும் நிறைந்த இருபது வருட நகர வாழ்வைவிட வசதிகள் குறைந்த, ஆனால் நிம்மதி நிறைந்த இந்த வாழ்வே பிடித்திருக்கிறது” என்று சொல்கிறார் ஜெயலக்ஷ்மி. அந்தி வானமும் கிறீச்சிடும் பறவைகளின் கானமும் அந்தச் சூழலை ரம்மியமாக்க, துப்பட்டாவைத் தலையில் சுற்றிக் கொண்டு மண்ணைக் கொத்துகிறார் ஜெயலக்ஷ்மி.