

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் குறித்த செய்தித் தொகுப்பைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தேன். வெற்றிபெற்றவர்களின் புன்னகையும் தோல்வியைத் தழுவியவர்களின் கண்ணீரும் என்னைப் பலஆண்டுகள் பின்னோக்கிப் பயணிக்க வைத்தன. ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான அன்று சோகத்தால் துவண்டிருந்த என் மகனின் உருவம் என் மனக்கண்ணில் நிழலாடியது.
மகன் அனைத்திலும் முன்னுக்கு வர வேண்டுமே என்று அவனை ஆங்கிலவழி கல்வியில் படிக்கவைத்தோம். எட்டாம் வகுப்புவரை படித்தவன், அதற்குமேல் தன்னால் முடியவில்லை என்று சொன்னான். நாங்கள் அவனை வற்புறுத்தியபோது, அரசுப் பள்ளியில் ஆங்கிலவழியில் படிப்பதாகச் சொன்னான். அவனை இன்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்பதற்காகப் பதினோராம் வகுப்பில் முதல் குரூப் எடுக்கச் சொன்னோம். பிடிவாதமாக மறுத்தான்.
குறைந்தபட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பாவது எடுக்கச் சொல்லிக் கேட்டோம். ஒருவழியாக அரைமனதுடன் சம்மதித்தான். நாட்கள் நகர்ந்ததைப் பார்த்தால் அவன் நல்ல மார்க் எடுப்பானா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் எப்படியோ முதல் வகுப்பில் தேறிவிட்டான்.
ஆனால் அவன் வாங்கிய அந்த மதிப்பெண்ணும் மற்ற மாணவர்களின் கேலிப் பேச்சும் அவன் உற்சாகத்தைக் குன்றவைத்தன. அடுத்து என்ன செய்வது? பணம் கட்டி இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்த்துவிடலாமா என்று யோசித்தோம். கலைக் கல்லூரியில் பி.ஏ தமிழ் படிக்கப் போவதாக என் மகன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தோம். கம்ப்யூட்டர் படிப்பில் மேல்படிப்பு முடித்து, பெரிய இடத்தில் வேலைக்கு அமர்வதை விட்டுவிட்டு இப்படிச் சொல்கிறானே என்று வருத்தமாக இருந்தது.
‘இத்தனை ஆண்டுகளாக உங்கள் விருப்பத்துக்காகப் படித்தேன். இப்போதாவது என்னை நம்பி என் விருப்பத்துக்கு மதிப்பு கொடுங்களேன்’ என்ற என் மகனது வார்த்தைகளில் இருந்த நியாயம் எனக்குப் புரிந்தது. அவன் விருப்பம் போலவே ஒரு கலைக் கல்லூரியில் பி.ஏ தமிழிலக்கியத்துக்கு விண்ணப்பித்தோம். அந்தக் கல்லூரி முதல்வர், எங்களையும் எங்கள் மகனையும் நேரில் வரச் சொன்னார்.
‘எதற்காகத் தமிழிலக்கியம் படிக்க விரும்புகிறாய்?’ என்று என் மகனிடம் கேட்டார். அவனும் தமிழ்தான் தன் விருப்பப் பாடம், அதில் தன்னால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று சொன்னான். கல்லூரி முதல்வர் எங்களிடம், ‘கொண்ட கொள்கையில் அவன் உறுதியாக இருக்கிறான். நிச்சயம் அவன் ஜெயிப்பான்’ என்று சொன்னார். அந்த வார்த்தைகள் எங்கள் நம்பிக்கையை வலுவாக்கின.
மூன்று ஆண்டுகள் நல்லபடியாகப் படித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான். அப்போது நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் அரசுக் கல்வியியல் கல்லூரியில் பயில முடியும். என் மகன் அந்தத் தேர்விலும் வெற்றி பெற்று, கல்வியியல் பட்டப் படிப்பை முடித்தான். தமிழைப் படித்து இவன் வீணாகத்தான் ஆகப்போகிறான் என்று உற்றாரும் உறவினர்களும் சொன்னபோது, என் மகன் கொஞ்சமும் கலங்கவில்லை. மேற்கொண்டு முதுகலை முடித்தான். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று, மாநில அளவில் குறிப்பிடத்தகுந்த இடம் பெற்றான்.
ஆம், நம்புங்கள். 25 வயதில் என் மகன் அரசுப் பள்ளியில் தமிழாசிரியர். முதன் முதலில் ஒரு கிராமத்தில் என் மகனுக்குப் பணி நியமனம் கிடைத்தது. அவனுடைய முதல் நாள் அனுபவத்தில் நாங்களும் பங்கேற்க விரும்பி அவனுடன் சென்றோம். அங்கிருந்த தலைமையாசிரியர், ‘உங்கள் மகனைப் பார்த்தால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் போலவே இருக்கிறார்’ என்று சொன்னபோது எங்களுக்குப் பெருமிதமும் பூரிப்பும். அதன் பிறகு இரண்டு பள்ளிகளுக்கு மாறுதலாகிவிட்டான்.
இரண்டுமே கிராமத்துப் பள்ளிகள். இன்று அவன் கைநிறையச் சம்பளம் வாங்குகிறான் என்பதைவிடப் பல மாணவர்களின் அறிவுக் கண்ணைத் திறக்க ஒரு வழிகாட்டியாக இருக்கிறான் என்பதே பெருமையாக இருக்கிறது. விடுமுறை நாட்களிலும் அவனிடம் பாடம் சம்பந்தமாகச் சந்தேகம் கேட்டுவரும் மாணவர்கள் என் மகன் மீதான மதிப்பைக் கூட்டுகிறார்கள். தமிழ் வாத்தியாரின் அம்மாவாக நான் அறியப்படுவதிலும் கூடுதல் பெருமை.
ஒருவேளை நாங்கள் என் மகனது விருப்பத்துக்கு மாறாக, எங்கள் விருப்பத்தை அவன் மீது திணித்திருந்தால் அவனுக்கு இப்படியொரு மனநிறைவான வாழ்வு சாத்தியமா என்பது சந்தேகமே. எல்லாமே மகன்/மகளின் எதிர்காலத்துக்குத்தான் என்று சொல்லி, தங்கள் கனவுகளை அவர்கள் மீது திணிக்கும் பெற்றோர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றேதான். நம் குழந்தைகளின் கனவை நம்புவோம், அதை அவர்கள் அடைய உறுதுணையாக இருப்போம். நிச்சயம் வாழ்வு வசப்படும்.
- மலர்வேணி, வாலாஜாபேட்டை.