

நாமுழவு, முகச்சங்கு என்று தமிழில் அழைக்கப்படும் மோர்சிங் ஒரு தனித் தன்மையான தாளவாத்தியம். பக்கவாத்தியக் கலைஞர்களுக்கும் பாடுபவருக்கும் ஒருங்கே பக்கபலமாக இருக்கும் வாத்தியம் இது. மிருதங்கத்தை நிழலாகத் தொடரும் மோர்சிங்கின் ரீங்காரம் கச்சேரியின் இனிமையைக் கூட்டவல்லது. அதேநேரத்தில் இந்த வாத்தியத்தை லாவகமாகக் கையாளாவிட்டால் `நா’ காக்க முடியாது. நாக்கில் காயம்படும் ஆபத்து நிறைய உண்டு.
கர்நாடக இசை மேடைகளில் மோர்சிங் வாசிக்கும் பெண் கலைஞர் பாக்யலஷ்மி கிருஷ்ணா. புகழ்பெற்ற லய மேதையும் மோர்சிங் கலைஞருமான பீமாச்சாரின் மகள் இவர். தன்னுடைய மகன்கள் துருவராஜ், ராஜசேகருக்கும் பயிற்சியளித்தது போலவே தன்னுடைய மகள் பாக்யலஷ்மிக்கும் பயிற்சியளித்தார் பீமாச்சார்.
புகழ்பெற்ற லய மேதையான ராமாச்சாரின் சிந்தனையில் உருவானது கர்நாடக மகிளா லய மாதுரி. மிருதங்கம், கஞ்சிரா, கடம், தவில், கொன்னக்கோல் வாசிக்க பெண் கலைஞர்கள் தயாராக இருந்த நிலையில், ராமாச்சாரின் தனிப்பட்ட கவனத்துடன் பயிற்சியளிக்கப்பட்டு மோர்சிங் வாசிக்கும் கலைஞராக மேடையில் அமர்ந்தபோது பாக்யலஷ்மிக்கு வயது 11.
பாரம்பரியமான புதுக்கோட்டை பாணியிலான மோர்சிங் வாசிப்பை தந்தை பீமாச்சாரிடம் இருந்து கற்ற பாக்யலஷ்மி, மின் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். இந்திய கலாச்சார பண்பாட்டு பரிவர்த்தனை மையத்தின் ஆதரவுடன், கர்நாடக மகிளா லய மாதுரி குழுவில் இடம்பெற்று எகிப்து, அல்ஜீரியா, துனிசியா ஆகிய நாடுகளில் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். ஜவஹர்லால் நேருவின் நூறாவது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக நடந்த 6-வது உலக சிறுவர் திரைப்பட விழாவில் கர்நாடகத்தின் சார்பாக பங்கேற்றார்.
கடம் வாத்திய மேதை சுகன்யா ராம்கோபாலின் ‘ஸ்த்ரீ தாள தரங்' அமைப்பின் சார்பாக உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் அரிதான வாத்தியமான மோர்சிங்கை வாசித்திருக்கும் ஆயிரத்தில் ஒருவர் பாக்யலஷ்மி.
தனது தந்தை பீமாச்சார், சகோதரர்கள் துருவராஜ், ராஜசேகர் ஆகியோருடன் இணைந்து பாக்யலஷ்மி மோர்சிங் தரங் நிகழ்ச்சியை சென்னை மியூசிக் அகாடமியில் வாசித்து அகாடமியின் சிறப்புப் பரிசை பெற்றார். ஆம்ஸ்டர்டாமில் நடந்த சர்வதேச ஜுவிஸ் ஹார்ப் திருவிழாவில் மோர்சிங் தரங் நிகழ்ச்சியை வழங்கி இருக்கிறார்.
பாங்காக்கில் நடந்த 9-வது சர்வதேச இசை, நாட்டிய விழாவிலும், புகழ்பெற்ற தபேலா கலைஞரான அனுராதா பாலுடன் இணைந்து டெல்லியில் நடந்த சார்க் சமிதியிலும், லால்குடி விஜயலஷ்மியுடன் இணைந்து அமெரிக்காவிலும் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார் பாக்யலஷ்மி.
இந்திய வானொலி நிலையத்தின் பி ஹை கிரேட் கலைஞரான பாக்யலஷ்மி, தீட்சிதரின் நவவர்ண கிருதிகள், ரெயின்போ, லயமிருதம், சிவசக்தி ஸ்வயம்போ போன்ற எண்ணற்ற இசைக் குறுந்தகடுகளை வெளியிட்டிருக்கிறார்.
இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா உள்பட பல பிரபல வித்வான்களுக்கு பக்கவாத்தியம் வாசித்திருக்கும் பாக்யலஷ்மி, கர்நாடக முன்னாள் முதல்வர் வீரேந்திர பாட்டிலிடமிருந்து சிறந்த இளம் கலைஞருக்கான விருது, பெங்களூர் அனன்யா கலாச்சார மையத்தின் `அனன்யா யுவ புரஸ்கார்’விருது உள்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.