Published : 04 May 2014 12:45 pm

Updated : 07 May 2014 14:48 pm

 

Published : 04 May 2014 12:45 PM
Last Updated : 07 May 2014 02:48 PM

முகம் நூறு: பெண்ணாக இருப்பதே பெருமிதம்!

அந்தத் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் ஆண்கள் நிறைந்திருக்கிறார்கள். லோடு வேனை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்குகிற அமுதாவுக்கு 26 வயது. தண்ணீர் கேன்களைத் தனியாளாக நின்று வேனில் ஏற்றுகிறார். முதல் வரிசை ஏற்றி முடித்ததுமே, வலியில் சிவந்துபோகிற கைகளை அழுத்திவிட்டபடியே மீண்டும் வேலையைத் தொடர்கிறார். வியர்த்து வழிகிற முகத்தைத் துடைத்துவிட்டு டிரைவர் சீட்டில் அமர்கிறார். ‘நான் வேணும்னா ரிவர்ஸ் எடுத்துத் தர்றேன்மா’ என்று சொல்கிறவரைப் புன்னகையால் மறுக்கிறார். ‘வேணாம்ணே. நானே பார்த்துக்கறேன். இன்னைக்கு ஒரு நாள் நீங்க உதவி பண்ணுவீங்க. ஆனா இந்த வேலையைத் தினமும் நான்தானே செய்யணும்’ என்று சொல்லிவிட்டுப் பொறுமையாக வண்டியை நகர்த்திப் பின் வேகமெடுக்கிறார்.

இந்தத் தன்னம்பிக்கையும் உறுதியும்தான் தண்ணீர் கேன் சப்ளையில் அமுதாவை மூன்று வருடங்களாக வெற்றிகரமாகச் செயல்பட வைத்திருக்கிறது.


“நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே பழைய பல்லாவரத்துலதான். என் வீட்டுக்காரருக்கு சொந்த ஊர் வந்தவாசி. இங்கே சென்னையில எங்களுக்கு எங்கம்மா இடம் கொடுத்ததால கல்யாணத்துக்கு அப்புறம் இங்கேயே வீடு கட்டி செட்டிலாகிட்டோம். அவருக்குத் தண்ணீர் சப்ளை பண்ற வேலை. எனக்குத் துணி தைக்கத் தெரியும். அவர் சப்ளைக்குப் போனதும் நாம வீட்ல சும்மாதானே இருக்கோம்னு எங்க லைன்லயே ஒரு கடையை வாடகைக்கு எடுத்துத் தையல் கடை நடத்தினேன். என் கணவரோட வருமானத்தோட என் வருமானமும் சேர்ந்து ரொம்ப நிறைவா போச்சு வாழ்க்கை. ரெண்டு பொண்ணுங்க இருக்காங்களே. இன்னும் கொஞ்சம் அதிகமா சம்பாதிச்சா அவங்களோட எதிர்காலத்துக்கு ஏதாவது சேர்த்து வைக்கலாம்னு தோணுச்சு. ‘நாம இன்னொரு கார் வாங்குவோம். அதை ஆள் வச்சுப் பார்த்துக்கலாம். நீ வழக்கம் போல உன் தையல் கடையைப் பார்த்துக்கோ’ன்னு என் வீட்டுக்காரர் சொன்னார். எனக்கும் சந்தோஷமா இருந்துச்சு. ஆனா அது நடக்கறதுக்குள்ளே என்னென்னமோ நடந்துபோச்சு” என்று அமுதா தன் பேச்சுக்கு இடைவெளி விட்டார்.

எதிர்பாராத திருப்பம்

கார் வாங்கப் பணம் கட்டியாகிவிட்டது. வீடே அந்த மகிழ்ச்சியில் திளைத்திருக்க, தன் மனைவியின் ஸ்கூட்டியை ஓட்டிச் சென்ற அமுதாவின் கணவர் சந்திரன் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார்.

“மீனம்பாக்கம் ரோட்டுல போயிட்டு இருந்தப்போ இவருக்கு முன்னாடி போன பஸ் திடீர்னு பிரேக் அடிச்சு நின்னது. இவர் வந்த வேகத்துல பஸ் மேல மோதிட்டார். வண்டி அப்பளமா நொறுங்கிப் போச்சு. இவருக்கு ஒரு கால்லயும், ரெண்டு கையிலயும் எலும்பு முறிஞ்சுடுச்சு. எங்களுக்கு என்ன பணறதுன்னே தெரியலை. மொத்தக் குடும்பமுமே ஸ்தம்பிச்சுப் போச்சு. இவர் நடமாட முடியாம வீட்ல இருக்காரு. வருமானத்துக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. என்னாலயும் இவரை விட்டுட்டு அங்கே, இங்கே நகர முடியலை. எப்பவுமே ஒருத்தர் இவர்கூடவே இருந்து கவனிச்சுக்கணும். சரி, வேற யாரையாவது வச்சு தண்ணீர் சப்ளைய கவனிக்கலாம்னு நினைச்சோம். யாருமே சரிபட்டு வரலை. வர்றவங்க எல்லாம் பொறுப்பா நடந்துக்கலை. கஸ்டமருங்க கிட்டே இருந்து தொடர்ந்து கம்ப்ளெயிண்ட் வந்துட்டே இருந்துச்சு” என்கிற அமுதா, கணவரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தையல் வேலையையும் அப்போது தொடர முடியாமல் இருந்திருக்கிறார்.

குடும்பத்தை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற உத்வேகம் சந்திரனை மூன்றே மாதங்களில் எழுந்து உட்கார வைத்திருக்கிறது. “அவரால சரியா நிக்கக்கூட முடியலை. இருந்தாலும் வலியைப் பொறுத்துக்கிட்டு எழுந்துட்டார். ‘என்னால காலை அழுத்தி கிளட்சை மிதிக்க முடியாது. நான் சொல்லித் தர்றேன். அந்த மாதிரி நீ செய். ஸ்டியரிங்கை நான் பார்த்துக்கறேன்’னு சொன்னார். அவரே இவ்ளோ நம்பிக்கையா சொல்லும்போது நான் மறுக்க முடியுமா? அவரோட சேர்ந்து லோடு வேனில் உட்கார்ந்தேன். அவர் சொல்லித் தர, தட்டுத் தடுமாறி ஓரளவுக்கு சமாளிச்சேன். கொஞ்ச நாள்ல, ‘நீயே நல்லா ஓட்டுறீயே. தனியா ஓட்டேன்’னு சொன்னார். அடுத்தவங்களை நம்பி இருக்கறதைவிட நம்ம வேலையை நாமளே செய்யலாம்னு தோணுச்சு. அன்னைக்கு ஸ்டியரிங் புடிச்சேன். இன்னைக்கு வரைக்கும் இந்த வண்டி ஓடிக்கிட்டுதான் இருக்கு” என்று சொல்லும் அமுதாவின் வார்த்தைகளில் வெற்றிப் பெருமிதம்.

உத்வேகம் தந்த பாராட்டு

பல்லாவரம், திரிசூலம், கீழ்க்கட்டளை பகுதிகளில் இருக்கும் கடைகளுக்கு அமுதாதான் தண்ணீர் விநியோகம் செய்கிறார். ஆண்களே நிறைந்திருக்கும் இந்தத் துறையில் பெண்ணாக இருப்பதன் சிக்கல்களையும் சமாளித்து மீண்டிருக்கிறார்.

“ஆரம்பத்துல சிலர் கிண்டல் பண்ணாங்க. ஆனா சிலர் பாராட்டவும் செஞ்சாங்க. நான் கிண்டலை ஒதுக்கினேன். பாராட்டை ஏத்துக்கிட்டேன். ‘எப்படிம்மா உன்னால இவ்ளோ கஷ்டத்தைச் சமாளிக்க முடியுது? நான் வீட்ல சோர்ந்து படுத்துட்டா உன்னைதான் நினைச்சுக்குவேன். அந்தப் பொண்ணு அவ்ளோ திறமையா இருக்கும்போது நாம மட்டும் இப்படி இருக்கலாமான்னு தோணும். அடுத்த நிமிஷமே வண்டியெடுத்துவேன்’னு ஒரு அண்ணன் சொன்னாரு. ஒரு அம்மா, அவங்க பையன் என்னைப் பார்த்துட்டுத்தான் தண்ணீர் சப்ளை பண்ற வேலையைச் செய்யறான்னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. நம்மளைப் பார்த்து நாலு பேர் வேலை செய்யறாங்கன்னா அதைவிட வேறென்ன வேணும்?” என்று கேட்கும் அமுதா, ஒருநாள் கூட வேலைக்கு விடுமுறை விட்டதே இல்லை. தொழிலுக்கு முக்கியம் நேரம் தவறாமையும் நேர்மையும்தான் என்கிறார்.

“நான் ரோட்ல வண்டி ஓட்டிட்டு வந்தா சிலர் லேடீஸ் ஓட்றாங்கப்பான்னு மரியாதையா ஒதுங்கி வழிவிடுவாங்க. சிலர் பயமுறுத்தற மாதிரி வண்டியை ஒடைச்சு ஓட்டுவாங்க. அப்போல்லாம் கொஞ்சம் பயமா இருக்கும். ஆனா அதை வெளிய காட்டிக்காம நிதானமாதான் வண்டி ஓட்டுவேன். ஆரம்பத்துல வண்டி ஓட்டும்போது பயங்கரமா முதுகு வலிக்கும். கேன்களை ஏத்தி, இறக்குறதுல கையெல்லாம் வலி எடுக்கும். இப்போ எல்லாமே பழகிப் போச்சு. என்னைவிட இதுல என் கணவருக்குத்தான் ரொம்பப் பெருமை. எப்படிம்மா வண்டியை எங்கேயும் இடிக்காம இந்தச் சின்ன சந்துல ரிவர்ஸ் எடுக்கறேன்னு அவரே பாராட்டுவாரு” என்று சொல்லும்போது கண்களில் மகிழ்ச்சி மின்னுகிறது அமுதாவுக்கு.

தெளிவு தரும் நம்பிக்கை

தான் ஒரு பெண் என்பதாலேயே வாடிக்கையாளர்களை மிக கவனமாக அணுக வேண்டியதன் அவசியத்தையும் அமுதா புரிந்து வைத்திருக்கிறார்.

“எல்லாமே நாம நடந்துக்கற விதத்துலதான் இருக்கு. யாரையும் முறைச்சுக்கணும்னு அவசியம் இல்லை. எங்கே பேசணுமோ அங்கே பேசணும். எங்கே நிறுத்தணுமோ அங்கே நிறுத்தணும். அப்படி இருந்துட்டா நம்மளை ஒருத்தர் விரல் நீட்டிப் பேச முடியாது” என்று பட்டுக் கத்தரித்தாற்போல் சொல்கிறார் அமுதா. இந்தத் தெளிவுதான் அவருக்கு அதிக வாடிக்கையாளர்களையும் அதைவிட அதிக மரியாதையையும் பெற்றுத் தந்திருக்கிறது.
அமுதாதண்ணீர் கேன்பல்லாவரம் அமுதாபாராட்டு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x