Published : 17 May 2015 01:51 PM
Last Updated : 17 May 2015 01:51 PM

கை கொடுக்கும் ஸ்டன் துப்பாக்கி

நம் சமூகத்தில் எத்தனையோ மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டிருந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் சதவீதமும் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. கருவறையில் தொடங்கும் பாதுகாப்பின்மை பெண்களுக்குக் கல்லறைவரை தொடரவே செய்கிறது. பிணமான பிறகும் வல்லுறவுக் குள்ளாகும் பெண்களைப் பற்றிய செய்திகள் இந்தச் சமூகத்தில் பெண்கள் வெறும் உடல்களாக மட்டுமே பார்க்கப் படுகிறார்கள் என்பதற்கு சாட்சி. இந்தியாவின் தேசிய குற்றப் பதிவு அமைச்சரவை சமீபத்தில் நடத்திய ஆய்வு வெளியீட்டுத் தகவல் நம்மை திடுக்கிட வைக்கிறது.

‘இந்தியாவில் ஒவ்வொரு 26 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறாள். 34 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறாள். மேலும் ஒவ்வொரு 43 நிமிடங்களுக்கு ஒரு பெண் கடத்தப்பட்டுகிறாள்’ என்று சொல்கிறது அந்த அறிக்கை.

அதனால் ஒவ்வொரு நிலையிலும் பெண்கள் தங்கள் பாதுகாப்பில் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பெண்களின் பாதுகாப்புக்காகவென்றே பிரத்யேகமான கருவிகள் இருக்கின்றன. ஸ்டன் கன் (Stun gun) எனப்படும் கருவி, ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்றச் சூழலில் பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள உதகிறது.

துப்பாக்கி என்றதுமே ஏதோ ஆளைக் கொன்றுவிடுமோ என்று பயம் கொள்ளத் தேவையில்லை. இந்த ஸ்டன் துப்பாக்கி, தீவிரமாகக் காயப்படுத்தாமல் தற்காலிகமாக ஒரு விலங்கு அல்லது நபரைத் தடுப்பதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு சாதனம்.

உதட்டுச் சாயமே கவசம்

உதட்டுச் சாயக் கருவி போல வடிவமைக்கப்பட்டிருக்கும் லிப்ஸ்டிக் ஸ்டன் கன் துப்பாக்கி, பார்க்கச் சிறியதாக இருந்தாலும் பலம் வாய்ந்தது. நம்மைத் தாக்க வருகிறவரின் கை, கால்களைத் தற்காலிகமாக வலுவிழக்கச் செய்யும் திறம் இந்தத் துப்பாக்கிக்கு உண்டு.

“சந்தேகத்துக் குரியவர்களை முடக்கக் காவல் துறையினர் பயன்படுத்தும் டேசர்ஸ் (tasers) எனப்படும் ஒரு வகை துப்பாக்கிபோல இந்த உதட்டுச் சாயத் துப்பாக்கி ஏழு மடங்கு சக்தியை வெளிப்படுத்தக்கூடியது” என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள்.

இந்த வகை பாதுகாப்புத் துப்பாக்கியை தற்காப்புக்காக அல்லது ஒரு கட்டுக்கடங்காத நபரிடம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. இந்தியாவில் ஸ்டன் துப்பாக்கியைப் பெரும்பாலான மாநிலங்களில் உரிமம் இல்லாமல் வாங்க முடியும். சில மாநிலங்களில் மட்டும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

ஸ்டன் துப்பாக்கிகள் 500 ரூபாய் முதல் 6000 ரூபாய்வரை கிடைக்கின்றன.

மின்னழுத்தம்: குறைந்தது 10 லட்சம் வோல்ட் இருக்க வேண்டும்

பேட்டரி: ரீச்சார்ஜ் செய்யக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும்.

துப்பாக்கியின் அளவு: சிறிய துப்பாக்கியை எடுத்துச் செல்வது எளிது. ஆனால் பேட்டரி நீண்ட காலம் நீடிக்காது. கனரகத் துப்பாக்கிகளின் பேட்டரி நீண்ட காலம் செயல்படும்.

- வை. விண்மதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x