

அமெரிக்காவின் ஹவாய் தீவில் பிறந்து வளர்ந்தவர் பெத்தானி ஹாமில்டன். அவரின் பெற்றோர் அலை விளையாட்டுக்காரர்கள் (Surfer). இரண்டு மகன்களையும் மகளையும் ஒரேமாதிரியாக வளர்த்தனர். குழந்தையிலிருந்தே கடலில் நீச்சலடிப்பதும் நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவதும் பெத்தானியின் இயல்பான ஆர்வங்களாக இருந்தன. தன்னுடைய பெரும்பாலான நேரத்தை நீர் விளையாட்டுப் பயிற்சிகளிலேயே செலவிடுவார். 8 வயதிலிருந்தே போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்துவிட்டார் பெத்தானி.
2003, அக்டோபர் 31 தன்னுடைய வாழ்க்கையைத் திருப்பிப் போடக்கூடிய ஒரு நாளாக இருக்கப் போகிறது என்பதை அறியாத பெத்தானி, வழக்கம் போலவே தன் தோழி அலனா, சகோதரர்களுடன் கடலுக்குச் சென்றார். ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளைப் பார்த்தவுடன் உற்சாகம் பீறிட்டது. தன்னுடைய சர்ஃப் போர்டை மாட்டிக்கொண்டு கடலுக்குள் சென்றார். கரையிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் வந்திருந்தார்.
உடன் வந்தவர்கள் தூரத்தில் தெரிந்தனர். ஒவ்வோர் அலையையும் லாகவமாக எதிர்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென்று ஏதோ வித்தியாசமாக இருந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு பார்த்தார். பெத்தானியைச் சுற்றியிருந்த நீர் சிவப்பாக மாறியிருந்தது. அப்பொழுதுதான் இடது கைப்பக்கம் ஏதோ கடிப்பது போலத் தெரிந்தது. சர்ஃபர் போட்டுடன் பிடித்திருந்த இடது கையையும் சேர்த்து ஒரு புலிச் சுறா வாயில் கவ்வியிருந்தது. தன்னை விடுவித்துக்கொள்வதற்காகக் கைகளை மேலும் கீழும் அசைத்துக்கொண்டிருந்தார் பெத்தானி.
சற்றுத் தூரத்தில் இருந்த அலனா அருகில் வந்தார். அவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. கரையில் நிற்பவர்களுக்குத் தகவல் சொன்னார். சகோதரர்களும் மீனவர்களும் வந்து பெத்தானியை மீட்கும்போது 60 சதவிகித ரத்தம் வெளியேறியிருந்தது. இடது கை காணாமல் போயிருந்தது.
மருத்துவர்கள் பெத்தானி பிழைப்பதற்கு 50 சதவிகித வாய்ப்புதான் இருப்பதாகக் கூறிவிட்டனர். பெத்தானியின் அப்பா கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டு வேறொரு மருத்துவமனையில் இருந்தார். நிறைய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. கடுமையாகப் போராடி மருத்துவர்கள் பெத்தானியின் உயிரை மீட்டனர்.
பெத்தானியும் அலனாவும் அலை விளையாட்டு வீரர்களில் மிகச் சிறிய பெண்கள் என்பதால் அந்தப் பகுதி முழுவதும் பிரபலமானவர்கள். எல்லோருக்கும் அவர்கள் மீது ஏராளமான அன்பு இருந்தது. 14 நாட்களுக்குப் பிறகு ஒரு மீனவர் அந்த 15 அடி நீளப் புலிச் சுறாவைக் கொன்று, கரைக்குக் கொண்டு வந்தார். அதுவரை அந்தக் கடல் பகுதியில் புலிச் சுறா இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த பெத்தானியைக் கடல் இருகரம் நீட்டி அழைத்துக்கொண்டே இருந்தது. காயம் ஆறியவுடன் மூன்றாவது வாரமே கடலுக்கு வந்துவிட்டார் பெத்தானி. சாவின் விளிம்பைத் தொட்டுத் திரும்பியவர் என்பதால், இனி வாழ்க்கையில் கடலுக்குள்ளே இறங்கவே மாட்டார் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
பாதுகாப்பு என்ற காரணத்தைக் கூறித் தங்கள் 13 வயது மகளின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் குலைத்துவிட விரும்பவில்லை பெத்தானியின் பெற்றோர். குழந்தையிலிருந்து பழகிய கடல்தான். விளையாடிய அலைகள்தான். ஆனாலும் கொஞ்சம் கடினமாக இருந்தது. ஒரு கையால் நீந்தப் பழகினார். பெற்றோரும் சகோதரர்களும் உற்சாகப்படுத்தினர். தினமும் பயிற்சி தொடர்ந்தது. சர்ஃப் பேட் மாட்டிக்கொண்டு அலைகளோடு விளையாட ஆரம்பித்தார். இரண்டே மாதங்களில் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்துவிட்டார் பெத்தானி. அவரது நோக்கம் போட்டியில் வெற்றி பெறுவது அல்ல, பங்கேற்பதுதான்!
சுறா தாக்குதல் நடைபெற்று ஓராண்டுக்குப் பிறகு NSSA போட்டியில் பங்கேற்றுத் தேசியச் சாம்பியன் பட்டத்தை வென்றார் பெத்தானி. இதுதான் அவர் வெல்லும் முதல் தேசியப் பட்டம். 2007-ம் ஆண்டில் உலகப் போட்டிகளில் கலந்துகொண்டு உலகம் முழுவதும் பயணம் செய்தார். ஐரோப்பா, தென் அமெரிக்கா, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, ஃபிஜி என்று சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல பட்டங்களை வாரிக் குவித்தார் பெத்தானி.
தன்னுடைய வாழ்க்கையைப் புத்தகமாக வெளியிட்டார். ஆவணப்படமும் வெளியானது. சோல் சர்ஃபர் (Soul Surfer) என்னும் ஹாலிவுட் திரைப்படமும் பின்னர் வெளிவந்தது. குழந்தைகளுக்குத் தைரியம் அளிக்கும் விதத்தில் பெத்தானியின் சில கதைகளும் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.
ஆடம் டிர்க்ஸ் என்ற நீண்ட கால நண்பரை மணந்திருக்கிறார் பெத்தானி. அவரும் அலை விளையாட்டு வீரர். இருவரும் சேர்ந்தும், தனித் தனியாகவும் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். கடந்த ஆண்டு பெண்களுக்கான அலை விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்று, மீண்டும் முதல் நிலை வீராங்கனையாக வலம் வருகிறார் பெத்தானி.
ஜூன் மாதம் குழந்தைப் பிறப்பை எதிர்நோக்கியிருக்கும் பெத்தானி, இப்பொழுதும் நீச்சலை விடவில்லை.
“எனக்கு வேலையும் நீச்சல்தான். பொழுதுபோக்கும் நீச்சல்தான். கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்திலும் நீச்சல் செய்வது நல்ல விஷயமாக இருக்கிறது. பிறப்பதற்கு முன்பே என் குழந்தைக்கு நீச்சல் அறிமுகமாகிவிட்டது’’ என்கிறார் பெத்தானி.
இரண்டு அறக்கட்டளைகளை ஆரம்பித்து நடத்திவருகிறார். சுறா தாக்குதலில் பிழைத்தவர்கள், கை, கால் இழந்தவர்களுக்குத் தன்னுடைய வாழ்க்கையைச் சொல்லித் தன்னம்பிக்கை ஊட்டுகிறார். நிதி திரட்டிக் கொடுக்கிறார். தன்னம்பிக்கை வகுப்புகள் எடுக்கிறார்.
“ஒரு கை வீராங்கனை என்ற பெயரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். சவால் மிக்க வாழ்க்கையை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதில்தானே நம் வாழ்வின் அர்த்தம் அடங்கியிருக்கிறது’’ என்கிறார் பெத்தானி.