

அங்கே ஏதாவது ஒரு வீட்டில் பெண் குழந்தைகள் இல்லை என்றால், அந்த வீடு மகிழ்ச்சியற்றதாகக் கருதப்படுகிறது. அங்கு மணமகன் வீட்டார்தான் பெண்ணெடுக்க வரதட்சிணை கொடுக்க வேண்டும். திருமணத்துக்குப் பிறகு மணமகன்தான், மணமகளின் குடும்பத்துக்குப் புகுந்த வீடாகச் செல்ல வேண்டும். நாட்டிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான பகுதி அதுதான். கடந்த 10 ஆண்டுகளில் ஒரேயொரு குடும்ப வன்முறை வழக்குதான் பதிவாகியுள்ளது. பாலியல் பலாத்காரம், பெண்களிடம் தகாத முறையில் நடப்பது தொடர்பான வழக்குகளே இங்குப் பதிவாகவில்லை. இங்குள்ள கடற்கரைகளில் நள்ளிரவுவரை பெண்களைப் பார்க்கலாம். ஏன் சில நேரம் கடற்கரையிலேயே பெண்கள் தூங்கவும் செய்கிறார்கள்.
இந்த அளவுக்குப் பெண்களை மதிக்கும் ஒரு பகுதி ஏதாவது கனவு பூமியில்தான் இருக்கும். நிஜத்தில் நடக்கச் சாத்தியமே இல்லை என்றுதானே நினைக்கிறோம். ஆனால், இந்தப் பகுதி வேறெங்கும் இல்லை. இந்தியாவில்தான் இருக்கிறது. கேரளத்துக்கு அந்தப் பக்கம் அரபிக் கடலில் உள்ள லட்சத்தீவுகள்தான் அது.
இன்றும் தாய்வழி சமூகம்
முஸ்லிம்கள் நிறைந்த அங்கு ஒவ்வொரு விஷயத்திலும் பெண்களின் கை இயல்பாகவே வலுவாக இருக்கிறது. அதற்கு மையமாக இருப்பது, தாய்வழி சமூகம். இங்கே தாய்வழி சமூகம் வலுவாக இருப்பதற்குக் காரணம், நீண்ட காலத்துக்கு முன்னே கேரளத்தில் இருந்து பெரும்பாலோர் குடியேறியதால் இருக்கலாம்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குறிப்பிட்ட மருமக்கள் வழி (மருமக்கதாயம்) எனப்படும் தாய்வழி சமூகத்தையே லட்சத்தீவுகளில் பின்பற்றி வருகிறார்கள். இதன்படி கவரட்டி, அகட்டித் தீவுகளில் பரம்பரைச் சொத்தோ அல்லது கூட்டுக்குடும்பச் சொத்தோ எல்லாமே பெண்களுக்கே செல்லும். அதனால் பெண்கள் பொருளாதாரச் சுதந்திரத்துடன் இருக்கிறார்கள்.
சில நேரம் கூட்டுக்குடும்பச் சொத்தை குடும்பத்தின் மூத்த ஆண் நிர்வகித்தாலும்கூட, அதை விற்கவோ, உடமையை மாற்றி கொடுக்கவோ அவருக்கு உரிமை கிடையாது. நிர்வகிப்பது மட்டுமே அவருடைய வேலை. மற்றபடி அந்தச் சொத்து மொத்தக் குடும்பத்துக்குமானது. அதன் காரணமாகக் கூட்டுக் குடும்பத்திலும் பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரமும் தனிப்பட்ட சுதந்திரமும் கிடைக்கிறது.
மறுமணம் சாதாரணம்
திருமணத்தின் ஒரு பகுதியாகச் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை மனைவிக்குக் கணவன் தர வேண்டும். கணவன் அதைக் கொடுக்கவில்லை என்றால் விவாகரத்து கேட்கலாம். விவகாரத்துக்கு பிறகு, பெண்கள் மறுமணம் செய்துகொள்வது சாதாரணம். கணவரை இழந்தவர்களும் மறுமணம் செய்துகொள்கிறார்கள்.
மினிகாய் தீவுகளில் காணப்படும் பெண்களின் வாழ்க்கை இன்னும் தனித்துவம் மிகுந்தது. திருமணத்துக்குப் பிறகு மனைவியின் குடும்பப் பெயரைத் தன் பெயருடன் கணவன் சேர்த்துக்கொள்ள வேண்டும். குடும்ப விவகாரங்கள் அனைத்தையும் பெண்ணே கவனித்துக்கொள்வார். உலகப் புகழ்பெற்ற பயணி மார்கோ போலோ தனது பயணக் குறிப்புகளில் மினிகாய் தீவை ‘பெண்களின் தீவு' என்று குறிப்பிடும் அளவுக்கு அந்தத்தீவு புகழ்பெற்றது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் லட்சத்தீவில் 43 சதவீதம் வீடுகள் பெண்கள் தலைமையில்தான் இயங்குகின்றன. நாட்டிலேயே பெண்கள் தலைமை வகிக்கும் வீடுகள் அதிகமுள்ள பகுதி லட்சத்தீவுகள்தான். ஒட்டுமொத்த இந்தியாவில் பெண்கள் தலைமை வகிக்கும் வீடுகள் 11 சதவீதம் மட்டுமே.
கிராம நிர்வாகத்திலும் பெண் தலைவர்களே முக்கியமானவர்கள். பொது வேலைகளில் பெண்களை எப்படி ஈடுபடுத்துவது என்பதைக் கிராமக் கூட்டங்களில் பெண் தலைவர்களே முடிவு செய்கிறார்கள்.
பிரச்சினைகளே இல்லையா?
பெண்களை இப்படிப் போற்றுவதெல்லாம் நல்லதுதான். பிரச்சினைகளே இல்லாத அதிசயப் பூமியா அது என்ற கேள்வி எழுவது இயல்பு. இருக்கின்றன.
இளம் ஆண்கள் - பெண்கள் இடையே உயர்கல்வி பயில்வதில் ஏற்பட்டுவரும் மிகப் பெரிய இடைவெளி, சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. லட்சத்தீவுகளில் பெரும்பாலான பெண்கள் பட்டதாரிகளாகவோ, முதுகலைப் பட்டதாரிகளாகவோ இருக்கிறார்கள். ஆண்கள் உயர்கல்வியில் அதிகக் கவனம் செலுத்துவதில்லை.
லட்சத்தீவுப் பெண்கள் தனியார் வேலைகளை விரும்புவதில்லை, வீட்டில் டியூஷன் எடுக்கக்கூட விருப்பப்படுவதில்லை. அரசு வேலைக்கு மட்டுமே செல்ல முன்வருகிறார்கள். சமூக நியதிகளை மீறுவதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் காரணமாக, அவர்களுக்கு இந்த மனத்தடை ஏற்பட்டிருக்கலாம்.
அதிகம் படித்தாலும் திருமணத்துக்குப் பிறகு பெரும்பாலான பெண்கள் வீட்டிலேயே தங்கிவிடுவதால், கொஞ்சம் கொஞ்சமாகப் புதிய பிரச்சினைகள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளன.